இலங்கை : 2010 பொதுத் தேர்தல் -மகிந்த

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். அடுத்த வருடம் நடுப் பகுதியில் மீதமுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்காக தற்போதிருந்தே தயாராகுமாறும் அவர் அமைப்பாளர்களிடம் கேட்டுள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த வருடம் மகிந்த ராஜபக்ஸ பதவியேற்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2010 ஆம் ஆண்டில் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் தேர்தல் ஒன்று நடத்தப்பட முன்னர் இந்த முறை சமர்பிக்கப்படும் வரவுசெலவு திட்டத்தில் மக்களுக்கான பல நிவாரணங்கள் அறிவிக்கப்படலாம் என கருத்தப்படுகிறது. இதனடிப்படையில் அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் 300 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.