இலங்கை வளர்ச்சிப்பணிக்காக இந்திய ஒருங்கிணைப்புக் குழு.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்தியா மேற்கொள்கிறது. முன்னதாக நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வியாழக்கிழமை தில்லி திரும்பினார். நாடு திரும்பும் முன்னர் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிக்கவும், முறையாக நடைமுறைப்படுத்தவும் மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் இந்தக் குழு விரைவில் அமைக்கப்படுமென இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், ரயில் பாதைகள், அனல் மின்நிலையம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது. இப்பணிகள் அனைத்தையும் மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு கண்காணிக்கும். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும் இதுபோன்ற ஒரு குழுவை இந்தியா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.