இலங்கை ஜனநாயகத்திற்கு வாழ்த்துக்கள் ! : சபா நாவலன்

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்ட அடுத்த கணம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். இந்திய ஜனாதிபதி, ஐரோப்பிய ஒன்றியம், அமரிக்கா என்று அத்தனை அதிகார மையங்களும் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றன. ஐம்பதாயிரம் மக்கள் சாரிசாரியாகச் சாகடிக்கப்பட்டதைப் பார்த்துக்கொண்டிருந்த அதே அதிகாரம் வாழ்த்தியிருப்பது ராஜபக்சவை மட்டுமல்ல அவரின் அரசியலில் பதுங்கியிருக்கும் பேரினவாதத்தையும், குடும்ப சர்வாதிகாரத்தையும், ஊழலையும், முறைகேடுகளையும், பாசிசத்தையும், கொலை வெறியையும் சேர்த்துத் தான் வாழ்த்தியிருக்கின்றன.

இவை எல்லாவற்றின் மீது குந்தியிருந்து தமது தன்மானத்தைக்கூடத் துச்சமென மதித்து ராஜபக்சவின் வெற்றிக்காக இரவு பகலென்று பாராது உழைத்தொழிந்த ராஜேஸ் பாலா, ஜனநாயக முன்னணிப் பிரமுகர் ரங்கன், கங்காதரன் போன்ற இன்னோரன்ன புகலிடப் பிரமுகர்களுக்கும், வட அமரிக்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று பேயர் சூட்டிக்கொண்ட கோரமான கோமாளி அமைப்புக்களுக்கும் இந்த அதிகாரங்களின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

மகிந்த சிந்தனையின் தமிழ் மொழி பெயர்ப்பான டக்ளஸ் தேவானத்தாவிற்கு இந்த வாழ்த்துக்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.வாக்கு அரசியலுக்கு வந்த நாளிலிருந்தே அத்தனை பேரினவாத அரசுகளிடமும் “ஆசியும் வாழ்த்தும்” பெற்ற அரசியல் பழம் அவர். யாழ்ப்பாண ஊடகங்களே, மகிந்த வாக்குகள் பெற முடியாமல் போனமைக்குக் காரணம் என்று மகிந்த சிந்தனையின் ஊடகப் பரிமாணத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் டக்ளஸ். இவர் நடத்திய பகிஸ்கரிப்பு நாடகமும் பிசுபிசுத்துப் போக, புதிய மகிந்த விசுவாசிகளுடன் போட்டிபோட முடியாமல் துவண்டு போயுள்ள இவருக்கும் இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

தாம் சார்ந்த இனத்தின் மீது எந்த அரசுகளின் ஆசீர்வாதத்தோடு மகிந்த சிந்தனை இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளதோ அதே அரசுகளின் வாழ்த்துக்களுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் “வாக்கு” வியாபாரம் நடத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவினருக்கும் இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

புலிகளுக்கே பூச்சாண்டி காட்டிவிட்டு இலங்கை அரசின் பாசிசக் கோட்டைக்குள் வலம் வந்து கொண்டிருக்கும் கே.பி ஆரம்பித்துவைத்த நாடுகடந்த தமிழீழக் குழுவினருக்கும் இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இவர்கள் அனைவரும் இரண்டு பொதுப் புள்ளிகளில் சந்திக்கிறார்கள்; முதலில் இவர்கள் அரசியலில் சம்பாத்தித்துக் கொண்டது புலிகளைச் காரணம் காட்டியே!, இரண்டாவதாக இவரகள் அனைவருமே தமிழ்ப் பேசும் மக்களின் நீண்டகால எதிரிகள்.

மகிந்த அரசின் சர்வாதிகாரமும், பாசிசமும் அனைத்து முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு தனியாட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வழமைக்கு மாறாக ஒன்றரை மணி நேரங்கள் தாமதமாக சொர்ணவாகினி தொலைக்காட்சியில் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்டது. “பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வாக்குப்பெட்டிகளை காப்பாற்ற முடியாமல் இருந்தோம். இது மிகவும் பிழையான வழிமுறையாகும். இந்தநிலையில்,நான் மிகவும் கஸ்டமான முறையிலேயே பணியாற்ற முடிந்தது. நான் மன அழுததங்களுக்கு உள்ளாகியிருக்கிறேன்”. என்று வெளிப்படையாக தனது உரையில் கூறியவர் தேர்தல் ஆணையாளர்.

இதற்கு முன்னதாகக் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்று அறியப்படாத நிலை. மூன்று இணைய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டுவிடன. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்தனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சினமன் விடுதியில் இராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்தன. வாழ்த்துச் சொன்ன அத்தனை நாடுகளும் மூச்சுக்கூட விடவில்லை. இத்தனைக்கும் மத்தியில் தமது உயிருக்காக அஞ்சாது இப்படி ஒரு இறுதி நேர முடிவைத் தேர்தல் ஆணையாளர் அறிவிக்க முடியுமாயின், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்வது அத்தனை கடினமானதல்லை. அவர் எவ்வளவு மிரட்டப்படிருந்திருப்பார் என்பது வெளிப்படையானதே. சில்லறை முறை கேடுகளுக்காக அரச பயங்கரவாதிகளிடம் உயிரை பணயம் வைக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்திருக்காது.

57.8 வீதமான வாக்குகளைப் பெற்றதாக மார்தட்டிக்கொள்ளும் மகிந்த குடும்பத்தினருக்கு தேர்தல் ஆணையாலரை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதெல்லாம் பெரிய சிக்கலான அரசியல் சமன்பாடுகள் இல்லை. தேர்தல் வெற்றி தட்டிப்பறிக்கப்படுள்ளது என்பதும் அதுவும் இதுவரை நிகழ்ந்திராத பாரிய மோசடியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதும் சிக்கலற்ற உண்மைகள்.

இந்தத் தேர்தல் முறைகேடுகளும், மோசடிகளும், திருட்டும் கண்களுக்கு படாத இந்திய அரசு மகிந்த அரசிற்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்ததும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமரிக்கா என்ற அனைத்து அதிகார மையங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை அரசின் ஜனநாயகத்தை வாயார வாழ்த்தின.

இந்த நாடுகள் இலங்கை மக்கள், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் இதுவரை உணர மறுத்த ஒரு விடயத்தை வன்னிப் படுகொலைகளின் பின்னர் இன்று மறுபடி அறைந்து சொல்லியிருக்கின்றன. ” நாங்கள் உங்களை அடக்குபவர்களின் பக்கத்தைச் சார்ந்தவர்கள்; எங்களை நம்பவேண்டாம்” என்பதே அது. மக்களை அரசியல் மயப்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள். மக்களுக்குத் தாங்கள் யார் என்பதைக் கூறி அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனல், புலம்பெயர் “வட்டுக்கோட்டைகளும், நாடு கடந்ததவர்களும்” பாடம்கற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மறுபடி தமது வியாபரத்தைச் திட்டமிட்டுக்கொள்ள மக்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மக்களைப் பணயம் வைத்து நடந்த அரசியல் பந்தயத்தில் ஆசியப் பொருளாதாரத்தின் தென்பகுதித் தலைமை நாடான இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. தான் தெற்காசியாவின் பலம் மிக்க துருவ வல்லரசு என இலங்கையில் நிறுவியிருக்கிறது.சரிந்து கொண்டிருக்கும் உற்பத்தித் திறனற்ற ஐரோப்பியப் பொருளாதாரம் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு தெற்காசியாவில் காலூன்ற முடியாது என்பதை இந்தியா இன்னொருமுறை கூறியிருக்கிறது. இதற்கு எத்தனை மனிதப் பிணங்களையும் விலைகொடுக்க இந்தியா தயாராக உள்ளது.

நடத்தி முடிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் சில உடனடி விளைவுகளைத் தோற்றுவித்துள்ளது :

முதலாவதாக, முப்பது வருடங்களின் பின்னர் புலிகளைக் காட்டி சிங்கள மக்களைப் பயமுறுத்த முடியாத நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசின் பாசிசம் பெரும்பான்மைச் சிங்கள மக்களை நேரடியாகத் தாக்க ஆரம்பித்துள்ளது. அவர்கள் ஏமற்றப்பட்டதை எந்தப் புறக் காரணிகளின் செல்வாக்குமின்றி உணர்ந்துள்ளனர்.

இரண்டாவதாக அபிவிருத்தியும் அழகான தெருக்களுக்கும் அப்பால், தனுரிமை என்பதன் அவசியத்தை வட கிழக்கு மக்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மூன்றாவதாக இலங்கையில் பிரசாரம் செய்யப்படுகின்ற பாராளுமன்ற ஜனநாயகம் தமது வாழ்வுரிமைக்கானது அல்ல என இந்த இரண்டு பகுதியினருமே உணர ஆரம்பித்துள்ளனர்.

இந்த மூன்று விளைவுகளினதும் சந்திப்பில் தான் நிலை மாற்று அரசியல் நிலை கொண்டுள்ளது. தேர்தலின் பின்னான சிங்கள மக்கள் மத்தியிலான எதிர்ப்புணர்வை அணிதிரட்டுவதில் ஒப்பீட்ட்ளவில் ஜே.வீ.பீ மட்டுமே முனைப்புக் காட்டுவதாகத் தெரிகிறது. இதற்கு அப்பால் ஒரு மூன்றவது இடது சாரித் தலைமை மக்களை வழி நடத்துமானால் தெற்காசியாவில் சீர் குலைந்து வரும் பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தூக்கியெறியும் முதல் நாடாக இலங்கை அமைய முடியும்.

இந்த உணர்வுகளை தமக்கு இசைவாகப் பயன்படுத்திக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மத்தியிலும் புதிய அரசியலை முன்வைப்போமானால் அந்த அரசியல் இயக்கத்திற்கு அதிகார மையங்கள் வாழ்த்துத் தெரிவிக்காது. மக்கள் நிச்சயமாக வாழ்த்துவார்கள்.

13 thoughts on “இலங்கை ஜனநாயகத்திற்கு வாழ்த்துக்கள் ! : சபா நாவலன்”

 1. புலம் பெயர்ந்த மண்ணீல் வாக்கு வியாபாரமேநடக்கிறது. வணக்கம் நன்றீ எல்லாம் கை தட்டவே அவைநம் கை பிடித்து உதவாது.மகிந்தாவையும் வாழ்த்தும் சரத் பொன்செகாவுக்கு வாக்குறீதியும் கொடுக்கும்.பங்குடமையில் வரும் சமன்பாடு போன்றதே இது. இந்த கோமாளீக் கூட்டங்களூக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் தேவை அதற்காக் அவை யாருக்கும் காவடி எடுப்பர்.யார் பதவிக்கு வருகிறார்களோ அவர்களூக்கெல்லாம் இவை காவடி எடுப்பர்.எரிகிற கொள்ளீயில் எண்னெய் தேடுகிற உலகிது.எனது எண்ணம் புலம் பெயர்ந்த தமிழி தாயகத்தில் வாழும் மக்களூக்கு எவ்வாருநம்பிக்கையாய் மாறூவது?

 2. “புலம்பெயர் “வட்டுக்கோட்டைகளும், நாடு கடந்ததவர்களும்” பாடம்கற்றுக்கொள்ள மறுக்கின்றனர்”. “புதிய அரசியலை முன்வைப்போமானால்”

  உங்கள் ஆலோசனை என்ன என்று எனக்கு விளங்கவில்லை. எப்படியான புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டுமென்று சொல்கிறீர்கள். இனியும் ஒரு புதிய அரசியல் உண்டா?

  1. இந்த தளத்தின் மூலம் விவாதங்கள் இல்லாது விடிவிற்கு வழிவகுக்க கைகொடுக்க எத்தணித்த ஒரு குழு இணைந்தாலே புதிய அரசியல் ஆரம்பமானதாக கருத முடியும். இருக்கிறது போராட்டத்தில் எப்படி புது உத்திகள் இருக்கின்றதோ அது போல அரசியலிலும் பல புது வழிகள் இருக்கின்றது!!! அதன் வழிகளை இணையத்தின் மூலம் விவாதிப்பது முறையல்ல… இதில் எழுத்துத்திறனைக்காட்டுவதிலும் பார்க்க இழப்புகளுக்கு பெருகூச்சு விட முடியும். அவ்வளவுதான்.!!! இந்த இணைய ஆசிரியர்களுக்குப்பாராட்டுக்கள்… இவற்றை வாசிக்கும் போது மனதில் இருந்த பாரங்கள் கொஞ்சம் அசையத் தொடங்குகின்றது… கண்கள் கலங்கி மெல்ல பழைய நினைவுகள் நெஞ்சை நிமித்துகின்றது. கண்மூடித்திறந்ததும் கடந்த நிகழ்வுகளையெல்லாம் ஒரு நொடிக்குள் திருப்பிக்காட்டுகின்றது.. ம்… நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி … தொடரட்டும் விமர்சன அலைகள். அன்பன் அருகன்.

  1. rajesh bala free thinking writer.the meaning is clear to those who know her well

 3. அருகன் இருபதாம்நூற்றாண்டின் இடையன் இனையம் இங்கே விவாதிக்காது போனால் எங்கும் விவாதுக்கமுடியாது.பாரங்கலை இறக்கி வைக்கிற கோயிலில் வந்தும் வேதனையோடுநினறால் வேறூ எங்குதான் போவது?

 4. ஒன்று பட்ட இலங்கை பேசும் உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜ பச்சேவுக்கும்,பொன்சேகாவுக்கும் விழுந்த சிங்கள ஓட்டுக்களில் எத்தனை ஓட்டுக்கள் இனப்படுகொலைக்கு எதிரானவை என்று கூற முடியுமா? இருவருக்கும் விழுந்த சிங்கள ஓட்டுக்கள் தமிழ் இனப்படுகொலைக்கான சிங்கள மக்களின் அங்கீகாரம் என்பதை மறுக்கமுடியுமா? உயிருக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் இனத்தையும்,அவர்களை விரட்டி விரட்டி அழித்துக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு தமது 99 சதவீத ஓட்டுக்களை ங்கிஆதரிக்கும் சிங்கள இனத்தையும் ஒன்றுபட்ட மக்களாக பார்க்கும் உங்கள் பார்வைத்திறன் வியக்கத்தக்கது. சாதாரண முதலாளித்துவ சனநாயகத்திற்க்கே வக்கில்லாத, வழியில்லாத ஒரு ஒடுக்கும் பேரினத்தை புரட்சிகர இனமாக மாற்றத் துடிக்கும் உங்களின் புரட்சிப் பேரார்வத்திர்க்கு எனது வாழ்த்துக்கள்.நன்றி-பிரபாகரன்.

 5. பிரபா,
  நான் ஒன்றுபட்ட இலங்கை பேசுவதாக உங்களை யாரோ ஏமாற்றியுள்ளார்கள்!

  1. ஓன்றுபட்ட இலங்கை பற்றீப் பேசினால் தான் தவறென்ன?
   நாம் வெறுப்பது இன ஒடுக்கலை அன்றி இனங்களை அல்லவே!
   ஒன்றுபடல் என்பது அடிமைத்தனமான இணைதல் அல்ல. சமத்துவமான இணைதல் அல்லவா.
   இன்றைய ஆட்சி யாளர்களும் பிற பேரினவாதிகளும் சிஙள மக்களின் எதிரிகளும் தான்.

   1. பாவம் சிங்கள மக்கள்! அவர்களுக்கும் நாம் தமிழர் தானா விடுதலை பெற்றுக்கொடுக்கவேண்டும்?

   2. எல்லார் விடுதலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கின்றன. இதை விளங்கிக் கொள்ளத் தவறியதாலேயேநாம் தனிமைப்பட்டுப் போனோம்

 6. எல்லார் விடுதலையும் எல்லார் பிரச்சனைகளூம் ஒன்றூ போல் தோன்றீனாலும் அடிப்படையில் மாறூபட்டவை.இதற்கான தீர்வுகள் வேறானவை.ஆனால் அடுத்தவர்களீன் பிரச்சனைகலை புரிந்து கொண்டு அவர்கள் தேவைகளீல் பங்கெடுக்கும் போதெ புரிதல் தொடங்கி விடுகிறது இந்தப் புரிதல் எம்மை எதிரியோடும்நண்பனாக்குகிறது.எல்லோருமேநண்பர்கள் ஆகும் போது வேறூபாடுகள் மரைகின்றன/

Comments are closed.