இலங்கை சிங்களவர்களுக்கே உரியது : ராணுவத் தளபதி

தமிழ் சிறுபான்மையினரினால் நாடு துண்டாடப்படுவதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
சிறுபான்மை மக்கள் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் முன்னெடுக்கும் யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கனடாவிலிருந்து வெளியாகும் தி நெசனல் போஸ்ட் என்ற ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
இந்த நாடு சிங்களவர்களுக்கே உரிமையானது என்பதில் சந்தேகம் இல்லை எனவும், சிறுபான்மை மக்களையும் இந்த மண்ணின் மைந்தர்களாகவே நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டில் 75 வீதமான சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த நடவடிக்கைகளின் போது சிவிலியன்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது எனவும், மிகவும் குறைந்தளவு சிவிலியன்களே யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் குரல் கொடுப்பது போன்று படையினர் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான ஆளணித் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் 8000 விடுதலைப் புலி உறுப்பினர்களும், கிழக்கில் 2000 உறுப்பினர்களும், விமானபடைத் தாக்குதல்களின் மூலம் 1000 உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இராணுவ வட்டாரத் தகவல்களுக்கு அமைய மேலும் 4000 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாகவும், சுமார் 250,000 அரச படையினரும் பாரியளவிலான ஆயுதங்களும் கைவசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் காட்டுப் பகுதிகளில் புதைக்கப் பட்டிருக்கும் கண்ணி வெடிகளை முற்றாக அகற்றுவதற்கு இன்னமும் 20 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பூரணமாக நாடு விடுதலைப் பெறும் வரையில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் நான்காவது ஈழப்போர் பற்றி அதீதமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி அடுத்த வாரமளவில் கைப்பற்றப்படும் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 

6 thoughts on “இலங்கை சிங்களவர்களுக்கே உரியது : ராணுவத் தளபதி”

 1. பிரபாகரன் தமிழ்ஈழம் கேட்கிறார்
  தமிழ் மக்கள் மாகாணசுயாட்சி கேட்கிறார்கள். ஐக்கியப்பட்ட இலங்கையே
  தமிழ்-முஸ்லீமக்கள் விரும்புகிறார்கள்.மத்தியில் கூட்டாச்சி ஐக்கியத்திற்கான உருவாக்கமே!
  காலத்திற்கு காலம் இனக்கலவரங்களை தோற்றிவித்தவர்களும் இந்த சிங்களதலைவர்களே!
  கடந்த முப்பதுவருடங்கள் நாடு சின்னாபின்னபட்டு போனதிற்கு முழுமையாக புலிகளை குற்றம்சாட்டி நீங்கள் தப்பிப்போகமுடியாது.உங்கள் மமதையான போக்கே இந்த இலங்கைத்தீவை சீர்ரழிவுக்கு கொண்டுவந்தது.எல்லா இனங்களும் எல்லாமதங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான வழியை காலம்தாழ்தாது கண்டு பிடியுங்கள்.மாகாணங்களுக்கு
  அதிகாரங்களை பகிர்ந்தளியுங்கள்.இலங்கை அரசியல் வரலாற்றில் மாகாணங்களுக்கான
  சுயயாட்சியும் மத்தியில் கூட்டாச்சியும் பிரிக்கமுடியாத விதியாகிவிட்டது.எவ்விதத்திலும்
  இந்தியாவையும் நட்புறவுடன் என்நேரத்திலும் அணுகமுடியும்.
  இது எம்கண்முன்னால் தெரியும் சுமூகமானதீர்வு.

 2. சந்திரன் ராஜா,
  சிறீ லங்கா அரசாங்கத்தின் அடியாள் போல எழுதி வந்த நீங்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

 3. ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாளில் தேசியத் தலைவர் பங்கேற்பு
  [ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 12:47.17 PM GMT +05:30 ] [ புதினம் ]
  ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
  ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரினது நினைவு நாள் நிகழ்வு பிரேத்தியமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.

  இந்நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு இம் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி, மலர் மாலைகளைச் சூட்டி வணக்கம் செலுத்தினார்.

  நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

 4. விடுதலைபுலிகள் தோற்றுக்கொண்டிருப்பதை படம்பிடித்துக்காட்டிய பதிவுக்கு நன்றி

 5. ஒரு இராணுவத்தளபதின் பேச்சைக்கேட்டு அவரை சிங்களமக்களின்
  குரலாகவும் ஜனாதிபதியின் குரலாகவும் கற்பனை செய்கிற உங்களுக்கு
  நான் என்னத்தை சொல்லமுடியும்.
  ஜாமால்; நீங்கள் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்களை கெடுத்த பத்தில்லிருந்து பதினொராவது
  புலி.

 6. சந்திரன் ராஜா,
  ஒருபக்கம் புலி, மறுபக்கம் கொல்லும் ராணுவம் இன்னொருபக்கம் உங்களைப்போல அரசங்க பேரினவாத அடிவருடிகள்…
  பாவம் மக்கள்!

Comments are closed.