இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரித்தானது : முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு:

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய பத்திரிகையென்றுக்கு அளித்த செவ்வி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளது.
 
சிறுபான்மையினரை உதாசீனம் செய்யும் வகையில் இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் வேதனையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடக அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரித்தானது என்ற சரத் பொன்சேகாவின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
இனரீதியான காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களை நாட்டின் இராணுவத் தளபதி என்ற ரீதியில் வெளியிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையின் தேசிப் பிரச்சினை தீர்மானமிக்கதொரு கட்டத்தை எட்டியிருக்கும் தருணத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கை பாதுகாப்பு சேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் உயிர்த் தியாகங்களை மேற்கொண்ட தமிழ் முஸ்லிம்கள் இந்தக் கூற்றின் மூலம் கேவலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சாதாரண தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவு பங்களிப்பு நல்கியிருப்பதனை எவரும் மறந்துவிடக் கூடாதென ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
 
சிங்களவர்களுக்கு நிகரான உரிமைகளை சிறுபான்மையினர் அனுபவிக்க தகுதியற்றவர்கள் என்ற கருத்து பொறுப்புணர்ச்சியற்ற வகையில் வெளியிடப்பட்டதொன்றாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இராணுவத் தளபதி ஒருவர் அரசியல் ரீதியான கூற்றுக்களை வெளியிடுவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கக் கூடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடக அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.