இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது:மன்மோகன் சிங்.

15.10.2008.

இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை தீர்வாகாது

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.