இலங்கை அரசு பதிலளிக்கும் வரை இலங்கைக்கு கடன் வழங்கக்கூடாது:HRW

மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசு பதிலளிக்கும் வரையில் , அந்த நாட்டுக்கு அனைத்துலக நாணய நிதியம் கடன் உதவிகள் எதனையும் வழங்கக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

போருக்குப் பின்னரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையில், உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

போர் முடிவடைந்த பின்னரும் 2 லட்சத்து 80 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலேயே வைத்திருக்கின்றது. இந்த முகாம்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு ஊடகங்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அனைத்துலக நாயண நிதியம் சிறிலங்காவுக்கு கடன் வழங்குமானால் அது அந்த நாட்டு அரசின் தவறான செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் சன்மானமாகவே இருக்க முடியும்.சிறிலங்கா அரசின் தற்போதைய அணுகுமுறையானது அனைத்துலக நாணய நிதியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புறக்கணிப்பதாகவே அமைந்திருக்கின்றது.

சிறிலங்கா அரசானது மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் என்பனவற்றுக்கு மதிப்பளித்துச் செயற்படுவதற்குத் தவறிவிட்டது” எனவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.