இலங்கை அரசு உத்தரவு மக்களை மேலும் அபாயகரமான நிலைமைக்கு தள்ளிவிடும் :சர்வதேச மன்னிப்பு சபை .

11.09.2008.

வன்னியிலிருந்து ஐ.நா. முகவரமைப்புகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை மேலும் அபாயகரமான நிலைமைக்கு தள்ளிவிடுமெனவும் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது.

சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் வாபஸ் பெறுவதானது தமது நிலைமையை மேலும் மோசமானதாக்குமென சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டை சேர்ந்த அலுவலர்கள் அஞ்சுகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவிடாது புலிகள் தடுத்திருப்பதாக நம்பகரமான அறிக்கைகள் சர்வதேச மன்னிப்பு சபைக்கு கிடைத்துள்ளன.

புதிதாக இடம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்தும் புலிகள் ஆட்களை திரட்டுகின்றனர்.

“மோதலில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிற்கு உயிர் வாழ்வாதாரத்தை உதவி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அப்பகுதியிலிருந்து நிவாரணப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டால் உணவு, தங்குமிடம், சுகாதார நடவடிக்கைகளுக்கான விநியோகம் என்பன இழக்கப்பட்டுவிடும்’ என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்திருக்கிறார்.

அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்களால் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்போரின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கான ஆற்றல் அரசிடம் பற்றாக்குறையாக இருப்பதாக தாங்கள் அஞ்சுவதாக வன்னியிலுள்ள நிவாரணப் பணியாளர்கள் சர்வதேச மன்னிப்பு சபையிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

உலக உணவுத் திட்டம் உட்பட 7 சர்வதேச உதவி அமைப்புகள் வன்னியிலுள்ள மக்களுக்கு அவசரமாக தேவைப்படும் உணவு நிவாரணத்தை வழங்கி வருகின்றன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை உறுதிப்படுத்துவதற்கான சகல பொறுப்பையும் இலங்கை அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. நிவாரணப் பணியாளர்களை வெளியேறுமாறு கூறும் அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு பாதுகாப்பும் உணவும் அளிக்க வேண்டிய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று சாம் ஷரிபி கூறியுள்ளார்.

அதேசமயம், வன்னிப்பகுதிக்கு உணவு, மருந்து, மற்றும் இதர அத்தியாவசிய விநியோகங்கள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும் கண்காணிக்கவும் சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்களை மேற்பார்வை செய்வதற்கு அனுமதிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், இந்தப் பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வை செய்யவும் சர்வதேச சுயாதீனக் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென மன்னிப்பு சபை கேட்டுள்ளது.

“எந்தவொரு பாரபட்சமுமின்றி உதவி தேவைப்படுவோருக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு உதவி புரிய சுயாதீன கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமாகும்.

பிராந்தியத்தில் சுயாதீனமான கண்காணிப்பாளர்கள் இல்லாவிடில் எந்தவொரு இழப்புகள் குறித்தும் தகவல்கள் முழுமையாக கிடைக்காத வெற்றிடம் தோன்றும்’ என்றும் சாம் ஷரிபி கூறியுள்ளார்.

வன்னியிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் “மனிதாபிமான வழிகளை’ ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஓமந்தை சாவடியூடாக மட்டுமே கட்டுப்பாடின்றி அவர்கள் வருவதற்கான பாதை இருப்பதாக அறிக்கைகள் கிடைத்திருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

இந்த மனிதாபிமானப் பாதைகள் எங்குள்ளன என்பது பற்றியும் எவ்வாறு அப்பாதைகளுக்கு செல்வது என்பது குறித்தும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பது சர்வதேச சட்டம் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.