“இலங்கை அரசின் கருத்துகள் எப்போது ஒரே மாதிரியாக வருகிறதோ அப்போது தான் மீள்குடியமர்வு சாத்தியமாகும்”.

 

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக் களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி யாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப் பிடிக்கும் திட்டமும் சரி, அதன் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், கருத்துகளும் சரி குழப்பமானதாகவே உள்ளன. இது சர்வதேச சமூகத்தையும், பொதுமக் களையும் திருப்திப்படுத்துவதாக அமைய வில்லை என்பதே உண்மை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் 180 நாட்களுக்குள், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தப் போவதாக அறிவித்தது. இந்த 180 நாள் வேலைத்திட்டத்தின் மூன் றில் ஒரு பங்கு காலம் ஏற்கனவே முடிந்து விட்ட போதும் மீள்குடியமர்வு பற்றிய எந்த உறுதியான முடிவுகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தக் காலப்பகுதியில் இரண்டு கட்டங்களாக குடியமர்த்தப்பட்டவர்கள் இடம்பெயர்ந் துள்ள மக்கள் தொகையில் இரண்டு வீதம் கூட இல்லை. சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளி யிட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக் வெலவன்னியில் காடுகளில் மறைந்திருக்கும் புலிகளை முற்றாக தேடிஅழித்த பின்னரே மீள் குடியமர்வு ஆரம்பமாகும் என்று கூறியிருந் தார். அதேவேளை, மற்றொரு சந்தர்ப்பத்தில் வன்னியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி கள் முற்றாக அகற்றப்பட்ட பின்னரே மீள்குடி யமர்வு சாத்தியமாகும் என்று கூறியது அரசாங்கம்.

அதேவேளை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளை கைது செய்து அவர்களை வேரறுக்கும் வரையில் அகதிகளை மீள்குடியேற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளார். இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான குழப்பமான தகவல்களையே அரசாங்கம் சொல்லி வருகிறது. இதற்கிடையே இந்தியா, ஐ.நா.சபை மற்றும் பல்வேறு உதவி வழங்கும் நாடுகளும் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வை வலியுறுத்தி வருவதுடன் அரசுக்கு நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வருகின்றன.

அதாவது நிதியுதவி கேட்டு கையேந்தி நிற்கும் இலங்கை அரசிடம் இந்த விவ காரத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன. அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷவும் கோத்தாபய ராஜபக்ஷவும் 180 நாட்களுக்குள் மீள் குடியமர்வு இடம்பெற்று விடும் என்று உறுதி யளித்திருந்தனர்.அதுபோன்றே தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் பங்கேற்றபோது இலங்கை வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கூறுகையில் 180 நாட்களுக்குள் பெரும்பாலான மக்கள் மீளக்குடிய மர்த்தப்பட்டு விடுவார் கள் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் இந்த 180 நாட்கள் என்பது நிச்சயமாக வாக்குறுதியல்ல என்பது தான் பிரச்சினையே. அரசாங்கம் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்துடன் சொல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பதே உண்மை. அண்மையில் “ரைம்’ சஞ்சிகைக்கு அளித் திருந்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ “இடம்பெயர்ந்தோரை மீளக்குடிய மர்த்த 180 நாள் நிகழ்ச்சி நிரல் உள்ளது. அதுவே எமது திட்டம். இது வாக்குறுதியல்ல. இலக்கு மாத்திரமே. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் 60 வீத மானவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.’ என்று கூறியிருந்தார்.

அதாவது 180 நாட்கள் என்பது வாக்குறுதி யல்ல. ஓர் இலக்கு மட்டுமே என்பதை அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியது அதற்கு அப் பாலும் மீள்குடியமர்வு தாமதமடையலாம் என் பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.இந்த விடயத்தில் தான் அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் முரண் பாடுகள் தோன்றியிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்க ளுக்காக ஆரம்பத்தில் அரை நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு ஐ.நாவிடம் கேட்டிருந்தது.ஆனால் அது நிரந்த அகதி முகாம்களை உரு வாக்கி விடும் என்பதால் ஐ.நா அதற்கு இணங்கவில்லை. இதே கோரிக்கை அண்மையிலும் அரசதரப் பிடம் இருந்து விடுக்கப்பட்ட போதும் அதை யும் ஐ.நா நிராகரித்து விட்டது. இது இலங்கை அரசுக்கு அதிருப் தியை ஏற் படுத்தியிருந்தது.

தற்காலிக கொட்டகைகளில் இருக்கின்ற மக்கள் அடுத்து வரப் போகும் மாரி காலத்தில் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரி டும். தொற்று நோய்கள் பெருமள வில்பரவும்.தற்போது கூட தொற்றுநோய்கள் பற்றிய அச்சம் தரும் செய்திகளும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இதற்கும் ஐ.நாவே பொறுப்பு என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.”ஐ.நா போதிய மலசலகூடங் களை அமைக்க வில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த அரசாங்கத்தின் குடிமக்கள் என்ற வகையில் அவர்க ளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத் தின் கடமையே தவிர அதற்கு ஐ.நாவை பொறுப்புக் கூற முடியாது.இதற்கிடையே, இடம்பெயர்ந்துள்ள 3 இலட் சம் மக்களுக்கான உப உணவு கையிருப்புகள் அடுத்த மாதம் வரை மட்டுமே உள்ளதாக ஐ.நா.வின் மனிதாபி மான நடவடிக்கைகளுக் கான ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இது அச்சம் தரும் ஒரு தகவலாகும்.

அடுத்த மூன்று மாதகாலப் பகுதிக்குள் மக் களை மீளக்குடியமர்த்தப் போவதாக கடந்த மே மாதம் அரசாங்கம் ஐ.நாவுக்கு உறுதி அளித்திருந்த நிலையில் அதற்கேற்பவே முகாம்களுக்குச் செலவிடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதுவே இந்த நெருக்கடிக்கான காரணமாகும். இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்க ளுக்கு தேவையான அரிசி, பருப்பு, ரின்மீன், கோதுமை மா, காய்கறி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் என்பன உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படுகின்றன. இவை தவிர பால்மா, சீனி, காய்கறிகள், உப்பு, தேயிலை என்பனவற்றை அரச சார்பற்ற நிறுவனங்களே வழங்கி வருகின்றன. இந்த உணவுப்பொருட்களுக்கே பற்றாக்குறை ஏற்ப டும் நிலை தோன்றியிருக்கிறது.

இதுபற்றி அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ மாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் உப உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியாத அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறி யிருக்கிறார். இது இடம்பெயர்ந்தோர் குறித்த அரசாங்கத் தின் கொள்கை பற்றிய கேள்விகளை இன்னும் வலுப்படுத்துவதாக உள்ளது. இதற்கிடையே, “இடம்பெயர்ந்து முகாம்க ளில் வாழும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கண்ணிவெடிகளை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மீள்குடியமர்வைத் தாமதப்படுத்த கூடாது’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.

அதேவேளை ஐ.நாவின் தரப்பில் இருந்தும் நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. “விரைவில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தா விட்டால் சிக்கல் நிலைமைகள் உருவாகும்’ என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பெரும் தொகையான இடம்பெயர் மக்களுக்கு நீண்டகாலத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதென்பது முடியாத செயல். எனவே விரைவில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக தெளிவான திட்டமொன்றை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும் எனவும் அவர் ஐ.நா. கேட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இந்த விவகாரம் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைச் சார்ந்தே இலங்கையுடனான இந்திய உறவு அமையும் என்பதை மகிந்த ராஜபக்ஸவிடம் விளக்கிக் கூறியதாக’ இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். இது இந்தியாவும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டதென்பதற்கான சமிக்ஞையாகவே தெரிகிறது. ஆக, மீள்குடியமர்வு என்பது இலங்கை அரசின் தனிபட்ட பிரச்சினை என்பதில் இருந்து விலகி ஒரு சர்வதேச விவகாரமாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கமோ வன்னியில் பரந்தளவிலான இராணுவக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு முன்னர் மீள்குடியமர்வை விரும்பவில்லை. ஆனால் சர்வதேச நெருக்கடிகள் வலுவடைந்து வருவதாலும், வடக்கில் தேர்தல்களை நடத்த வேண்டியிருப்பதாலும் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்த வேண்டியசூழல் ஒன்று உருவாகி வருகிறது. ஆனால் இதுபற்றி தெளிவான கொள்கை ஒன்றை முன்வைக்க முடியாத நிலையிலேயே அரசு இருக்கிறது. இதனால் தான் அரச தரப்பில் இருந்து வெவ்வேறு விதமான கருத்துக்களும் அறிக்கைளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கருத்துகள் எப்போது ஒரே மாதிரியாக வருகிறதோ அப்போது தான் மீள்குடியமர்வு சாத்தியமாகும்.

Thanks:Thinakkural.