இலங்கை அரசாங்கத்தின் பழிவாங்கும் படலம்!:ஏ.பி. நிருபருக்கான விசாவை நீடிக்க மறுப்பு.

  
  
   சர்வதேச ஊடகமான ஏ.பி. எனப்படும் அசோசியேட்டற் பிறஸ் செய்தி நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கான விசா அனுமதியை நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
 
  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் தொடர்பாக தகவல்களை ஐ.நா. அதிகாரபூர்வமற்றற்ற முறையில் வெளியிட்டது.

அந்தத் தகவல்கள் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் மூலமாகவே ஏனைய செய்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகும்.

இலங்கை அரசாங்கத்திற்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்திய இந்தச் செய்திகளை வெளியிட்டதாக ஏ.பி. செய்தி நிறுவனத்தின் கொழும்புக்கான பிரதம அதிகாரி ரவி நெஸ்மான் மீது இலங்கை அரசாங்கம் அப்போது சீற்றமடைந்திருந்தது.

இந்நிலையிலேயே அவருக்கான விசா அனுமதியை நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் அரசாங்கப் படையினர் பிரவேசித்தபோது அங்கு பாரியளவில் பொதுமக்கள் உயிரிழந்தமை தொடர்பான செய்திகளை ஏ.பி. நிறுவனம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவந்தது.

பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டமைக்கு மேலதிகமாக, இடம்பெயர்ந்த மக்களை மூன்று வருடங்களுக்கு முகாம்களில் வைத்திருப்பதற்கு அரசு திட்டமிருக்கின்றது என்ற செய்தியையும் அரச ஆவணம் ஒன்றை ஆதாரமாகக் காட்டி ஏ.பி. நிறுவனமே முதல் தடவையாக வெளியிட்டிருந்தது.

2007ம் ஆண்டில் ஒரு வருடகாலத்துக்கு ஊடகத்துறையில் பணிபுரிவதற்கான விசா அனுமதியுடன் கொழும்பு வந்த ரவி நெஸ்மான், கடந்த வருடத்தில் அதனை மேலும் ஒரு வருடகாலத்துக்கு நீடித்துக்கொண்டார். இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் அந்த விசாவை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போது மறுத்துள்ளது.

எனினும், ரவியின் விசா அனுமதி நீடிப்பு மறுக்கப்பட்டமைக்கும் ஏ.பி. வெளியிட்ட செய்திகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இரண்டு வருட காலத்துக்கு மட்டுமே விசா அனுமதியை வழங்குவது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே ரவிக்கான விசாவை மூன்றாவது வருடத்துக்கும் நீடிப்பதற்கு தாம் மறுத்ததாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் மூன்று வருடத்துக்கும் மேலாக பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கொழும்பில் கடமையாற்றுவதை ஊடக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.