இலங்கை அனுபவம் : 40 ஆயிரம் படைகளோடு ஒரே மாதத்துள் மாவோயிஸ்டுகளை அழிக்கத் திட்டம்.

ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் 40,000 துணை இராணுவப் படையினரை இறக்கி, ஒரே மாதத்தில் அவர்களை ஒழித்துக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை, “மாவோயிஸ்டுகளின் பிடியில் உள்ள பகுதிகளில் இறக்கப்படும் பாதுகாப்புப் படையினர் 30 நாட்களில் அப்பகுதியை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவர். மீண்டும் அப்பகுதிகளில் அரசு நிர்வாகம் நிலைநிறுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

நக்ஸலைட்டுகளை ஒழித்துக் கட்டு்ம் ‘புதிய திட்ட’த்தின்படி, ஜார்க்கண்ட், பீகார், சட்டீஸ்கார், மராட்டிய மாநிலங்களில் 40,000 துணை இராணுவப் படையினர் இறக்கப்படவுள்ளனர். ஒரு மாத காலத்தில் அப்பகுதியை முழுமையாக பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகு, அப்பகுதிகளின் மேம்பாட்டிற்கு 7,300 கோடி செலவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக பாதுகாப்புப் படைகளை இறக்கி, நக்ஸல்களை ஒழித்து, அங்கு அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது