இலங்கையில் 40 ஆயிரம் போலி டாக்டர்கள்!

இலங்கையில் போலி டாக்டர்கள் விவகாரம் இன்று நேற்று பேசப்படும் ஒன்றல்ல. இது தொடர்பில் பல ஆண்டுகளாகவே அனைத்துத் தரப்பினராலும் பேசப்பட்டுவருகின்றது. இவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஒவ்வொரு வருடமும் சுகாதார அமைச்சு கூறிவருகின்றது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவோ, போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை. இலங்கையில் 40 ஆயிரம் போலி டாக்டர்கள் செயற்படுவதாகவும் அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையாக சுகாதார அமைச்சின் திடீர் சோதனைப் பிரிவு பொலிஸாருடன் இணைந்து தனியார் மருந்தகங்கள், மற்றும் மருத்துவ நிலையங்கள் மீது விரைவில் முற்றுகைகளை நடத்தப் போவதாக கடந்த வருடமும் இதேபோன்று சுகாதார அமைச்சு அறிவிப்பு விடுத்திருந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்திருந்த அறிக்கையொன்றில், தகுதிவாய்ந்த டாக்டர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருக்கின்ற போது போலி டாக்டர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருப்பதாகவும் தொழில்சார் தலைமை இல்லாமல் பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு டாக்டர்கள் இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் மருத்துவ ஆலோசகர்களென்று தம்மைக் கூறிக்கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சுகாதாரத் துறையைப் பெரும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த அதே நிலைமையும் அதே ஆபத்தும் தற்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது சுகாதாரத் துறையின் சீர்கேட்டையே வெளிக்காட்டுகின்றது.