இலங்கையில் தலிபான் ஆட்சி: நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய ஜே.வி.பி.; மங்கள புதிய கூட்டணி!

  
 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

31 வருட நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையின் காரணமாக நாட்டின் பொருளாதார சமூக விழுமியங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் நடவடிக்கைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (20) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மங்கள சமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் தீர்மானங்களுக்கு இலங்கையில் மதிப்பளிக்கப்படுவதில்லை. இலங்கை நாடாளுமன்றம் ஒர் இறப்பர் முத்திரையைப் போன்றதொரு கருவியாகவே செயற்பட்டு வருகிறது.

நாட்டை ஆட்சி செய்த அனைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் மாத்திரமல்லாது கட்சிகளின் தலைவர்களும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருந்தாகவும் அதனை எவரும் மறுக்க முடியாது. அவ்வாறிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தை போன்று பாதாள உலக குழுக்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்கம், எப்போதும் இருக்கவில்லை.

அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே ரகசியங்களை அறிந்தவர்களை கொலை செய்வதற்கான அனுமதி காவற்துறையினருக்கு கிடைப்பதாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலமே தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை தான் எதிர்ப்பதாகவும் பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது, தமது தந்தை மரண தண்டனை அமுல்ப்படுத்தப்படுவதை எதிர்கின்றோம்.

அத்துடன், அரசாங்கதுடன் இணைந்து வெள்ளைவான்களில் மனிதப்படுகொலைகள் மற்றும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுவந்தவர்களையே பாதாளக் குழுக்களை அடக்குகிறோம் என்ற பெயரில் அரசாங்கம் தொடர்ச்சியாக படுகொலை செய்துவருகிறது.

தற்போது காவல்துறையினருக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலிபான் போன்ற அடிப்படைவாத கலாசாரமும் அரசியல் அநாகரிகமும் இலங்கையில் கோலூன்றி வருகின்றது.

இதனால் காவல்துறையினர் இன்று தன்னிச்சையாக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துகின்றனர். ஜேம்ஸ் பொண்ட்களைப்போன்று கேட்க ஆளில்லாமல் ஒவ்வொருவராக வேட்டையாடிவருகின்றனர். இதன்பெயரில் அப்பாவி இளைஞர்களும் கொல்லப்படுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் அங்குலான சம்பவம்.

மக்கள் ஆனையால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் பணியாளர்; என தன்னை அழைத்துக்கொண்ட ஜனாதிபதியோ, தற்போது ஒவ்வொரு சந்திக்கும் மகா அரசரே வருக என தமது உருவப்படத்துடன் கூடிய கட் அவுட்களையும் பதாதைகளையும் ஆயிரக்கணக்கில் அமைத்து தம்மை அரசர் என்ற வகையில் பறைசாற்றி வருகின்றார் எனவும் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டினார்.