இலங்கையில் தமிழர்களின் அடையாளங்ள் அழிக்கப்படுகின்றன- ஜெயலலிதா அறிக்கை.

மீண்டும் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி கருணாநிதி வழமையாக எழுதும் கடிதங்களை மீண்டும் மத்திய அரசுக்கு எழுதத் துவங்கியுள்ள நிலையில் ஜெயலலிதா அறிக்கைகளை விடத் துவங்கியுள்ளார். நேற்று வந்த அறிக்கைக்குப் பிறகு இப்போது ஜெ வெளியிட்டிருக்கும் ஈழத் தமிழர் தொடர்பான அறிக்கை இதோ, இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக, அனாதைகளாக, அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சென்ற ஆண்டு இலங்கையில் போர் முடிந்தவுடன், கனிமொழி உட்பட தி.மு.. கூட்டணியைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை அதிபரை சந்தித்து, இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டு வந்தனர்.இலங்கை அதிபரும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் களிடம் உறுதி அளித்தார். ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.அண்மையில் இலங்கை அதிபர் பாரதப்பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச் சென்றார். இலங்கை அதிபர் வருகிறார் என்ற உடனேயே, இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அதிபரை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பாரதப் பிரதமருக்கு வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி.உடனே பாரதப்பிரதமரும், இந்த ஆண்டு இறுதிக்குள் 47 ஆயிரம் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் தன்னிடம் உறுதி அளித்த தாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகை களில் செய்தி வந்துள்ளது.

உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது. வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும்; தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படு வதாகவும்; தமிழ்ப் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும்;தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும்; இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும்; போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப்பகுதிகள் சிங்கள மயமாக்கப் படுகின்றன.இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங் களுக்கு திருப்பி அனுப்பு வது என்பது எப்படி சாத்திய மாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபாய் மதிப்பில் 50,000 வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவிற்கு உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?2009 ஆம் ஆண்டு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்ட போது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் இலங்கை அதிபர். தற்போது, பாரதப்பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதி அளித்து இருக்கிறார்.இந்த உறுதிமொழியெல்லாம் வாயளவில் தான் இருக்கின்றதே தவிர செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும். அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும். மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும். பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.
கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போரில் ஊன முற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும். பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ்மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப்பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

One thought on “இலங்கையில் தமிழர்களின் அடையாளங்ள் அழிக்கப்படுகின்றன- ஜெயலலிதா அறிக்கை.”

  1. இதன் பொருள் என்னவென்று வாக்காள பெருமக்கள் அறிவர்.

Comments are closed.