இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை வேட்பாளர் கைது!

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் மாத்திரமே விற்பனை செய்யப்படும் ட்ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் முகமத் ரபீக் எனப்படும் குறித்த மாநகரசபை உறுப்பினர் 23,000ஆயிரம் மாத்திரைகளை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் நுரானியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரமடோல் மாத்திரையானது வலி நிவாரணியாகும். தாங்கமுடியாத வலியுடன் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு வைத்தியர்களால் இம்மாத்திரை பரிந்துரை செய்யப்படுகின்றது.

இலங்கையில் 1100 மில்லிக்கிராம் கொண்டதும், ஒசுசலவில் மாத்திரம் வாங்குவதற்கும், வைத்தியரின் அனுமதிச்சிட்டையுடன் சென்றால் மாத்திரமே  இம்மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த மாநகர சபை உறுப்பினரிடமிருந்து, 225மில்லிக்கிராம் கொண்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாத்திரையைப் பயன்படுத்தும் ஒருவர், போதைவஸ்துக்கு அடிமையான ஒருவரால் எவ்வாறு அதிலிருந்து மீளமுடியாதோ, அதேபோன்ற நிலமையே இம்மாத்திரையைப் பயன்படுத்துபவருக்கும் ஏற்படுகின்றது. இதன் பாவனையைக் கைவிடும் சந்தர்ப்பத்தில், போதைப் பொருளைக் கைவிட்டவருக்கு ஏற்படும் உடல் நடுக்கம், நெஞ்சு படபடத்தல் மற்றும் உடல் நோவு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

இம்மாத்திரை ஒன்றின் விலை 4 ரூபாய். ஆனால் தனியார் மருந்தகங்களில் தடைசெய்யப்பட்ட இம்மாத்திரையை 100 ரூபாவிற்கு விற்பதன்மூலம் அதிக இலாபம் ஈட்டமுடியும். ஆகவே, குறித்த நபர் இந்தியாவிலிருந்து கடல்வழியாகக் கொண்டுவரப்படும் இம்மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் மருந்தகங்களுக்கு விற்பனை செய்துவந்தமை தெரியவந்துள்ளது.

இவர்மீது அபாயகரமான ஒளடதங்கள் கடத்தல் சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும், சட்டத்தின் ஓட்டையை வைத்து இவர் விடுதலையாவதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Leave a Reply