இலங்கையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை!

20.09.2008

படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக இலங்கையின் வடக்கின் மனிதாபிமான நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் நெதர்லாந்தும் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன. உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்படுவதாக அவை குற்றஞ்சாட்டியுள்ளன.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 9ஆவது அமர்வில் நேற்று நடைபெற்ற மனித உரிமைகளின் நிலைமைகள் தொடர்பான விவாதத்திலேயே இலங்கை தொடர்பாக மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விவாதத்தின்போது, இலங்கை, சூடான், கொங்கோ ஜனநாயக குடியரசு, மக்கள் கொரிய குடியரசு, சிம்பாபே, ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக், பெலாரஸ், சோமாலியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர், இலங்கையில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போர் சர்வதேச மனிதாபிமான சட்டம் பாரிய அளவில் மீறப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

பலவந்தமான காணாமல்போதல்கள், சட்டவிரோத கைதுகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருகின்றன.தீவிரமடைந்துவரும் மோதல்கள் காரணமாக இலங்கையின் வடக்கு பகுதியின் மனிதாபிமான நிலை மிகவும் மோசடைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கு உரையாற்றிய ஐ.நா.வுக்கான நெதர்லாந்து தூதுவர், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலையை மேம்படுத்துவற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லும் நிலையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த சிலவாரங்களாக இலங்கையின் வடக்கில், அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தீவிர மடைந்துள்ளதையடுத்து பிரதேசத்தின் மனிதாபிமான நிலை கவலையளிக்கிறது. நிவாரணப் பொருட்களின் பாதுகாப்பான விநியோகத்தையும் நிவாரணப்பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேவேளை, இவ்விவாதத்தின்போது மனிதஉரிமை கண்காணிப்பகம் (ஹியுமன் ரைட்ஸ் பேர்ச்), சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச நீதியாளர் அமைப்பு என்பன இலங்கை தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.