இலங்கையில் சதிப்புரட்சி நேர்ந்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும்?: மஹிந்த வெளியிட்ட சில அச்சங்கள்!

mahinda இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனக் குழப்பமடையுமானால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து புதுடில்லியின் கருத்தை உத்தி யோகப்பற்றற்ற முறையில் உரைத்துப் பார்த்து அறிந்து கொண்டிருக்கின்றது கொழும்பு.

நாட்டின் பாதுகாப்புத் துறைக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பதற்றமான சூழலில் ,ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனப் பாதிக்கப்படலாம் என்ற பீதி பரவியுள்ள பின்னணியிலேயே இவ்வாறு புது டில்லியின் கருத்தைக் கொழும்பு தட்டிப்பார்த்திருப்பதாகக் கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் தமது பணி முடிந்து வெளியேறும் கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும் , இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்களின்போதே ,இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைகள் முடக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பது பற்றிய விடயம் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயத்தை ஒட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட சில அச்சங்களை அடுத்து , இது குறித்து புதுடில்லியில் உள்ள அரசுத் தலைவர்களுக்கு அலோக் பிரசாத் உடன் அறிவுறுத்தினார்  அறியவருகின்றது.

அத்தகைய சூழ்நிலை ஒன்று ஏற்படுமானால் , இலங்கையில் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு முழு ஒத்துழைப்பு , உதவி அளிக்கப்படும் என்பதே இந்திய அரசின் உறுதியான நிலைப்பாடு எனக் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

 இது  முன்னர் பிரிவினைவாதக் குழுவாக இருந்த “புளொட்” அமைப்பு , மாலைதீவின் தலைநகர் மாலேயில் இருந்த அரசு மீது தாக்குதல் நடத்தியபோது மாலைதீவு ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் இந்தியப் படைகள் அங்கு விரைந்தமையைப் போன்ற அடிப்படையிலேயே அமையும். இந்தியப் படைகள் அங்கு மாலைதீவில் இறங்கி , சட்டம்  ஒழுங்கை வழமைக்குக் கொண்டு வருவதற்கு மாலைதீவு தேசிய சேவைப் படைகளுக்கு உதவியிருந்தன.  இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது.