இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்:மத்திய அரசுக்கு தமிழக கட்சிகள் கெடு.

14.10.2008.

இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பி.பி.சி. செய்திச் சேவையிடம் பேசிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இலங்கையில்
உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை முன்வைத்து வாக்குகளைப் பெற தாம் முயலவில்லை என்றும், 1956 ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சினையை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தை அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளதால், அவர்கள் இலங்கைப் பிரச்சனையை வெறுப்பதாக தாம் கருதவில்லை என்றும் தம் மீதான கோபம் காரணமாகவே அவர்கள் வரவில்லை என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடுகின்ற சூழலில், சிறார்களை படைகளில் சேர்ப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, சகோதர கொலைகளை தாம் தொடர்ந்து எதிர்த்தும் கண்டித்தும் வந்துள்ளதாகவும் தமிழக முதல்வர் கூறினார்.

.

இந்திய அரசு போர் நிறுத்தம் வேண்டும் என்று நினைத்தால் அதை 24 மணி நேரத்தில் கொண்டு வர முடியும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

ஆறு முக்கியமான தீர்மானங்கள் இன்றைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழனப் படுகொலையை இலங்கை நிறுத்தவேண்டும், ஈழத் தமிழர்களைப் கொல்வதற்கான இராணுவத் தளபாடங்களை மத்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கக் கூடாது, வன்னியில் இடம்பெயர்;ந்திருக்கும் 230,00ற்கும் அதிகமான மக்களுக்கான உணவு, மருந்துப் பொருள்கள் உட்பட அடிப்படைத் தேவையான பொருள்களை அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும், இலங்;கை அரசாங்கப் படைகளால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்தியா நடத்த வேண்டும் ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து ஆராய்வதற்குக் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தி.க, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்துகொண்டிருந்தன.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நடிகம் விஜயகாந் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ தலைமையிலான ம.தி.மு.க, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இன்றைய மாநாட்டைப் புறக்கணித்திருந்தன. 
.
இன்று நிறைவேற்றப்பட்ட ஆறு முக்கிய தீர்மானங்களுக்கும் தமது கட்சி முழு ஆதரவு வழங்குவதாக தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு பி.பி.சி. செய்திச் சேவையிடம் தெரிவித்தார். ஈழத்தமிழர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதற்குத் தமது கட்சி தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதுடன், தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்காது எனவும் அவர் தெரிவித்தார்.