இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மறைமுகத்திட்டத்துடன் இந்தியா!:ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

06.08.2008.
எம்.ஏ.எம்.நிலாம் .

இந்தியா அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கையை அடிமைப்படுத்தும் மறைமுகச் செயற்பாடுகளிலிறங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி. நாட்டின் பொருளாதார வளத்தைச் சூறையாடும் இந்தியாவின் சதித் திட்டத்துக்கு மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் துணைபோய்க் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இலங்கை இந்திய மின்சார பரிமாற்றத் திட்டமான நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனவும் ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.

தேசிய நூலக சேவைகள் ஆவணவாக்கல் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி. செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடலினூடாக 200 மைல் தூர கேபிள் வழியாக மின்சாரப் பரிமாற்றத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்துக்காக செலவிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மதுரையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடல் வழியாக கேபிள் மூலம் பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் இந்த மின்சாரத்தை அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு அப்பிரதேசங்களின் கிராமப்புறங்களுக்குப் பெற்றுக்கொடுக்க திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் கீழ் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவரக்கூடிய கேபிள் கம்பி இணைப்பு ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

இந்த மின்சாரப் பரிமாற்றம் காரணமாக இலங்கையின் சக்தி வளத்துறை இறைமைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியா அதன் அண்டைய நாடுகளான நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இதுபோன்ற உடன்படிக்கைகளைச் செய்து கொண்டதன் மூலம் அந்த நாடுகளை தனது ஆதிபத்தியத்துக்குள் வைத்துக்கொண்டுள்ளது. அந்த நாடுகள் இன்று தனது சக்தி வளத்துறை இறைமையை இழந்து இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் மெகாவாட் என்பது இலங்கை மின்சார உற்பத்தியில் 40 சதவீதமானதாகும். 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் பல மின் உற்பத்தி நிலைகளிலுமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மின்சாரம் 2429 மெகாவாட்டாகும். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் இந்தியா அமைக்கவிருக்கும் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் முதற் கட்டமாக 500 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இதனை ஆயிரம் மெகா வாட் வரை அதிகரிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆயிரம் மெகா வாட் கொண்டுவரப்படுவதோடு சம்பூரில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகா வாட்டும் சேரும்போது உள்நாட்டு மின்சக்தியின் சரி பாதியை இந்தியாவிடமிருந்தே பெறவேண்டிய நிலை ஏற்படலாம். இதனை வைத்து இந்தியா சக்தி வளத்துறையில் இலங்கையில் ஏகபோக உரிமை பெற்றுக் கொள்ள வழிபிறக்கும். இதன் மூலமே எமது நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாது போகலாம்.

ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தொடர்பில் அவசர மாற்று வழியை இலங்கையால் ஏற்படுத்த முடியாதென்பதால் இந்த விடயத்தில் இலங்கை அரசு இந்தியாவுக்கு எந்தவித அழுத்தங்களையோ நிபந்தனைகளையோ பிரயோகிக்க முடியாது. உடன்படிக்கையை இரத்துச் செய்யவும் முடியாது.

கேபிள் மின்சார இணைப்பானது தலை மன்னாரூடாக ஏற்படுத்தபபடுவதால் அப்பகுதி கடற்றொழிலாளர்களும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரலாம். இதனையும் மிக ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வது போன்று இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் மின்சாரத்தை வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு மின்சாரத்தை வழங்கக்கூடிய அளவுக்கு இலங்கை மின்சாரத்தில் தன்னிறைவு காணவில்லை. சிலவேளை இந்தியா இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தனது நாட்டுக்குக் கொண்டு செல்லும் நிலைமை ஏற்படலாம். இதன் மூலம் எமது நாடு இன்னொரு சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

இந்தியா எமது நாட்டின் வளங்களை சூறையாடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக இலங்கை அரசு இதற்குச் சாதகமான சமிக்ஞையை காட்டி வருகின்றது. சீபா உடன்படிக்கையை மறைமுகமாக செய்து கொள்ள முயற்சிப்பதும் இதற்காகவே ஆகும். இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால் மிகக்குறுகிய காலத்துக்குள் அனைத்து விடயங்களிலும் இலங்கை இந்தியாவின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இலங்கையின் அரசில், பொருளாதாரம் என்பவற்றில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மறைமுகத்திட்டத்துடன் இந்தியா செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் அரசு அதற்கான பாதையை சீர்ப்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்ன?யக்கா தெரிவித்தார்