இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா அநாவசியமாக தலையிடாது – அமைச்சர் போகொல்லாகம

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றி விரைவில் இனப்பிரச்சினையில் தலையிடும் என்று தாம் நம்புவதாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த மாதம் இறுதியில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காக புதுடில்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் செல்வாக்கு சரிந்து வருகின்றது. அவர்கள் வசமுள்ள பகுதிகளும் வேகமாக சுருங்கிவருகின்றன. எனினும் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு அரசியல் ரீதியிலேயே அமையும். நாட்டில் பயங்கரவாதத்துக்கு எவ்வித இடமும் வழங்காமல் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணமுடியும். இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா அநாவசியமாக தலையிடாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதற்கான எந்த அவசியமும் ஏற்படவில்லை.