நாராயணன் குழு வருகை: இலங்கையின் இராணுவப் பலத்தை அதிகரிப்பதே

சீனா, பாகிஸ்தான் பக்கம் கொழும்பு அதிகளவுக்கு ச?யாமல் தடுப்பதில் இந்தியா முனைப்பு
இலங்கையின் இராணுவப் பலத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் இந்தியா மேலும் ஆயுதங்கள், யுத்ததளபாடங்களை விநியோகிக்கும் சாத்தியமுள்ளதாகவும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து கொழும்பு தொடர்ந்தும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைத் தடுத்துநிறுத்துவதற்காக அதிகளவில் இலங்கைக்குத் தான் வழங்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலிலிருந்து தடுத்து நிறுத்தும் வகையிலான உபகரணங்களே இந்த ஆயுத விநியோகத்தில் அதிகளவு இடம்பெற்றிருக்குமெனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுவதாக “ரைம் ஒப் இன்டியா’ பத்திரிகை நேற்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியில் தீர்வு சாத்தியமில்லையென இந்தியா நம்புகின்றது. நாட்டின் ஆட்புல எல்லைக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டுமெனவும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மறுபுறத்தில் புதுடில்லி கொழும்பைத் தூண்டிவருகிறது.

அரசியல் ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை குறித்து மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு புதுடில்லி தெரியப்படுத்தியுள்ளது. கடந்தவார இறுதியில் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜேசிங் ஆகியோரடங்கிய உயர்மட்டத் தூதுக்குழுவூடாக இந்தச் செய்தியை புதுடில்லி விடுத்திருக்கிறது.

அதேசமயம் தனது பின்புறத்தில் அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் சீனா ஊடுருவுவதை இந்தியா புறக்கணித்துவிடவோ அலட்சியமாக இருந்துவிடவோ முடியாது. புலிகளுடனான யுத்தத்தில் இலங்கையின் இராணுவ வலிமையை அதிகரிக்க பரந்தளவிலான ரக ஆயுதங்களை சீனா கொழும்புக்கு விநியோகித்து வருகிறது.

“மியான்மாரில் இடம்பெற்றதைப் போன்றதொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. ஆயுத விற்பனை, எண்ணெய் ஆய்வு, அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற துறைமுக செயற்றிட்டங்கள் என்பனவற்றில் இலங்கையில் சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்று சிரேஷ்ட அதிகாரியொருவர் ரைம் ஒவ் இன்டியாவுக்குக் கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானிடமிருந்து பாரியளவில் இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை நாராயணன் தலைமையிலான குழுவினர் கொழும்பிடம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் ஏனையோருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் போது இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இராணுவ விநியோகங்கள், புலனாய்வு, பயிற்சி என்பனவற்றை உள்ளடக்கிய “சகல உதவிகளையும்’ வழங்குவதாக இந்தியத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது.

சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை இலங்கை நிறுத்த வேண்டுமென முன்னர் நாராயணன் பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததுடன், பிராந்தியத்தில் அதிகளவு அதிகாரமுடையதாக இந்தியா இருப்பதாகவும் கொழும்பின் நியாய பூர்வமான பாதுகாப்புத் தேவைகளைப் புதுடில்லியால் பூர்த்திசெய்யமுடியுமெனவும் கூறியிருந்தார்.

ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் உணர்வுகளைக் கருத்திற்கொண்டு பாதுகாப்புக்கான ஆயுதங்களையும் உபகரணங்களையும் இதுவரை இந்தியா விநியோகித்துவந்தது. 40 மி.மீ. எல் 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் தொடக்கம் இந்திரா ராடர்கள் போன்றவற்றையே இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், சீனாவும் பாகிஸ்தானும் அண்மைக்காலங்களில் இலங்கையின் ஆயுதத்தேவைக்கான வெற்றிடத்தை நிரப்ப அதிகளவுக்கு முன்வந்திருந்தன. 1990 களில் மியான்மாரின் ஜூன்டா இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களை வழங்காமல் புறக்கணித்ததைப் போன்றதொரு நிலைமையே இங்கும் ஏற்பட்டிருந்தது.

உதாரணமாக கொழும்பு 37.6 மில்லியன் டொலர் தொகையில் பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்டியங்கும் பல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஆயுதங்கள், ரவைகள், மோட்டார்கள், குண்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

அத்துடன், சீனாவிடமிருந்து ஜியான் 7 யுத்த விமானங்கள், ஜே.வை. 1 முப்பரிமான ராடர்கள், கவச வாகனங்கள், ரி 56 துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துவக்குகள், ரொக்கட்டுகள், கிரனைட் லோஞ்சர்கள், ஏவுகணைகள் என்பனவற்றையும் பெற்றுவருகின்றது.

அதேவேளை, இந்தியா சர்வதேச கடற்பரப்பில் இலங்கையுடன் கூட்டாக கடற்படை ரோந்தை மேற்கொண்டுள்ளது. புலிகளின் நடவடிக்கைகளை கடற்பிராந்தியத்தில் தடுக்கவே இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.