இலங்கைப் பிரச்சனை : கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கை தமிழர் பிரச்சனையின் திமுக குரல் கொடுக்கவில்லை என்று கூறி முதலமைச்சர் கருணாநிதியை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகக்கடுமையாக சாடினார்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தலைமையேற்று அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது:

இலங்கையில் தமிழர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுகிறார்கள். நம்முடைய சொந்த சகோதரர்கள் அங்கே படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும், அங்கு அகதிகளாக உள்ளவர்களுக்கு இலங்கை அரசு உணவு மற்றும் மருந்து பொருட்கள் தரவேண்டும்; அல்லது அவற்றை அவர்களுக்கு நாம் வழங்குவதற்காவது அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

சிலர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேர்தலில் அணி சேர்வதற்கான ஒத்திகை என்று கூறுகிறார்கள். 24 மணி நேரமும் தேர்தல், அதில் கிடைக்கும் வெற்றி, அதனால் பெறப்போகும் பதவி என்பதைப் பற்றியே கனவு காணுபவர்களுக்கு மனித இதயங்கள் பேசுவதை ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும்.

இலங்கையிலே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தலை பற்றி சிந்திப்பவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும். சொந்த சகோதரர்கள் அங்கே சாகும்போது, இங்கே தேர்தலை பற்றி கோட்டைக்கனவு காண்பது பற்றி சிந்திப்பது ஏற்புடையது அல்ல.

நான்கு ஆண்டுகள் டெல்லியிலே கூட்டணியிலே இருந்தீர்களே, அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் குரல் கொடுக்கிறீர்கள் என்று ஒரு முதிர்ந்த அரசியல்வாதி கேட்டிருக்கிறார்.

கூட்டணியில் இருந்தபோதும், கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவிகளை செய்யக்கூடாது; அந்த பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

இலங்கை தமிழர்கள் மட்டுமன்றி அண்மைக்காலமாக தமிழக மீனவர் களும் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 420 தமிழக மீனவர்கள் படுகொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் ஒரு சடங்கு சம்பிரதாயமாக அவர்கள் குடும்பத்தினருக்கு நிதியை அளித்து விட்டு அத்துடன் இந்த பிரச்சனையை முடித்து விடுகிறார்கள்.

அவர்கள் சுடுவதை நிறுத்த நான் வேண்டுகோள் விடுத்தேன். அவர்களும் சுடுவதை நிறுத்தி விடுவதாக எனக்கு வாக்குறுதி தந்தார்கள் என்று ஒரு பெரியவர் சொல்கிறார்.

ஆனால், கடந்த மாதம் 24 ந் தேதியும் ஒரு ராமேஸ்வரம் மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப் பட்டு பிணமாக அனுப்பப்பட்டார். அப்படியானால் நீங்கள் தந்த வாக்குறுதி என்ன ஆனது?

இதற்காக இலங்கையை கண்டித்து நீங்கள் குரல் எழுப்பி இருக்கறீர்களா?
தமிழக மீனவர்களின் கூக்குரல் டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு கூடவா தெரியவில்லை?

டெல்லியை தமிழகம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொல்கிறார்கள். நம்முடைய அமைச்சர்கள் முக்கிய துறைகளிலே இருக்கிறார்கள். ஒரு நாளாவது எங்கள் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதங்களை வழங்காதே என்று இவர்கள் குரல் கொடுத்தி ருக்கிறார்களா?

தமிழகம் முழுவதும் பழ.நெடுமாறன் அலைந்துதிரிந்து உணவு மற்றும் மருந்து பொருட்களை சேகரித்தார். அவற்றை பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அனுப்புவதற்காவது நீங்கள் அனுமதி வாங்கி தந்தீர்களா?

எதுஎதற்கோ நாங்கள் மந்திரி பதவியிலிருந்து விலகி விடுவோம் என்று மத்திய அரசை எச்சரித்து இருக்கிறீர்களே? அதுபோல இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தாவிட்டால் மந்திரிசபையில் இருந்து நாங்கள் விலகுவோம் என்று நீங்கள் மத்திய அரசை எச்சரித்தது உண்டா?

இங்கே கட்சி வேறுபாடுகள் பாராமல் அனைவரும் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்புகிறோம். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றார் தா.பாண்டியன்.