இலங்கைப் படைத் தாக்குதல் : தமிழக மீனவர் 21 ஆம் திகதி கருப்பு தினம் அனுஷ்டிப்பு!

rameshwaram-200_5இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் 21ஆம் திகதி கருப்பு தினம் அனுஷ்டிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தங்களது குறைகளைத் தீர்க்க வலியுறுத்தி ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு வாகனப் பேரணியை நேற்று மீனவர்கள் தொடங்கினர். இதை தமிழ்நாடு மீனவர் சம்மேளன ஒருங்கிணைப்பாளர் அன்பழகனார் ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

“இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மீன்பிடித் தொழிலை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி வாகனப் பேரணியைத் தொடங்கியுள்ளோம். இது சென்னையை எதிர்வரும் 21ஆம் திகதி வந்தடையும். அன்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளைத் தெரிவிப்போம். அன்றைய தினத்தை கருப்பு தினமாகவும் அனுஷ்டிப்போம்” என்றார்.