இலங்கைத் தேர்தல் – இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து.. : சபா நாவலன்

இந்தியாவைச் சூழவுள்ள நாடுகள் அனைத்துமே இன்று அதன் அரசியல் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போய்விட்டது. நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற எதுவுமே இந்திய மேலாதிக்க, வல்லரசு நலன்களின் எல்லைக்குள் உட்படும் நிலையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. இந்தச் சூழலில் எஞ்சியிருக்கும் தெற்காசிய நாடுகளில் இலங்கை பிரதானமானதாகக் கருதப்படுகிறது. இலங்கையை, இந்தியா பல ஆயிரம் மனித் உயிர்களைப் பலிகொடுத்து, மிக நீண்ட காலத்திற்கு குத்தகைக்குக் கொள்வனவு செய்துள்ளது.

80 களில் தமிழ் தேசிய இயக்கங்களுக்ளுக்கு இரணுவப் பயிற்சியும் நிதி உதவியும் வழங்கிய இந்தியா, மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டிருந்தது.

1. இலங்கையின் உள் நாட்டு அரசியலைக் கொந்தளிப்பு நிலையில் பேணுவதனூடாக தனது தலையீடுகளை மேற்கொள்வது.

2. இலங்கையில் உருவாகவல்ல புரட்சிகர அமைப்புக்களை சீர்குலைப்பது.

3. தமிழ் நாட்டிலுள்ள முற்போக்குப் போராட்ட அமைப்புக்களுடனான அவர்களின் ஒருங்கிணைவைத் தடுப்பது.

இந்த நோக்கங்களை 90 களின் ஆரம்பம் வரை வெற்றிகரமாக நிறைவேற்றிய இந்திய அரசு, அதன் பின்னரான உலக அரசியல் மாற்றங்களில் இசைவாக்கத்தினூடாக புதிய மாற்றங்களையும் அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்திற்று.

90 கள் வரைக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வரலாற்று வழிவந்த இந்திய எதிர்பு வாதம் மேலோங்கியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து சிங்கள பௌத்தத்தைப் பாதுகாக்கும் காவலர்களாக சிங்கள மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் அரசியல் தலைவர்கள் தம்மை முன்னிறுத்த வேண்டிய தேவை அமைந்திருந்தது.

90 களின் பின்னர் இந்த அரசியல் சிந்தனை போக்கில் மாற்றத்தை உருவாக்க இந்திய அரசு வேறுபட்ட திட்டங்களை முன்வைத்தது. இந்திய அரசும், பல்கலைக் கழகங்களும் அறிமுகப்படுத்திய புலமைப்பரிசில் திட்டங்களூடாக இந்தியாவில் குறிப்பாக டெல்லி போன்ற நகரங்களில் தங்கிக் கல்விகற்ற ஒரு புதிய நிர்வாக துறை சார் மத்தியதர வர்க்கம், இன்று இலங்கையில் பெரும்பாலான அரசியல் சமூக மற்றும் பொருளாதார நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளது.

இலங்கையை நோக்கமாக முன்வைத்தே பல புலமைப் பரிசில் திட்டங்கள் இந்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டன. நூற்றம்பது வரையான வேறுபட்ட புலமைப் பரிசில் திட்டங்கள் இந்திய அரசாலும், இந்தியப் பல்கலைக் கழகங்களாலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

இவர்கள் இந்திய ஆட்சிமுறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இந்திய உணவு, உடை, குடும்ப உறவுகள் போன்ற இன்னோரன்ன கலாச்சார அமைப்பு முறைகளை அங்கு வாழ்ந்து அறிந்து கொண்டவர்கள். இவர்கள் சமூகத்தில் கருத்துருவாக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மத்தியதர வர்க்கம். இவர்கள் சிங்கள சமூகத்த்தில் இந்தியா தொடர்பான சிந்தனைப் போக்கில் உருவாக்கிய மாற்றம் குறிப்பிடத்தக்கது. இவர்கள்களுக்கு காந்தி, பொலிவூட், சுடிதார், சிக்கின் ரிக்கா, சப்பாத்தி என்ற எல்லாமே உள்வீட்டுச் சமாச்சாரங்கள்.

இந்திய பொலிவூட் திரைப்படங்கள், கிருதிக் ரோஷான், சாருக்கான், ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாவற்றினதும் பொழுதுபோக்கு முகங்களின் மறுபக்கம் இந்தியக் கலாச்சாரத் திணிப்பும் இந்திய எதிர்ப்புக்கு எதிரான திட்டமிட்ட வேலைமுறைகளும் தான்.

2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து அதிகரித்த இந்திய முதலீடுகள், வணிகத் தொடர்புகள் போன்றன இந்தச் சிந்தனை மாற்றம் மேலும் வலுப்பெறுவதற்கான புறக்காரணிகளாக அமைந்தது. இந்திய முதலீடுகள், இலங்கையில் “மீளமைப்பு” நடவடிக்கைகளிலிருந்து தொழில் நுட்பம் ஈறாக ஏனைய நுகர்வுத் துறை வரைக்கும் விரிந்து செல்கிறது.

90கள் வரை இந்திய எதிர்ப்பை முன்வைக்காமல் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது சாத்தியமற்றதாக இருந்த நிலை தலைகீழாக மாற்றப்பட்டு இன்று இந்திய எதிர்ப்பு அரசியலை முன்வைத்தல் என்பது அரசியல் தற்கொலையாகக் கருதப்படும் நிலை உருவாகிவிட்டது. தொடர்ச்சியான இந்திய அதிகார அமைப்பின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் நிகழ்ந்த இந்த மாற்றத்தின் ஒரு புள்ளியில், இந்திய அரசிற்கு தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தைப் பாவித்துக்கொள்ள வேண்டிய தேவை அற்றுப் போனது.

இதனோடு கூடவே, உலகப் பொருளாதார நகர்வுகளின் ஊடாக உருவான சந்தைக்கான தேவை, இலங்கையைத் தனது சந்தைக்கேற்ற தளமாக இந்தியா உபயோகப்படுத்தும் நிலை உருவாகியிருந்தது.

இந்த நிலையில் சிங்கள மக்களின் மத்தியிலான சிந்தனை மாற்றத்தை வரலாற்று அடையாளமாக மாற்றும் ஒரு நிகழ்சிப்போக்குத் தான் வன்னிப்படுகொலைகள். வன்னிப் படுகொலைகளின் பின்னர் இந்தியாவையும், பௌத்தத்தையும் நிராகரித்து இலங்கையில் அரசியல் நடத்தமுடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. வரலாற்று ரீதியான இந்திய எதிர்ப்புணர்வுடன் வாழந்த சிங்களமத்தியதர வர்க்கம் தெற்காசியாவில் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள்.

மகிந்த அரசின் குடும்ப ஆட்சி, ஊழல், இனப்படுகொலை,போர்க்குற்றச் சாட்டுக்கள் அனைத்துமே இந்தியாவின் பொம்மை அரசை இலங்கையில் உருவாவாக்கும் திட்டத்தை இலகு படுத்தியுள்ளது. மேற்கின் போர்க்குற்றவாளி, இந்தியாவின் அடிமையாக உருவான முரண் நிலையை இந்தியா பேண விரும்புகிறது. மகிந்த அரசின் மீதான தமது நலன்களுக்கு உட்பட்ட மேற்கின் தொடர்ச்சியான அழுத்தம் இந்திய அரசைப் பொறுத்தவரை சாதகமானதாகவே கருதப்படுகிறது.

வன்னிப் படுகொலைக் காலப்பகுதியில், தமிழ் நாட்டைக் கட்டுப்படுத்தவும், உலக அழுத்தங்களிலிருந்து மகிந்த அரசைப் பாதுகாக்கவும் இந்தியாவின் தலைமையிலேயே, இந்தியாவிற்காகவே ஏனைய உலக அரசுகள் அணிதிரண்டன. ஐ.நா வரைக்கும் தனது பலத்தைப் பிரயோகித்த இந்திய அதிகாரம், இன்று ஜனாதிபதித் தேர்தலிலும் மகிந்த அரசைக் கைவிடத் தயாரில்லை. பதினைந்து வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தியக் காலனியான இலங்கையை இந்தியா இழக்கத் தயாரில்லை.

மறுபுறத்தில், இந்தியாவின் பெருளாதார நலன்கள் உலக முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தின் வழியாக அமரிக்க நலன்களோடு நெருங்கியதாக அமைந்திருந்தாலும், பிராந்திய ஆதிக்கம், சர்வதேச உறவுகள் போன்ற வேறுபட்ட விடயங்களில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயன முரண்பாடுகள் இலங்கைத் தேர்தலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துவிட்டன.

உலகமக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதிலும், அழிப்பதிலும் மிகுந்த அனுபம் மிக்க மேற்கு நாடுகள் இலங்கைத் தேர்தலில் தமது ஆதிக்கத்திற்காகப் போட்டி போடுகின்றன. அவற்றின் பிரதிநிதியான சரத் பொன்சேகா மறுபுறத்தில் இந்திய அதிகாரத்திற்கு எதிரான மேற்கின் குரலாக ஒலிக்கிறார். தெற்காசியாவில், இலங்கையின் அரசியல் முக்கியத்துவத்தைப் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ள மேற்கின் ஆதிக்கத்திற்கும் போர்க் குற்றவாளியும், இன அழிப்பின் இன்னுமொரு சூத்திரதாரியுமான சரத் பொன்சேகா வசதியான தெரிவு. உலகின் மறு ஒழுங்கமைப்பும் அதனூடான துருவ சக்திகளும் ஒன்ன்றோடொன்று மோதிக்கொள்ளும் இந்தத் தேர்தல் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை எந்த அர்த்தமுமற்ற பொலிவூட் சினிமா மட்டும்தான். அழிக்கப்பட்ட அப்பாவிகளின் நினைவுகளைக் களைந்து, பொருளாதார சமூக அடக்குமுறயை மேலும் வலுப்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற சதி நாடகம் இது.

இதையெல்லாம் புரிந்திகொள்ளாத தமிழ் அரச ஆதரவாளர்கள் மகிந்தவை இடதுசாரியென்றும், முன்னை நாள் புலி ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவை தமிழ் மக்களின் தற்காலிகக் காவலன் என்றும் சீரழிவு மாயையை உருவாக்க முனைகின்றனர். மறுபடி மறுபடி உருவாகும் தேர்தல் சுழிக்குள் இழப்புக்களும், தியாகங்களும் நிறைந்த தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அழித்துவிடும் திட்டத்திற்கு வலுச்சேர்க்க புலம் பெயர் நாடுகளிலிருந்தும் ஒரு கூட்டம் தயாராகிவிட்டது.

5 thoughts on “இலங்கைத் தேர்தல் – இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து.. : சபா நாவலன்”

  1. இந்தியாவும் இலங்கையும் கலாச்சாரத்தால் மாற்றம் கொண்டவையா? வறூமையும்,ஏழ்மையும் என்ற ஓரெ கோட்டை கொண்டவை இப்போது ஊழல் வேறூ சேர்ந்து கொண்டுள்ளது.அரசியல் என்ற பந்து விலையாட்டில் தமிழ்த்தரப்பால் கோல் போட முடியவில்லை சிங்களத்தரப்பு சிறப்பாக் விலையாடி வென்றூ விட்டார்கள்.ஆற்றலும் அறீவும் மிக்க தமிழர் இந்தியாவை அதிகார மையமாக பார்க்காது அறீவுபூர்வமாக் அணூக வேண்டும்.மண்ணீற மனிதர்களானநாம்நிமிர்ந்துநிற்கிறோம் என்றால் அது இந்தியா தந்த பெருமையே.எம் தந்தையர்நாடு.தாய்வீடு.

  2. சிங்களத் தரப்பு சிறப்பாக விளையாடி?இல்லையே,அவர்கள் வீரர்களை விலை கொடுத்து வாங்கினார்கள்!(மேற்குநாடுகளில் வீரர்களை கழகங்கள் விலை கொடுத்து வாங்கும்)பயிற்சியாளர்களைக் கூட!!பந்து,விக்கட்,கையுறை,காலில் கட்டும் பாட்ஸ்,தலைக் கவசம் என்று எல்லாமே!ஆனால் நம்மவர்களை எதுவுமே வாங்க அனுமதிக்கவில்லை!இது ஒரு தலைப் பட்சமானதில்லையா?என்று கேட்டால் பதிலில்லை!!!விளைவு?

    1. ஏன் வாங்கவில்லை கப்பல் கப்பலா வாங்கினொமே ..ஆனா கவுத்துட்டாங்கள்..அதாவது தாட்டுட்டாங்கள்…

  3. அதற்கும் பெரியண்ணன் தானே கால்?இப்போது தானே வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறுகின்றன!சரத் ஏறிய பிறகு இன்னமும் வரும்!!

Comments are closed.