இலங்கைத் தூதரகத்துள் நுளைந்த புதிய தமிழகம் கட்சியினர்.

இந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக delhiவளாகத்துக்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை, தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தக் கோரியும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் புதிய தமிழகம் மற்றும் தெளஹீத் ஜமாத் மற்றும் யாதவ மகாசபை ஆகிய அமைப்புக்களின் சார்பில் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர், இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள கெளடில்யா மார்க் பகுதிக்குச் சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்தார்கள். வளாகத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்துச் சேதப்படுத்தினார்கள்.

இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் குறித்து மிகுந்த வருத்தப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை விரைவில் மீள்குடியமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.