இலங்கைத் தமிழர் பிரச்சனை: சி.பி.ஐ(எம்) நிலைபாடு சந்தர்ப்பவாதமா?:உ.ரா.வரதராசன்.

19.10.2008.

என்னுடைய கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் தோழர் ஒருவர்.

“இலங்கை இனப்பிரச்சனைக் குத் தீர்வு காண்பதற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் (சிபிஐ(எம்)) மற்றவர்கள் தேர்ந்தெடுத்த இனவெறிப் பாதைக்கு ஏன் அடிபணிந்து விட்டோம்? அஇஅதிமுக போன்ற மாநி லக் கட்சிகள் துணிச்சலான, கொள்கை ரீதியான நிலைபாட்டை இந்தப் பிரச்ச னையில் எடுத்தபோது நாம் ஏன் ஒரு மட் டமான, நகைப்பிற்கிடமான, நெறியற்ற அரசியல் நிலைபாட்டை எடுத்தோம்?”

இந்தக் குறுஞ்செய்தியின் வாசகம் கடுமையானதாக அமைந்திருப்பதே இந் தப் பிரச்சனை அவரது எண்ண ஓட் டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பிரச்சனை யில் கடந்த அக்-2 அன்று உண்ணா விரதப் போராட்டம் நடத்தியபோது, அதில் மார்க்சிஸ்ட் கட்சி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய கட்டத்தில், பத்திரிகை யாளர்-நண்பர்கள் பலரும் இதே கேள் வியை வேறுவிதமாகக் கேட்டார்கள்.

“இடதுசாரிகளுக்கு அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு, வகுப் புவாதத் தாக்குதல், தொழிலாளர் உரிமை மீறல், பொருளாதார நெருக்கடி போன்று எத்தனையோ முக்கியப் பிரச்சனைகள் இருக்கையில், இலங்கைப் பிரச்சனை யை ஏன் இவ்வளவு அழுத்தமாகக் கையி லெடுக்கிறீர்கள்?” என்பது அவர்கள் எழுப்பியக் கேள்வி.

முதலில் குறுஞ்செய்தியில் இடம் பெற்றுள்ள குழப்பமான சிந்தனை களைத் தெளிவுபடுத்துவோம்.

அக்டோபர்-14 அன்று தமிழக முதல மைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு ஒட்டுமொத்த தீர்வு காண்பதற்காகக் கூட்டப்பட்டதல்ல. இலங்கை அரசு தற் போது மேற்கொண்டு வருகிற இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடுமை யான இன்னல்களுக்கு இலக்காகியுள்ள இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதி யிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை வலியுறுத்துவதே அந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கம்.

அஇஅதிமுக போன்ற மாநிலக் கட் சிகள் அந்தக் கூட்டத்தைப் புறக்கணிப் பது என்று எடுத்த முடிவு துணிச்சலா னதும் அல்ல: கொள்கை ரீதியானதும் அல்ல; இந்தப் புறக்கணிப்பில் மதிமுக, தேமுதிக ஆகிய மாநிலக் கட்சிகளோடு அகில இந்தியக் கட்சியான பாஜகவும் சேர்ந்துகொண்டது. அந்தக் கட்சிகள் எடுத்த முடிவு அவற்றின் அரசியல் நிலையை சார்ந்த ஒன்று. அது அவர் களின் உரிமை.

அன்றைய கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட ஆறு தீர்மானங்களில் நான்கு இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர் பானவை. ஐந்தாவது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றியது. ஆறாவது தமிழக எம்.பி.க்கள் என்ன நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அறிவுறுத்துவது.

இலங்கைத் தமிழ்மக்கள் தொடர்பான நான்கு தீர்மானங்கள் எடுத்துவைத்த கோரிக்கைகள் வருமாறு:

– இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும்.

– சொந்த மண்ணிலேயே அகதி களைவிட மோசமான நிலையில், துன்ப துயரங்களுக்கு இலக்காகி நிற்கிற இலங்கைத் தமிழ்மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

– இதற்காக இலங்கை அரசை ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி களை நீடிக்கக்கூடாது.

– பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா நீட்டிக்க வேண்டும்.

– இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முன்வரும் அமைப் புகள் திரட்டி அனுப்பும் உணவு, உடை, மருந்து போன்றவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் மூலமாக அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேர்க்கப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் எதுவும் நெறி யற்றதோ, நகைப்பிற்கிடமானதோ, மட்ட மானதோ அல்ல என்பதை விளக்கத் தேவையில்லை. 1983 இல் இலங்கை யில் தொடங்கிய இனமோதல் நீடித்து வரும் கடந்த 25 ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்து வந் துள்ள ஊசலாட்டமற்ற அரசியல் நிலை பாட்டுக்கும், இந்தக் கோரிக்கைகளுக் கும் எந்த முரண்பாடும் இல்லை.

ஐந்தாவது தீர்மானம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படு வதைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது. இதிலும் ஆட்சேபகரமான அம்சம் எது வும் இல்லை என்பது உள்ளங்கை நெல் லிக்கனி.

இந்தத் தீர்மானங்களில் முன்வைக் கப் பெற்றுள்ள கோரிக்கைகள் மீது நட வடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கால அவகாசம் அளித்து, அதற்குப் பின்னரும் உறுதியான செயல் பாட்டில் மத்திய அரசு இறங்க மறுக்கு மேயானால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண் டோடு பதவி விலக நேரிடும் என்று அறி வுறுத்துவது – எச்சரிக்கை கூட அல்ல – இறுதித் தீர்மானம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத மதிமுக வும் இந்தப் பதவி விலகலுக்குத் தயார் என்று அறிவித்துள்ளது. எனினும் இந்த தீர்மானத்தையொட்டிய அரசியல் விமர்ச னங்களைப் பல்வேறு கட்சிகளும் வெளி யிட்டு வருகின்றன. அந்த விமர்சனங் களை மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவரவர் நிலைபாட்டுக்கேற்ப அரசியல் ரீதியாக எதிர்கொள்ளக் கட மைப்பட்டவை. அதுவும் தொடரும். அந் தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றிய கட்சி களுக்கு இடையிலேயும் இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான பல்வேறு அம் சங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு என்பது நாடறிந்த விஷயம். அந்த அம் சங்கள் தொடர்பான அரசியல் விவாதங் களும் தொடரவே செய்யும்.

‘மற்றவர்கள் தேர்ந்தெடுத்த இன வெறிப் பாதை’ என்று குறுஞ்செய்தி அனுப்பிய தோழர் குறிப்பிடுவது, அனைத் துக் கட்சிக் கூட்ட முடிவில் எங்கும் இடம்பெறவில்லை. ஆனால்,

– இந்திய அரசு தமிழ் ஈழத்தைத் தனிநாடாக உடனே அங்கீகரிக்க வேண்டும்.

– ஒன்றுபட்ட இலங்கைக்குட்பட்ட அரசியல் தீர்வு சாத்தியமே அல்ல.

– தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழ் இனப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

– விடுதலைப் புலிகளுக்கு முழு மையான ஆதரவு. அவர்களுக்கு எதிரானஅரசியல் விமர்சனங் களைக்கூட சகித்துக் கொள் ளாமல் தீவிர எதிர்ப்பைக் காட்டு கிற போக்கு

என்பன போன்ற நிலைபாட்டைத் தொடர்ந்து எடுத்து வருகிற அரசியல் கட்சிகளும், இதர அமைப்புகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அவற்றின் கருத் துக்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி கடந்த காலங்களிலும் எதிர்வினை ஆற் றிவந்துள்ளது, இனியும் அது தொடரும்.

ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளிட்ட, முழுமையான சுயாட்சி அதிகாரங்க ளோடு கூடியதாகத் தமிழின மக்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் செயல்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய அரசியல் தீர்வையே மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. கோவையில் இந்த ஆண்டுத் துவக்கத்தில் நடை பெற்ற கட்சியின் 19 வது மாநாட்டுத் தீர் மானத்திலும் இதுவே இடம் பெற்றுள்ளது. அண்மையில் அக்-12-14 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட அறிக்கையிலும் இது தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய இலங்கை அதிபர் ராஜ பக்சே விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்தது. இலங்கையில் ஆளும் கட்சியான இலங் கை சுதந்திரக் கட்சிக்கும், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து எட்டப்பட்ட உடன்பாடு முறிவு: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உதவிய நார்வே சமரசத் தூதுக் குழு வெளியேறியது. போர்நிறுத்தத்தை மேற்பார்வையிட்டு வந்த சர்வதேச கண் காணிப்புக்குழு விலகல். இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், தற்போது வடக்கே கிளிநொச்சி வரையிலும் ராஜபக்சே அரசு தொடுத்துள்ள இராணுவத் தாக்குதல்கள், விடுதலைப்புலிகள் தொடர்ந்து மேற் கொண்டுவரும் கொரில்லாப் போர்முறை நடவடிக்கைகள் – இவை யாவுமே அரசி யல் தீர்வுகாணும் முயற்சிகளுக்கு நேரிட் டுள்ள பின்னடைவுகளே.

‘இராணுவத் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி, விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டு அதற்குப் பின்னர் இலங்கைத் தமிழினப் பிரச்ச னைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வு காண் பேன்’ என்று அதிபர் ராஜபக்சே கூறுவது ஏற்புடையதல்ல. மீண்டும் ஒரு போர் நிறுத்தமும், அதையடுத்துப் பேச்சுவார்த் தையுமே அரசியல் தீர்வுகாண வழியாக அமையும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து. இதற்கு விடுதலைப் புலிகளும் அவர்களின் கொரில்லாப் போர் நடவடிக் கைகளை நிறுத்திவைத்து, ஜனநாயக அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

இன்றைய மத்திய அரசு ‘ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளிட்டு, பேச்சுவார்த் தை மூலம் அரசியல் சட்ட அடிப்படை யிலான அரசியல் தீர்வு’ எட்டப்பட வேண் டும் என்பதே தனது நிலைபாடு என்று அறிவித்துள்ளது. ஒருபக்கம் அரசியல் தீர்வை வலியுறுத்திக்கொண்டே மறுபக் கம் ராணுவத் தாக்குதலை நிறுத்தாமல் தொடருகிற இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியான உதவிகளையும், ஒத்துழைப் பையும் மத்திய அரசு நல்குவது நியாயப் படுத்த முடியாத ஒன்று. சார்க் கூட்ட மைப்பு உறுப்பு நாடு என்ற முறையில் இலங்கையுடன் பலவிதங்களிலும் பொரு ளாதார உதவியும், ஒத்துழைப்பும் நீட்டித்து வருகிற இந்திய அரசு ராஜபக்சே அரசை ராணுவத் தாக்குதலைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தார்மீக ரீதியிலான நிர்பந்தத்தைச் செலுத்த வேண்டும்.

இந்த நிலைபாட்டுக்கு இசைவான ஒன்றாகவே அனைத்துக் கட்சிக் கூட் டத்தின் கோரிக்கைகள் அமைந்துள்ளன. இவற்றை அங்கீகரித்ததில் எவ்வித சந்தர்ப்பவாதத்திற்கும் மார்க்சிஸ்ட் கட்சி இடமளிக்கவில்லை என்பதை உறுதி படப் பதிவு செய்வது அவசியம்.

இறுதியாக ஒரு விஷயம். அதிமுக பொதுச் செயலாளர் அண்மையில் விடுத்த அறிக்கையிலும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான சி.மகேந்திரன் கட்டுரையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ‘சுய நிர்ணய உரிமை’ அடிப்படையிலான தீர்வு என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘சுயநிர்ணய உரிமை’ என்பது ஒன் றுபட்ட இலங்கையிலிருந்து பிரிந்து சென்று தனி நாடாக இயங்குவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றால் அது பிழைபட்ட கருத்தாகும். மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் அரசியல் தீர்வு இதை ஏற்கிற ஒன்றல்ல!

-தீக்கதிர்-