இலங்கைத் தமிழர்களுக்கு எதிரி யார்? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கடும் போட்டி?

போரில் மக்கள் கொல்லப்பட்ட போது போர் என்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்றார் ஜெயலலிதா. கருணாநிதியே போரே அங்கு நடைபெறவில்லை மழை விட்டபின்னரான தூவானம்தான் அங்கே என்று பல்லாயிரம் மக்கள் படுகொலையை நியாயப்படுத்தினார். சுமார் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட காரணமாக இருந்த கருணாநிதி. இன்று தனது தூரோகங்களை இன்னொரு மக்கள் விரோதத் தலைவரான ஜெயலலிதாவுக்கும் தமக்குமான பிரச்சனையாக திசை திருப்புகிறார். இது தொடர்பாக இருவரும் அடிக்கடி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்க இது தொடர்பாக ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியும் போர் குற்றவாளிதான் என்று குற்றஞ்சாட்டி நான் வெளியிட்ட அறிக்கையை கண்டித்து முதல்வர் கருணாநிதி எதிர்த்தாக்குதல் தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். கருணாநிதியின் இந்த அறிக்கை உண்மையை மூடி மறைப்பதாக உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து, என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். இதில் எனக்கு எவ்வித வியப்பும் இல்லை. ராஜீவ்காந்தி கொலையாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையால் கருணாநிதி அடைந்த ஆத்திரம், இன்று வரை அடங்கவில்லை. இதை தனது அறிக்கையின் மூலம் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார். இதிலிருந்தாவது தங்களது கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மையை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். போர் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்று நான் கூறியது உண்மைதான். எல்லாப் போரிலும் இதுதான் நடைபெற்றது. ஆனால், போர் முடிந்து விட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதையும், நான் கூறியதையும் ஒப்பிட்டுப் பேசுகிறார் கருணாநிதி. இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொன்றுக் குவித்ததை கருணாநிதி நியாயப்படுத்துகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 1980-ம் ஆண்டிலிருந்து எம்.ஜி.ஆரும், நானும் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தோம். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்த பின், விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது. அப்போது முதல் நான் விடுதலைப் புலிகளை எதிர்த்து வருகிறேன். ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு ராணுவத்தின் முன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.