இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தான் நிழல் யுத்தம்.

29.08.2008.

சென்னை: இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்தும் தாராளமாக ஆயுதங்களை வழங்குகின்றன. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகள் மறைமுகமாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சென்னையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:

இலங்கை இனப் பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமை பிரச்சினையாகும். ஆனால், இப்பிரச்சினையை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஷ்டமானது. இலங்கையில் தமிழ் மொழிக்கு, தமிழ் மக்களுக்கு எவ்வித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை.

இலங்கையில் அரச படையினரின் மனித உரிமை மீறல்களால் இதுவரை 75 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி விட்டனர். தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களை அரசு கட்டாயமாக தொடர்ந்து குடியேற்றம் செய்து வருகிறது. இதனால் சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும் இராணவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன. இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. போர் ஓய்வதையோ அல்லது அமைதி ஏற்படுவதையோ இந்நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தை இந்த நாடுகள் தொடர்ந்து நடத்துகின்றன.

எனவே, பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கக் கூடாது. அதிகாரப் பகிர்வு திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தனி ஈழம் என்பது புலிகள் உள்ளிட்டோரது கோரிக்கையாக இருக்கலாம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனில் தமிழ்நாட்டைப் போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வரவேண்டும். இல்லையெனில் இலங்கை பிளவுபடுவதை யாராலும் தடுக்க இயலாது.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அடையாள அட்டை வழங்குவது சரியானதல்ல. கச்சதீவை மீட்பது குறித்து தமிழகத் தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தால் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் பலம் பாராளுமன்றத்தில் குறைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.