இலங்கைக்கு கடன் வழங்குவதை நியாயப்படுத்துகிறது ஐ எம் எப்.

 

இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை மீறி அந்நாட்டுக்கு 2.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் நியாயப்படுத்தியுள்ளது.

இந்தக் கடன் இலங்கைக்கு வழங்கப்படாவிட்டால், அது ஏற்கனவே உள்ள தனது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படும் என்றும், அது இலங்கையின் பொருளாதாரத்தின் மீதும் அங்குள்ள மக்களின் மீதும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தத் திட்டத்துக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான பிரெயின் அட்கின் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பில், மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரெயின் அட்கின் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில், இலங்கைக்கான கடனுதவி வழங்கும் முடிவுக்கு அமெரிக்காவும், பிரான்சும் எதிர்ப்பு தெரிவித்தன.

விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரில் அரசு வெற்றி பெற்ற போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்த இரு நாடுகளும் தமது கவலைகளை வெளியிட்டிருந்தன.

அந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் இதற்கு தாங்களே பொறுப்பு என்று கூறப்படுவதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

BBC.