இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் நாடுகளிடமிருந்து பயிற்சி தொடர்பான கோரிக்கைகள்!!!:ஜெனரல் ஜகத் ஜயசூரிய.

வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் தென்கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்சியளிப்பதற்கான சாத்தியம் அநேகமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்குமாறு அந்நாடு விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை சாதகமான விதத்தில் பதில் அளிக்கும் என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை இலங்கை தோற்கடித்ததையடுத்து தனது இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பிடம் இஸ்லாமாபாத் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது படையினருக்குப் பயிற்சியளிக்க அவர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக ஏற்கெனவே பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருப்பதாக இராணுவத் தளபதி பி.பி.சி.க்குக் கூறியுள்ளார். “நாங்கள் சாதகமான பதிலை வழங்குவோம்’ என்று அவர் கூறியுள்ளார்.

ஆறு வாரங்கள் வரையிலான விசேட பயிற்சி நெறிகளை இலங்கை இராணுவம் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்த இராணுவத் தளபதி ஆர்வம் காட்டும் இராணுவங்களின் சிறிய குழுக்களுக்குப் பயிற்சியை வழங்க முடியுமெனக் கூறியுள்ளார்.

கிளர்ச்சிக் குழுவை இராணுவம் எப்படி தோற்கடித்தது என்பது தொடர்பான நடைமுறைச்சாத்தியத்தை அறிவதில் வெளிமட்டத்திலிருந்து ஆர்வம் காட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இராணுவக் கோட்பாடுகளைத் தயாரிக்க இராணுவம் இப்போது விரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் இராஜதந்திர தொடர்பாடல் மூலம் அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் உட்பட ஏனைய நாடுகளிடமிருந்து பயிற்சி தொடர்பான கோரிக்கைகள் இலங்கைக்குக் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் வட பகுதியில் மீளக்கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தானியருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை இராணுவத் தளபதி நிராகரி த்திருப்பதுடன் தென்கிழக்குப் பகுதியில் பயிற்சி வழங்குவதற்கான சாத்தியம் அதிகளவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி உட்பட வட பகுதிகளில் நிரந்தர இராணுவத் தளங்கள் அமைக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

இலங்கையும் பாகிஸ்தானும் நீண்ட கால சுமுகமான நட்புறவைக் கொண்டுள்ளன.

யுத்தத்தின் போது மனிதாபிமான சட்ட விதிகள் மீறப்பட்டதாக அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் விமர்சித்து மே மாத பிற்பகுதியில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையைத் தோற்கடிக்க பாகிஸ்தான், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கொழும்புக்கு உதவியிருந்தன.

ஆனால், இலங்கையில் அதிகளவு செல்வாக்கைச் செலுத்தியுள்ள இந்தியாவுக்கு பாகிஸ்தான் இலங்கையில் இராணுவப் பயிற்சி பெறுவது தொடர்பான செய்திகள் அசௌகரியமாக இருக்கக்கூடும்.