இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்.

இந்திய அரசின் ஆதரவோடு தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படைத் தளபதி உண்மை அறியும் ஆணையத்தின் முன்னால் சாட்சியம் அளிக்கும் போது கூட தமிழக மீனவர்களைத் திருடர்கள் என்று சித்தரித்திருந்தார். இந்திய அரசோ தமிழக அரசோ தமிழக மீனவர்களைப் பாதுக்காப்பதற்குப் பதிலாக இலங்கை அரசின் அத்துமீறலை நியாயப்படுத்தும் போக்கையே கொண்டிருக்கிறார்கள். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைத் தாக்கிய நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமேசுவரத்தில் இருந்து செப். 13-ம் தேதி சுமார் 500 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து விட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை கரை நோக்கித் திரும்பி வந்தன.அப்போது கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகை மடக்கிப் பிடித்தனர்.இதில் தங்கச்சிமடம் சந்திரபோஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்த திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, செல்போன், இறால் மீன்களை பறித்து கொண்டு விரட்டியனுப்பினர்.மேலும், கிளைட்டஸ் என்பவரின் படகில் இருந்த இறால் மீன்களைப் பறித்துக் கொண்டு, படகில் இருந்த 4 மீனவர்களை கயிற்றால் தாக்கியுள்ளனர். இதுபோன்று சுமார் 10 படகுகளில் இறால் மீன்களைப் பறித்துக் கொண்டு விரட்டியனுப்பினர். இதனால் மீனவர்களுக்கு ரூ. 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இலங்கைக் கடற்படையின் திடீர் தாக்குதல், விலையுர்ந்த மீன் மற்றும் பொருள்கள் கொள்ளையால் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

One thought on “இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்.”

  1. இல்லாதவர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை.

    பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

Comments are closed.