இராணுவ வெற்றிகள் பேச்சுவார்த்தையில் சாதகமான நிலையை ஏற்படுத்துமென நினைப்பது முட்டாள்தனமானது-ஐ.ஆர்.ஏ.யின் சிரேஷ்ட தலைவர் மார்ட்டின் மக்கினஸ்

7/8/2008 11:48:23 AM – இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மேசையிலேயே தீர்வு கிடைக்கும். அதனை வேறு எங்கும் பெறமுடியாது என ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ.) சிரேஷ்ட தலைவர் மார்ட்டின் மக்கினஸ் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியதாவது: அதிகமான இராணுவ வெற்றிகளை பெறுவதன்மூலம் சமாதான பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான நிலையேற்படும் என அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் நம்புகின்றனர்.

இந்த எண்ணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளால் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். இருதரப்பும் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடை அனுசரணையாளராக்கி சமாதான செயன்முறைகளை ஒழுங்குபடுத்துவதை எளிதாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு தரப்பு மற்றைய தரப்பை இராணுவ ரீதியில் வெற்றி கொள்ளும் மனப்பாங்கை கைவிட வேண்டும். இலங்கை பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காணமுடியாது. சம்பந்தப்பட்ட தரப்புக்களும் மக்களுமே தீர்க்க முடியும். சமாதான செயற்பாடுகள், முரண்பாட்டுத் தீர்வு நடவடிக்கைகளின்போது தலைமைத்துவம் மிக முக்கியமானதாகும்.தீர்வு தொடர்பில் தலைமைத்துவத்திற்கு உள்ள விருப்பம், முயற்சி, அங்கீகரிக்கும் தன்மை என்பவற்றின் மூலம் தீர்வு சாத்தியமாகும்.இருதரப்பும் அமர்ந்து கலந்துரையாட வேண்டும். ஒரு தரப்பு மற்றைய தரப்பின் கருத்துக்களை மதிக்க வேண்டும். என்று கூறியுள்ளார் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ) சிரேஷ்ட தலைவரான மார்ட்டின் மக்கினஸ் அவ்வமைப்பின் தளபதியாகவும் செயற்பட்டுள்ளார். பின்னர் சமாதான செயற்பாடுகளின்போதும் ஐ.ஆர்.ஏ.யிற்கு தலைமை வகித்தார். தற்போது அயர்லாந்தின் பிரதி முதலமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.