இராணுவ மயமாகும் வன்னி

வன்னிப் பகுதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்தத் தகவலை வெளியிட்டார்.
இராணுவத் தளபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் முதல் தடவையாக இன்று (20) ஜகத் ஜயசூரிய ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான தேவைகள்

இருக்கின்றன. எனவே இராணுவத்திற்கு 20 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையில் புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவும் ஜகத் ஜயசூரிய கூறினார்.
விடுதலைப் புலிகளுடனான போரில் பெரும் எண்ணிக்கையான படையினர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் ஓய்வுபெற்றுக் செல்கின்றனர். இதனால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடத்த வேண்டியுள்ளது என ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

தற்போது தரைப்படையினரின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தபோதும் அவர்களில் சண்டையிடும் வலுவுள்ள படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதுடன் கள நிலைவரமும் சிக்கலானது என்றார் அவர்.

உறங்குநிலையில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் நாட்டில் இன்னும் இருக்கிறார்கள் எனத் தெரிவித்த ஜகத் ஜயசூரிய, எனினும், அந்த அமைப்பின் இடைநிலைத் தளபதிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறினார்.

கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா பல வருடங்களாக உதவி வருகின்றது என்றும், அந்த உதவிகள் இனியும் தொடரும் என்றும் தெரிவித்தார்.