இராணுவத் தளபதியின் கடும் போக்கான கருத்துத் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் வெளியிடத் தயங்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் .

05.09.2008.

இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான அசாத் சாலியின் அலுவலகத்தில் நேற்று அனைத்துக் கட்சிகளின் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரஜாப்தீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சஹீத், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரம பாகு கருணாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். அமீன் உட்பட பல சிவில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இறுதியாக ஐ.நாவில் பேசிய போது இலங்கையிலுள்ள சகல இனமக்களும் சமமாக பேணப்படுகின்றென கூறிய நிலையில் அதனை மீறி இராணுவத் தளபதி பேசியுள்ளமை தொடர்பாகவும் அது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்துமே நேற்றைய கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்த அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில்;

நாம் இக் கூட்டத்தினை திடீரென்று நடத்தினோம். அனைத்துக் கட்சிகளும் அழைப்பு விடுத்ததற்கு இணங்க அரசு தரப்பினர் மற்றும் ஹெல உறுமய தவிர ஏனைய கட்சியினர் இக்கூட்டத்தில் பங்குபற்றி தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

சிறுபான்மை இனத்துக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் இவ்வாறான சொற்பிரயோகங்கள் தொடர்பில் அரசில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் வரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது பதவி பறிபோய்விடக் கூடாது என்ற நிலைப்பாட்டுடனேயே இராணுவத் தளபதியின் கடும் போக்கான கருத்துத் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் வெளியிடத் தயங்குகின்றார்கள்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்பாகவும் நடவடிக்கையெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.