இரண்டு கால்களையும் இழந்துள்ள மாணவன் கல்வியைத் தொடர இராணுவம் மறுப்பு.

 

யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ள சிவபாதம் பிரசாத் என்ற இந்த மாணவன் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது வவுனியா முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2பி சி என்ற பெறுபேறுகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தி்ன் மருத்துவ பீடத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார்.

பல்கலைக்கழகக் கல்வி நெறி ஆரம்பமாவதற்கு 15 நாட்கள் இருக்கையில் கடந்த 08.08.2008 ஆம் திகதி ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த நிலையில் தெய்வாதீனமாக இவர் உயிர் தப்பியுள்ளார். இதனால் குறித்த திகதியில் பல்கலைக்கழகத்திற்கு இவரால் செல்ல முடியாமல் போனது. இதன்பின்னர் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் இவர் 2009 ஆம் ஆண்டு கல்விநெறியில் இணைந்து கல்விகற்கலாம் என பல்கலைக்கழகத்தினால் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள போதிலும், இவர் முகாமிலிருந்து வெளியில் செல்வதற்கு இராணுவத்தினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள புதிய மாணவர்களுக்கான பாடநெறிகள் கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ள போதிலும், இவர் அங்கு செல்வதற்கான அனுமதி இராணுவத்தினரால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு இவர் சார்பில் செய்த விண்ணப்பங்கள் உரிய சிவில் அதிகாரிகளினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுடன், இவர் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளதை யாழ் பல்கலைக்கழக அதிகாரிகளும் உரிய முறையில் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், எனினும் இவர் இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியேறிச் செல்வதற்கான அனுமதியை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.