இன்றைய சர்வதேச நிலைமைகள் : புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின்
4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை
இன்றைய சர்வதேச நிலைமைகள்

கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி தனது மாநாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்றைய உலகின் ஏகபோக அரசுகள், நாடுகளின் அரச அதிகாரங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் குறித்து ஆராயும் இந்த அறிக்கை சீனா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் குறித்த தனது பார்வையை முன்வைக்கிறது. அறிக்கையின் முழுமை கீழே:

தோழர்களே!

us_imperialismஇன்று நிலவி வரும் சர்வதேச நிலைமைகள் பற்றி மாக்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை அடிப்படையிலான எமது கட்சியின் புரட்சிகர கண்ணோட்டத்தை முன்வைப்பது அவசியமாகிறது. இன்னமும் உலக மக்களும் நாடுகளும் ஏகாதிபத்திய சகாப்தத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஏகாதிபத்தியம் பற்றி நாம் தெளிவுடனும் தூரநோக்குடனும் இருப்பது அவசியமாகும். தோழர் லெனின் வகுத்தவையான உலகின் நான்கு அடிப்படை முரண்பாடுகளை இவ்வேளை நினைவு கொள்ளல் வேண்டும். அவையாவன: 1. மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையிலான முரண்பாடு. 2. ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்படும் தேசங்கள்-மக்களுக்கிடையிலான முரண்பாடு. 3. ஏகாதிபத்திய–முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான முரண்பாடு. 4 சோசலிசத்துக்கும் முதலாளியத்துக்குமிடையிலான முரண்பாடு. இவற்றுடன் இன்றைய சூழலில் ஏகாதியபத்தியத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான முரன்பாடு பற்றி உலக அளவில் மாக்சிச லெனினிசவாதிகளினால் விவாதிக்கப்பட்டு வருவதும் கவனத்திற்குரியதாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் ஆளும் வர்க்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளும் மேற்குறிப்பிட்ட ஏகாதிபத்திய நிலைப்பாட்டை முன்னெடுக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் சமகால நிகழ்ச்சி நிரலே உலகமயமாதலாகும். அதன் கீழான நவதாராள பொருளாதாரம் முழு உலகையும் பற்றிப் பீடித்துள்ளது. இவற்றின் ஊடே மூலதனத்தின் விரிவாக்கமும் நாடுகளின் மூல வளங்களின் சூறையாடலும், சுரண்டலும், லாப வெறியும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றைச் சாத்தியமாக்க ஏகாதிபத்தியம் யுத்தம் உட்பட அனைத்து வழிமுறைகளையும் தனது நிகழ்ச்சி நிரலில் முன்னெடுத்து வருகின்றது. ஆதலால் ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமே உலக மக்களின் பிரதான எதிரியாக இருந்து வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் உலக நிலைமைகளில் அடிப்படையான மாற்றமென எதுவும் நிகழாவிடினும் அதற்கு முந்திய தசாப்தத்தில் விருத்தி பெற்ற போக்குகள் மேலும் முனைப்புற்றுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றத் தவறியபோதும், தொடர்ந்தும் ஆக்கிரமிப்புப் போர்களைத் தனியாகவும் பிற ஐரோப்பிய நாடுகளின் உதவியுடனும் தொடுத்து வந்துள்ளது. அமெரிக்க தலையீட்டின் தீவிரத்தை மத்தியகிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அதிகம் காணமுடிகிறது. மாக்சிச லெனினிசவாதிகள் சுட்டிக்காட்டியவாறு ‘அரபு வசந்தம்’ என்று அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சியின் வெற்றி வெகுவிரைவிலேயே கவிழ்க்கப்பட்டது. எகிப்தில் குறுகிய காலத்திற்கு நிலைத்த இஸ்லாமிய ஆட்சியுடன் அமெரிக்கா சமரசமாகி அந்த அரசாங்கம் இராணுவத்துடன் ஒத்துழைக்கும் ஒரு நிலையைத் தோற்றுவித்தது. அதன் பின்பு இராணுவம் அந்த ஆட்சியைக் கவிழ்த்தது. இப்போது முன்னர் ஆட்சியிலிருந்த முபராக்கை விடத் தீவிரமாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடன் ஒத்துழைக்கும்ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சி உருவாகியுள்ளது. அண்மைக்காலமாக காஸாவில் நடக்கும் இஸ்ரேலிய படுகொலையை நியாயப்படுத்துமளவுக்கு எகிப்திய ஆட்சி சீரழிந்துள்ளது.

துனீசியாவில் ஒரு வலுவான இடதுசாரிப் போக்கு இருந்து வந்ததால், அமெரிக்கா தான் விரும்பியவாறான ஒரு சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவர இயலாவிட்டாலும் மேற்குலகுடன் சமரசமாகக் கூடிய ஒரு மிதவாத இஸ்லாமிய ஆட்சியைப் பேண மேற்குலகிற்கு இயலுமாகியுள்ளது.

யெமனில் இருந்த சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்க்க மக்கள் நடத்திய போராட்டம் ஒரு வருடகாலத்தின் பின்பு ஒரு சர்வாதிகாரியின் இடத்தில் அமெரிக்காவுக்கும் சவூதி அராபியாவுக்கும் உடன்பாடான இன்னொரு சர்வாதிகாரியை மட்டுமே ஆட்சிக்குக் கொண்டு வந்தது. பஹ்ரேனில் மக்களின் எழுச்சி சவூதி அராபிய ராணுவ உதவியுடன் கொடுமையாத் தாக்கி முறியடிக்கப்பட்டது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல, லிபியாவில் மேற்குலகு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது. அதன் பயனாக, கடாஃபியின் ஆட்சி கவிழ்ந்தாலும் இன்றுவரை லிபியாவில் ஒர் நிலையான ஆட்சியை நிறுவ இயலவில்லை. லிபியாவில் கடாஃபிக்கு எதிராக வழங்கப்பட்ட ஆயுதங்கள் வட ஆபிரிக்காவில் லிபியாவை அண்டிய நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குப் பயன்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, மாலியின் வடபகுதியில் இன்னமும் தொடரும் ஆயுதக் கிளர்ச்சி முக்கியமானது.

அமெரிக்கா இதுவரை சாதித்ததெல்லாம் தனக்கு எதிரான ஆட்சிகளைக் கவிழ்த்ததும் தனக்கு ஆதரவான ஆட்சிகள் இருந்த இடத்தில் அவ்வாறான ஆட்சி தொடர்வதை உறுதிப்படுத்தியதுமேயாகும். லிபிய ஆட்சிக் கவிழ்ப்பின் உந்துதலால் சிரியாவிலும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த அமெரிக்கா போட்ட திட்டம் வெல்லவில்லை. மாறாக சவூதி அராபியா மூலம் வளர்க்கப்பட்ட இஸ்லாமியவாத அமைப்பான ‘ஈராக்கிலும் சிரியாவிலுமான இஸ்லாமிய அரசு’ (ஐ.எஸ்.ஐ.எஸ்.) என்ற பயங்கரவாதக் குழு சிரியாவில் தனது போட்டி அமைப்புக்களை அழித்து சிரியாவில் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தவதற்கும் மேலாக, இவ்வருட நடுப் பகுதியில் ஈராக்கினுள் ஊடுருவிப் பாரிய அளவிற் பிரதேசங்களைப் பிடித்துள்ளது. அதன் பயங்கரவாதமும் மதவெறி பிடித்த படுகொலைகளும் ஒருபுறமிருக்க, அதன் தலைவர் தன்னை முழு இஸ்லாமிய உலகினதும் கலிபா என அறிவித்துள்ளமை ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஈராக் ஆட்சிக்குத் தொல்லை கொடுப்பதையும் அமெரிக்காவின் ஆதரவில் அமைந்த குர்திய சுயாட்சிக்குத் தொல்லை கொடுப்பதையும் சாட்டாக்கி, 2011இல் வெளியேறிய அமெரிக்கப்படைகளை மீண்டும் ஈராக்கிற்குள் புகுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

பாரசிக வளைகுடாவில் அமெரிக்க இருப்பை உறுதிப்படுத்தும் தேவை அமெரிக்காவுக்கு உண்டு. அதனால் ஈரானில் அமெரிக்க சார்பான ஆட்சி மாற்றம் ஒன்று வரும் வரை அமெரிக்கா ஈராக்கில் தனது இருப்பைத் தொடர விரும்புகிறது. அத்துடன் சிரியாவில் ஆட்சி மாற்ற முயற்சி வெல்லாத நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பை முற்றாக அழிக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே மத்திய கிழக்கை ஒரு நிரந்தரப் போர்க்களமாகப் பேணுவதிலேயே அமெரிக்காவின் இப்போதைய கவனம் குவிந்துள்ளது எனலாம்.

லத்தின் அமெரிக்காவில் அமெரிக்கா கொண்டிருந்த பிடி மிகவும் தளர்ந்துவிட்டது. எனவே அமெரிக்கா லத்தின் அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் தன்னாலானளவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் தீவிரப்படுகிறது. ஹெயிற்றியிலும் ஹொண்டூராஸிலும் உருகுவேயிலும் அது வென்ற போதிலும், அதனால் அந் நாடுகளில் மக்களின் ஆதரவுடைய ஆட்சிகளை நிறுவ இயலவில்லை. அண்மையில் எல்சல்வடோரில் தேர்தல் மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஏகாதிபத்தியத்திற்கு உடன்பாடானதல்ல. எனினும் வெனிசுவேலாவில்,குறிப்பாக ஹியுகோ சாவெஸின் மறைவையடுத்து, அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் உள்நாட்டுக் குழப்பங்களாக வெளிப்பட்டன. அவை தோற்றபோதும் அமெரிக்காவின் குழிபறிப்பு முயற்சிகள் தென்னமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் கரிபியன் பிரதேசத்திலும் ஓயப்போவதில்லை.

அமெரிக்காவின் முக்கியமான கவலை ரஷ்யா ஒரு ராணுவ வல்லரசாக மீள எழுவதையும் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எழுவதையும் பற்றியது. ஏனெனில் இவை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்குக் கடுமையான சவால்களாக அமைக்கின்றன. பெரிய கடனாளி நாடாகிவிட்ட அமெரிக்கா, வெகு விரைவில் உலகின் அதி வலிய பொருளாதாரம் என்ற தகுதியை இழக்கவுள்ளது. அதன் உலக ஆதிக்கம் தொடர்ந்தும் அதன் அரசியற் செல்வாக்கிலும் தங்கியிருக்க இயலாது. எனவே அது அதன் இராணுவ வலிமையிலேயே பெரிதும் தங்க வேண்டியுள்ளது. அதனாலேயே ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது பாதுகாப்புத் திட்டத்தை முன்வைத்து அதனை வலுப்படுத்த முன்னிற்கிறது.

சீனாவும் ரஷ்யாவும் தம்மை மேலும் வலிமைப்படுத்த முன்னர் அவற்றைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தும் அமெரிக்கத் திட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் ஐரோப்பிய ஆசிய நகர்வுகளை நோக்க வேண்டும். அதேவேளை, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் மூலதனம் லாப நோக்கில் தனது தொழில் உற்பத்தியை மலிவான கூலி உழைப்புள்ள நாடுகளுக்கு இடம்பெயர்த்ததால், மேற்குலக நாடுகள் தமது உற்பத்தித் தளங்களை இழந்து மூன்றாமுலக நாடுகளின் உற்பத்திகளையே பெரிதும் நம்பியுள்ளன. சீனாவின் இன்றைய தொழில் வளர்ச்சி இவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைச் சார்ந்து விருத்தி பெற்றது. அதையொட்டிச் சீனா தனது மூலவளங்களுக்கு ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் மேலும் மேலும் தங்கியிருக்கிறது. இதனால், சீனா, ஆபிரிக்க நாடுகளிலும் தென்னமெரிக்காவிலும் நேரடி, மறைமுக முதலீடுகளில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. சீனாவின் அணுகுமுறை மேலை நாடுகளின் அணுகுமுறையை விடக் கவர்ச்சிகரமாக இருப்பதன் முக்கிய காரணம், சீனா நாடுகளின் உள் அலுவல்களிற் குறுக்கிடாமை எனலாம். எனவே, குறிப்பாக சகாராவுக்குத் தெற்கான ஆபிரிக்க நாடுகளில் வலுத்துவரும் சீனச் செல்வாக்கு, அமெரிக்காவின் ஆதிக்க நோக்கங்கட்கு இடையூறாக உள்ளது. அதன் பயனாக, இப்போது சீனாவுடன் நல்லுறவு பேணுகிற நாடுகளை அமெரிக்காஇலக்கு வைக்கிறது. அமெரிக்கா இப்போது அப்ரிகொம் எனப்படும் ஆபிரிக்காவுக்கான அமெரிக்க ராணுவ அமைப்பை ஆபிரிக்க மண்ணிலேயே நிறுவ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சென்ற சில ஆண்டுகளில் மேற்கு ஆபிரிக்காவில் ஐவரிகோஸ்ற், மாலி ஆகிய நாடுகளில் பிரான்ஸின் இராணுவத் தலையீடு நிகழ்ந்தது. அவை பிரான்ஸின் பழைய கொலனிகளாதலால் அங்கு பிரெஞ்சுப் படைகளை அனுப்புவது வசதியாக இருந்தது. எனினும் இப்போக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்பிரிக்காவுக்கான திட்டத்தின் ஒரு பகுதியே. ஆசியாவில், சீனாவில்; உள்நாட்டுக் கலவரங்களைத் தூண்டிவிடுவதில் தீவிரமாகச் செயற்பட்ட அமெரிக்கா, இப்போது சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகட்குமிடையிலான கடலெல்லைப் பிரச்சினைகளைப் பயன்படுத்திச் சீனாவை ஒரு போருக்குள் இழுக்கத் திட்டமிடுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்பு, அமெரிக்கா ரஷ்யாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, முன்னாள் வார்சோ உடன்படிக்கை நாடுகளை மட்டுமன்றி முன்னாள் சோவியத் குடியரசுகளையும் அமெரிக்கா தனது தலைமையிலுள்ள இராணுவக் கூட்டணியான நேற்றோவுக்குள் இழுந்துள்ளது. சில ஆண்டுகள் முன்பு ஜோர்ஜியக் குடியரசைஇணைக்க முயன்ற சூழலில் ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இவ்வருடம் அமெரிக்கத் தூண்டுதலால் உக்ரேனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. அதன் விளைவாக உக்ரேனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுச் சிக்கலும் தென், கிழக்கு உக்ரேனியப் பகுதிகளில் பிரிவினைக்கான செயற்பாடுகளும் ஐரோப்பாவை ஒரு போர் நெருக்கடிக்குள் உந்துகின்றன. மலேசியப் பயணிகள் விமானத்தை யூலையில் சுட்டு விழுத்தியவர்கள் உக்ரேனிய ஆட்சியாளர்களே என்றவாறே புதிய தகவல்கள் பலவும் உறுதி செய்கையில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கெதிரான தடைகளை விதிப்பதை ரஷ்யாவை ஒரு மோதலுக்கு இழுக்கும் முயற்சியாகவே காண வேண்டும்.

சீனாவையும் ரஷ்யாவையும் தீவிரமாக இலக்கு வைப்பததில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவசரத்துக்கும் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. 2008ம் ஆண்டு தொடங்கிய மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மேற்குலகு இன்னமும் மீளவில்லை. முதலாளியத்தின் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது ஏற்றுவதன் விளைவாக ஐரோப்பியநாடுகளில் மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர். குறிப்பாக, கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் பழைய திரிபுவாத இடதுசாரிகளை நிராகரிக்கும் புதிய இடதுசாரிப் போக்குக்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேவேளை, பொருளாதார நெருக்கடியால் ஃபாசிச சக்திகளும் இனவாதப் போக்குகளும் தலைதூக்குகின்றன. ஐரோப்பாவில் நிலவும் பொதுசன அதிருப்தி, ஒவ்வொரு நாட்டிலும் அடுத்தடுத்து ஆட்சிகளை மாற்றுவதற்கப்பால், இதுவரை ஒரு வலிய புரட்சிகர எதிர்ப்புச் சக்தியாக விருத்தி பெறவில்லை. சுருங்கச் சொன்னால். முதலாளியம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளை மோசமாக்கியுள்ளது என்பது பரவலாக உணரப்படுகிறது. சீர்திருத்தவாதக் கட்சிகளின் இயலாமை உணரப்படுகிறது. ஆனால் ஒரு உருப்படியான மாற்றம் பற்றிய உணர்வு மக்களிடையே போதியளவு வளரவில்லை. இருப்பினும் அந்நாடுகளின் மாக்சிச லெனினிச சக்திகள் கடும் பணிகளில்; ஈடுபட்டு வருகின்றன.

சோஷலிச அரசுகள் என்று சொல்லக் கூடிய கியூப, வடகொரிய அரசுகள் பல்வேறு குறைபாடுகளை உடையன என்பதால் அவற்றை நிராகரிப்பதும் கடுமையாக விமர்சிப்பதும் பற்றிய எச்சரிக்கை தேவை. இந்த அரசுகள் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் பலவாறான சர்வதேச நெருக்குவாரங்கட்கு உட்பட்டு வந்தவை என்பதையும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகள் இன்னமும் தொடர்கின்றன என்பதையும் நாம் மறக்கக்கூடாது. அதைவிட, உலகின் வலிய செய்தி ஊடகங்கள் அவை பற்றிய தகவல்களைத் திட்டமிட்டே திரித்து வெளியிடுவதைப் பற்றியும் நாம் கவனமாயிருக்க வேண்டும். எனவே இந்த நாடுகள் மீது மேற்குலகு தொடுக்கும் தாக்குதல்களை மக்களுக்கு விளக்கி அத் தாக்குதல்களை எதிர்ப்பதில் முன்னிற்பது சர்வதேச பாட்டாளிவர்க்க ஐக்கியத்திற்கு முக்கியமானது.

பாராளுமன்ற ஆட்சிமுறை மூலமோ தேர்தல் அரசியல் மூலமோ சோஷலிசத்தை அடைய இயலாது. எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சனநாயகத்தைக் காப்பாற்றுகிற பெயரில் இடதுசாரிப் போக்குள்ள ஆட்சிகளைக் கவிழ்க்க முயன்று வருவதைக் காண்கிறோம். லத்தின் அமெரிக்க நாடுகள் பலவும் நேரடியான அமெரிக்க மேலாதிக்கத்தைத் தூக்கியெறிந்தபோதும் அமெரிக்கக் குறுக்கீட்டைத் தவிர்க்கும் நிலையில் இல்லை. எனவே பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே ஒரு புரட்சிகரப் போராளி இயக்கம் செயற்படுகிற சூழல் கொலம்பியா வைவிட்டால் வேறு எந்த லத்தின் அமெரிக்க நாட்டிலும் இல்லை. எனவே தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அடையாளமுள்ள ஆட்சிகளைப் பற்றி நமது கணிப்பு அவை எவ்வளவு தூரத்துக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றன, எவ்வளவு தூரத்துக்கு உலகமயமாக்கலின் பாதிப்புகளினின்று விடுபட முயல்கின்றன, உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் நலன்கட்காக அவை எவ்வளவு தூரம் செயற்படுகின்றன, தேசிய வளங்களை அந்நிய, உள்ளுர்ப் பெருமுதலாளிய சக்திகளிடமிருந்து காக்க எவ்வளவு கடுமையாக முயல்கின்றன என்றவாறான அடிப்படைகளில் மதிப்பிடுவது அவசியமாகும்.

பின் தங்கிய பொருளாதாரத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு நாடு அந்நிய முதலீட்டையும் தனது மூலவளங்களின் ஏற்றுமதியையும் நம்பியிருக்கும் தேவையை ஏற்கும் அதேநேரம், தொடர்ந்தும் மூலவளங்களின் ஏற்றுமதியிலும் அந்நிய முதலீட்டிலும் தங்கியிருப்பது ஏற்கக் கூடியதல்ல. எனவே, நாடுகள் தமது மூலவளங்களின் ஏற்றுமதியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்ற அடிப்படையிலேயே அவற்றின் பொருளாதாரக் கொள்கையை மதிப்பிட இயலும், இவ்வகையில் வெனசுவேலாவின் நடைமுறையை நாம் பெருமளவும் ஆதரிக்கும் அதேவேளை,ஈக்குவடோர், பொலிவியா போன்ற நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சனங்களுடன் அங்கீகரிக்கலாம். விமர்சனங்களின் நோக்கம் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபடுவதை முதன்மைப்படுத்த வேண்டும். ஆனால் பிரேசில் போன்று நாட்டை மேலும் உலகமயமாக்கற் பொறிக்குள் தள்ளும் ஆட்சிகளை விமர்சிப்பதும் அவற்றின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகக் செயற்படுமாறு முற்போக்குச் சக்திகளை ஊக்குவிப்பதும் சரியானது.

இன்று மூலவளங்கள் மிக மோசமாகச் சூறையாடப்படும் நிலப்பரப்பாக சகாராவிற்குத் தெற்கான ஆபிரிக்கா உள்ளது. தென் சூடானின் பிரிவினைப் போரும் பிரிவினைக்குப் பின்பு இப்போது உக்கிரமாகியுள்ள உள்நாட்டுப் போரும் கொங்கோவில் இரண்டு தசாப்தங்கட்கு மேலாக உக்கிரமாக நடந்து இன்னமும் சரிவர ஓயாத உள்நாட்டுப் போரும் மேற்குலக நலன்களைக் கருதித் தூண்டப்பட்ட போர்களே. ஆபிரிக்காவின் வட பகுதியிலும் வட மேற்கிலும் இஸ்லாமிய தீவிரவாதம் உள்நாட்டு நெருக்கடிகட்குக் காரணமாகக் கூறப்பட்டாலும் பல இடங்களில் இஸ்லாமியத் தீவிரவாதமும் தீவிரவாத அமைப்புக்களும் அமெரிக்காவினதும் சவூதி ஆராபியாவினதும் கட்டாரினதும் ஆதரவுடனேயே வடிவம் பெற்றன. பின்னர் அவை அமெரிக்காவுக்கு எதிராகக் திரும்பின. அமெரிக்கா இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதாகக் கூறிக் கொண்டாலும், இன்னமும் பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இரகசியக் கூட்டாகவும் அதன் கருவியாகவும் இயங்குகிறது.

தேசிய இனங்களிடையிலும் இனக்குழுக்களிடையிலுமான முரண்பாடுகள் உள்நாட்டு போர்க்களமாக வளர்க்கப்படுவதைக் கடந்த சில தசாப்தங்களாகக் கண்டுள்ளோம். இது ஏகாதிபத்தியம் திட்டமிட்டே நடத்துகிற ஒரு காரியம் என்பது போக, உள்நாட்டுப் பேரினவாத முதலாளி வர்க்கமும் அதில் நன்மை காண முயல்வதைப் பல நாடுகளிலும் கண்டுள்ளோம். அண்மைக் காலங்களில் மதங்களிடையிலான வேறுபாடுகளும் மதப்பிரிவுகளிடையிலான வேறுபாடுகளும் கடும் மோதல்களாகவும் கொடிய ஒடுக்குமுறையாகவும் வடிவம் பெற்றுள்ளன. அமெரிக்க ஆசியுடன் ‘சனநாயகத்தை நோக்கி’ நகரும் மியான்மார் (பர்மா) இன்று பௌத்த மதவாத வன்முறைக்கு முஸ்லிம் சிறுபான்மையினரை இரையாக்குவது, அடையாள அரசியல் எவ்வாறு ஏகாதிபத்திய நலன்கட்கும் உள்நாட்டுப் பிற்போக்குவாதிகட்கும் உதவுகிறது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஆயுதமேந்திய மக்கள் விடுதலை இயக்கங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதி முதல் பெற்ற வெற்றிகளில் முக்கியமானது, நேபாள மாஓவாதிகளின் மக்கள் யுத்தத்தின் வெற்றியாகும். எனினும் மாஓவாதக் கட்சியில் நிலவிய சந்தர்ப்பவாதப் போக்குகளால் மாஓவாதக் கம்யூனிஸ்ட்டுக்கள் கணிசமான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். மாஓவாதிகளைப் பிளவுபடுத்துவதில் இந்திய மேலாதிக்க குறுக்கீட்டுக்கு ஒரு முக்கிய பங்கிருந்தது. எனினும் பாராளுமன்றப் பாதை மூலம் மக்களை விடுவிக்க இயலாது என்பதற்கு நேபாள அனுபவங்கள் முக்கியமான நினைவூட்டல்கள் எனலாம். நேபாளத்தின் பிரச்சினைகளைப் பாராளுமன்ற இடதுசாரிகளோ நேபாள காங்கிரஸோ தீர்க்கமாட்டா. மேற்குலக உதவியுடன் உருவாக்கப்பட்ட பெருவாரியான என்.ஜி.ஓ.க்கள் மக்களை அரசியல் நீக்கத்துக்குட்படுத்தக் கடுமையாக உழைக்கின்றன. எனவே மாஓவாதிகள் தமது தவறுகளைத் திருத்தி, விட்ட இடத்திலிருந்து தொடங்குவதன் மூலமே நேபாளத்தை விடுவிக்க இயலும். ஒரு பிரிவினர் அதற்கான சுயவிமர்சன முயற்சியை முன்னெடுக்கின்றமை வரவேற்கத்தக்கது.
தொகுத்துக் கூறின்,ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நாடுகளின் பொருளாதாரத்தை மேலும்

சீர்குலைத்துஆட்டம் காண வைத்துள்ளது அதன் பயனாக நாடுகளின் உள் முரண்பாடுகள் வலுத்துள்ளன. அவை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்துடன் கையாளப்படாதளவில் இனங்களிடையிலும் மதங்களிடையிலும் பல்வேறு சமூகப் பிரிவுகளிடையிலுமான மோதல்களாக வளர்ந்துள்ளன. மேலும் வளரும் அபாயம் உள்ளது. என்.ஜீ.ஓ.க்கள் மூலம் அடையாள அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன் அபாயத்தை இலங்கையில் அனுபவவாயிலாக கண்டுள்ளோம். அது மக்கள் வர்க்க அடிப்படையில் ஒன்றுபடுவதையும் வர்க்கப் போராட்ட அரசியல் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் திட்டமிட்டே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இது திட்டமிட்ட ஏகாதிபத்தியச் செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

தோழர்களே!

இன்றைய நவகொலனியச் சூழலில் ஏகாதிபத்தியம் பற்றியும் அதன் இயல்புகள் பற்றியும் மாக்சிச லெனினிசவாதிகளாகிய நாம் ஸ்தூல ஆய்வு நோக்கில் அணுகவேண்டும். உலகப் போக்கின் நிலைமைகளை புற நிலை யதார்த்ததத்தின் வழி அணுகி ஆராய வேண்டும்.

நவகொலனிய யுகத்தில் ஏகாதிபத்தியம் எவ்வாறு இயங்குகிறது என்பதையிட்டு நாம் தெளிவுடன் இருக்க வேண்டும். இங்கே சில நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளாக அடையாளப்படுத்துவதன் சரி பிழைகளை விட அந்த அடையாளப்படுத்தலின் அடிப்படையில் வந்தடையும் முடிவுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய முதலாளிய நாடுகளும் யப்பானும் ஒரு ஏகாதிப்பத்தியக் கூட்டமைப்பாக இயங்குகின்றன. அவை உலகத்தைத் தம்மிடையே பங்கிட விரும்புகின்றன. முதலாளிய ரஷ்யாவை ஒரு இளைய கூட்டாளியாக இணைக்கும் முயற்சி கைகூடவில்லை. சீனா இன்று ஒரு சோசலிச நாடுஅல்ல. அது ஒரு முதலாளிய நாடு. ஆனால் அதன்போக்கு மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின்றும் பல வகைகளில் வேறுபடுகிறது. சீன முதலாளியம் ஏகாதிபத்தியத்தின் தலையாய அடையாளமான ஏகபோக நிறுவனங்களின் ஒரு அம்சமாக இல்லை. அதைவிடச், சீனா தனது வணிகத்தைப் பெருக்கக் கையாளும் உபாயங்களும் சீன முதலீடுகளின் தன்மையும் வரலாற்றில் ஏகாதிபத்தியம் கொண்டிருந்த பண்புகளைக் கொண்டனவல்ல. அது மட்டுமன்றிச் சீனாவுக்கு உள்ளே நுழையும் அந்நிய முதலீட்டின் அளவு சீனாவின் அயல் முதலீட்டை விட அதிகமாகவே உள்ளது. அதாவது அந்நிய மூலதனம் சீனத் தொழிலாளரது உழைப்பைச் சுரண்டும் அளவு, சீன மூலதனம் தனது தேசிய எல்லைகட்கப்பால் பிறநாட்டுத் தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டும் அளவினும் பெரிதாகவே உள்ளது. எனவே மூலதன ஏற்றுமதி போன்ற வாய்ப்பாடுகளை மட்டும் வைத்து ஒரு நாட்டை ஏகாதிபத்திய நாடு என்று கூற முடியுமானால், சிங்கப்பூரும் சவூதி அரேபியாவுங் கூட ஏகாதிபத்தியகளாகிவிடலாம்.

சீனா வேகமாக வளரும் முதலாளிய நாடு. அது தன் உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்குப் பிறநாடுகளைச் சார்ந்துள்ளது. அது என்றென்றைக்கும் ஒரே நிலையில் இருக்க இயலாது. அது சோஷலிசத்துக்கு மீளாவிடின் காலப் போக்கில் அது ஒரு ஏகாதிபத்தியமாகும் வாய்ப்பு பெரிது. எனவே சீனாவை மட்டுமன்றி இந்தியாவையும் ரஷ்யாவையும் வேறு பல நாடுகளையும் ஏகாதிபத்தியமாக வளரக்கூடிய முதலாளிய நாடுகளாகக் கொள்வது இன்றைய நிலையில் பொருத்தமானதாகும். ஆனால் இன்று அவற்றை ஏகாதிபத்திய நாடுகள் எனக் கூறுவது ஏற்கத்தக்க கணிப்பு அல்ல.

அப்படியில்லாமல், அவை ஏதோ வரைவிலக்கணத்துக்கமைய ஏகாதிபத்தியங்கள் என்று கூறலாமாயினும், அவற்றுக்கும் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய அரசுகட்குமிடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கணக்கிற் கொள்ளவேண்டும். அனைத்தையும் புறக்கணித்து எல்லா ஏகாதிபத்தியங்களும் ஒத்த தன்மையின என்றும் அவற்றிடையே உள்ள முரண்பாடுகள் பற்றி நாம் கவனிக்கத் தேவையில்லை என்பதும் மாக்சிச லெனினிச நிலைப்பாடாக இருக்க முடியாது.

மேற்குலகின் நெருக்குவாரங்களினதும் நிதி நெருக்கடியினதும் பின்னணியில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் தமது பொருளாதாரக் கூட்டுழைப்புக்காக ‘பிறிக்ஸ்’ எனும் அமைப்பை 2008இல் உருவாக்கின. பிறிக்ஸ் அண்மையில் ஒரு சர்வதேச நிதி நிறுவனத்தை அமைத்தது. இப்போதைக்கு உலகப் பொருளாதார நெருக்கடிகளினின்றும் அமெரிக்க ஆதிக்கத்தினின்றும் காக்கும் ஒரு கவசமாக பிறிக்ஸை நோக்கலாமே ஒழிய அதை ஒரு புதிய ஏகாதிபத்தியக் கூட்டணியெனக் கூறவியலாது. ஏனெனின் அதன் உறுப்பு நாடுகளில் மூன்று, அமெரிக்காவுக்கு நெருக்கமானவை. ரஷ்யாவும் சீனாவும் மூன்று முன்னாள் சோவியத் குடியரசுகடன் சேர்ந்து 1996இற் தொடக்கிய ஷங்ஹாய்-5 எனும் அமைப்பு 2001 முதல் விரிவாகி ஷங்ஹாய் கூட்டுறவுத் நிறுவனம் என்ற பெயரில் இப்போது ஆசியாவின் பெரும் பகுதியை உறுப்பு நாடுகளாகவோ அவதானிகளாகவோ தொடர்புடைய நாடுகளாகவோ கொண்டுள்ளது. அதன் நோக்கங்களில் ஆசியப் பாதுகாப்பு முதன்மையானது. இராணுவ, பொருளாதார, பண்பாட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், முரண்படும் நோக்கங்களையுடைய நாடுகளைக்கொண்ட அவ்வமைப்பு ஒரு இராணுவக் கூட்டாகும் வாய்ப்பு இல்லை. மேற்கூறிய அமைப்புக்களை ஏகாதிபத்திய உலக மேலாதிக்க நிறுவனங்களாகக் காட்ட முனைவோர் சிலர், அவற்றை அவசியமாக்கிய ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை வேண்டுமென்றே கூறாது தவிர்க்கின்றனர். இது பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமெரிக்கவின் இன்றைய ஆக்கிரமிப்புகளில் எதுவுமே ஒரு சோஷலிச நாட்டின் மீதானதல்ல. அதனால் அவற்றைப் பற்றி நாம் அக்கறையின்றி இருக்க இயலாது. உக்ரேனில் அமெரிக்கக் குறுக்கீடு அமெரிக்க, ரஷ்யா எனும் இரு ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கப் போட்டி என்று கூறிக்கொண்டு நாம் ஒதுங்க இயலாது. அவ்வாறு கொள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வலுச் சேர்ப்பதாகும். நாளை சீனாவுடன் மூளக் கூடிய ஒரு கெடுபிடிப் போரையும் நாம் அவ்வாறு புறக்கணிக்க இயலாது.

எனவே இன்றைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியமே உலக மக்களின் பிரதான எதிரி என்ற அடிப்படையில் நாம் நமது சர்வதேச நிலைப்பாடுகளை முடிவு செய்ய வேண்டும். மத்திய கிழக்கில் இன்று பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடப்பது என்ன என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். கஸா மீதான இஸ்ரேலின் காட்டுமிரான்டித்தாக்குதல் அமெரிக்காவின் பின்புல ஆலோசனையுடனும் ஆதரவுடனும் முன்னெடுக்கப்பட்டதாகும் அமெரிக்காவின் தொடரான ஆட்சிக் கவிழ்ப்புகளின் பொருள் விளங்க வேண்டும். குறைந்தபட்சம், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் வேறெந்த முதலாளிய நாட்டினின்றும் அடிப்படையில் வேறுபட்டவை என விளங்க வேண்டும்.

ஈராக்கை ஆக்கிரமித்த ஐக்கிய அமெரிக்கா இன்றும் அந்நாட்டை நாசப்படுத்தி மனித உயிர்களைப் பலியெடுக்கும் களமாகவே வைத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் நிலையும்அவ்வாறே. சிரியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நேரடியாகச் செய்யமுடியாததைத் தனது கைகூலிக் குழுக்கள் மூலம் அங்குள்ள உள் முரண்பாடுகளைப் பயன்படுத்தி சிரிய ஆட்சியை அகற்ற முயல்கிறது.

எனவே இலங்கை மக்கள் உலகின் முதல் எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதற்குத் துணைநிற்கும் வல்லரசுகளையும் எதிர்த்து நிற்பது அவசியமாகும். அதேவேளை தனது பிடிக்குள் முற்றுமுழுதாக இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளை வைத்திருக்க முனைந்து நிற்கும் பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும நமது கவனத்திற்குரியதாகும் இந்தியா அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாகவே இருந்து வந்தது இந்நிலை மோடியின் வருகையுடன் மேலும் நெருக்கமடையும் போக்கே காணப்படுகிறது.

இலங்கையின் யார் ஆதிக்கம் செலுத்துவதில் என்பதில் உள்ளார்ந்த போட்டி அமெரிக்க இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. எனவே ஜக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும் மேற்குலக நாடுகளும் இந்திய மேலாதிக்க வல்லரசும் இலங்கையைத் தத்தமது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளன இதில் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதாக் கட்சியும் தமது பிராந்திய மேலாதிக்க நிலையில் இருந்து விலகப்போவதில்லை அதனால் இலங்கையின் தேசியஇனப்பிரச்சனை உட்பட ஏனையவற்றிலும் தமது பிராந்திய நலன்களை முன்வைத்தே முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பதே உண்மையானதாகும்.

ஆதலால் ஏகாதிபத்திய எதிர்ப்பைச் சகல நிலைகளிலும் முன்னெடுப்பது அவசியம். இதில் மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் ஏனைய இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இயங்கி வருகிறோம். எமது ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமையானது சர்வதேசியத்துடன் கூடிய புரட்சிகர கட்சிகளுடனும் சக்திகளுடனும் இணைந்த ஒன்றாகும். எமது கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டும். இது எமது சர்வதேசியக் கடமையுமாகும்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.
ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும்
அதன் கூட்டாளிகளையும் தோற்கடிக்க ஐக்கியப்படுவீர்!
இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஐக்கியப்பட்டு முன்னெடுப்போம்!
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வாழ்க!

கொழும்பு மத்தியகுழு
31.08.2014 புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

2 thoughts on “இன்றைய சர்வதேச நிலைமைகள் : புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி”

  1. எல்லாப் பிழைகளுக்கும் மூலாதாரம் :-
    0. இனப்பேரினவாதம் அதுவும் தோல்நிற அடிப்படையில் அமைந்தது. வெளிறிய தோல் மேலாதிக்கம் எனலாம்.
    மார்க்ஸ், லெனின் போன்றோருக்கு அவர்களின் காலத்து காலனித்துவ அட்டூளியங்களின் மேல் ஓர் குருட்டுத் தன்மை போலும். மாவோ அதை விடவும் இவ்விடயத்தில் ஒரு குருடு.

    1. ஆசியப் பொருளாதாரம் பற்றியும் ஆசிய நாடுகளில் பிரித்தானிய காலனிக்கு எதிராகவும் கார்ல் மார்க்ஸ் தனி மனிதனாகக் குரலெழுப்பியதுகூட பறைப் பிளேயருக்குத் தெரியாத அளவிற்கு அறிவு வறுமைப்பட்டுள்ளது. ரஷ்யப் புரட்சி உச்சமடைந்த இக்கட்டான சூழலில் கூட இன்று நாம் பேசும் ஏகாதிபத்தியம் தொடர்பாக முதலில் பேசியவர் லெனின். அதற்கெதிரான போராட்ட தந்திரோபாயத்தையே அவர் வகுத்தளித்தார். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அமைப்புப் பற்றியும் அதன் அடிப்படையிலான போராட்ட மூலோபாயம் பற்றியும் மாவோவின் தத்துவம் குறித்த எந்த அறிவுமற்ற பறைப் பிளேயர் ஒரு பங்கொட்டைப் பிளேயர் என்பதை நிறுவியுள்ளார்.

Comments are closed.