இன்னொரு இன அழிப்பிற்கான எதிர்வுகூறல்?

nazistylecampsதடுப்பு முகாம்களில் மற்றொரு அவலம் ஏற்படுவதற்கான எதிர்வு கூறல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. வன்னிப்படுகொலைகள் நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்னதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தன்னைத் தற்காத்துக்கொள்ள இரத்தவெள்ள்ம் ஏற்படலாம் என எச்சரித்தது போல் இப்போது முகாம்களில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்க ஆரம்பித்துள்ளது.
“பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா மெனிக்பாம் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரை வேறும் இடங்களில் தங்க வைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், முகாம் வாழ் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் வடிகாலமைப்பு முறையின் காரணமாக முகாம்களில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இடம்பெயர் மக்களை வேறும் இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திர இடம்நகர்வினையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரப் பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.”

என, குளோபல் தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனூடாக சிறைவைக்கப்பட்டுள்ள மக்களை வேறு இடங்களில் சிறை வைக்குமாறு ஹோல்ம்ஸ் “சிறை வைப்பை” அங்கீகரித்துள்ளதுடன் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அனர்த்தங்களையும் இலங்கை அரசிற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் பாதிப்பற்ற வகையில் எதிர்வு கூறியுள்ளார்.

இதே வேளை இலங்கை அரசு தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை வேறு இடங்களிற்கு மாற்றும் நோக்கமில்லை எனப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.

“வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.”

என தேசம் நெற் இணையம் அரச செய்தியை வெளியிட்டுள்ளது.
இவற்றின் சூத்திரதாரியாகப் பின்னணியில் இயங்குவதாகக் கருதப்படும் இந்திய அரசோ முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்ற முடியாது என வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டுள்ளது.

“இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநõடடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.”
இவையெல்லம் பருவ மழைக்காலகட்டத்தில் இன்னுமொரு மனித அவலத்திற்கும் இனச்சுத்திகரிப்பிற்குமான எதிர்வு கூறல்களா என சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் முகாம்களில் சிறைவைக்கப்பட்டுளோரை விடுதலை செய்யக் கோரிப் போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

செய்தி ஆய்வு : திருநாவுக்கரசன்