இன்னும் மௌனமாக .. : புதிய திசைகள்

ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு.

இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி,எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண்டு செல்வது என்பது பேரினவாத அரச அதிகாரத்தின் நோக்கங்களில் ஒன்று.

இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தமிழ் நாட்டின் ஜனநாயக மனிதாபிமான சக்திகளிடமிருந்தும் தனிமைப்படுத்தும் இலங்கை அரச பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று போட்ட அரசிற்கு எதிராகப் போராட முன்வரும் ஒவ்வொரு மனிதர்களின் மீதும் இலங்கை அரசின் உளவியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவி மக்களை நாளாந்தம் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நிராகரிக்கக் கோருகிறார்கள்.

இலங்கையிலும் நாளை இந்தியாவிலும் இன்னொரு நாள் ஐரோப்பவிலும் கொத்துக் கொத்தாக மக்களை அழித்துவிட்டு ஆட்சி நடத்துவதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணமாகிவிடும் என்று அச்சப்படுகிறார்கள் உலகம் முழுதும் வாழும் மக்கள் குறித்து அக்கறையுள்ள மனிதர்கள்.

பலவகை ஒடுக்குமுறைகளையும் இன்று சந்தித்துவரும் முஸ்லிம் சமூகமும் மலையக சமூகமும் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையும் இதுதான். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களாகிய நாம் ஓரணியில் நின்று சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் அவசியத்தை இன்றைய காலம் வேண்டி நிற்கிறது.

தமிழீழ விடுதலை புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அழித்ததில் இருந்து, இலங்கை அரசானது ஒடுக்குமுறையின் முன்னுதாரணமாக, உலகத்திற்கு ஆலோசனை வழங்கும் அனுபவசாலியாகத் தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிறது. சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கி வாழும் பெருந்தேசிய இனம் சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. சிங்கள மக்களின் உரிமைகள் தமிழ் மக்களின் உயிர் பறிப்புடன் எப்படிக் கரைந்து போயின என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இந்திய அரச பின்பலத்தில் இலங்கை அரசின் இருப்பு என்பது  தெற்காசிய ஜனநாயகத்திற்கு  விடுக்கப்பட்ட   அச்சுறுத்தல் என்பதை  தமிழ்  நாட்டில்  மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.   இலங்கை இனப்படுகொலையின் பின்னான அரசியல்  சார்புநிலை என்பது  எதிரிகளையும் நண்பர்களையும்  இனம் காண்பதற்கான உரைகல்.

இது யுத்த வெறிபிடித்து அலையும் ஓர் சர்வாதிகார அரசிற்கெதிரான போராட்ட கால கட்டம்.இலங்கைத்தீவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் அனைத்து மக்களும் தமது நிலை சார்ந்து போராடவேண்டிய தருணம் இது.சமூகத்தில் அடிப்படை ஜனநாயகம் இன்றி எந்தப்போராட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாத்தியமற்றது.
அனைத்து மக்களே, ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம்; போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம். எம்மைப்போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உரிமைக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்ப்போம். எமது போராட்டம் உலக அரங்கில் நடைபெறும் உரிமைப்போரின் ஓர் அங்கமாக மாறட்டும்.

இலங்கை இனவெறி அரசே,
இன அழிப்பை நிறுத்து!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!
அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

லண்டனில் புதிய திசைகள் அமைப்பு இலங்கை அரசிற்கு எதிரான முழக்கங்களோடும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதே நாளில் தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது.

One thought on “இன்னும் மௌனமாக .. : புதிய திசைகள்”

 1. தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல
  http://www.tamilcircle.net
  இரயாகரனால் வெளியிடப்பட்ட நூலை அதைத் தொடர்ந்து கமெண்ட் பகுதியில் பார்க்கவும்.

  http://vitudhalai.wordpress.com/
  http://senkodi.wordpress.com/library/
  http://suuniyam.wordpress.com
  ஆகிய மகஇக உறுப்பினர்கள் வலைதளத்தில் வரவேற்று ஆதரித்துள்ளார்கள்.

  உண்மையில் இது மகஇக-வின் கொள்கையும்கூட. அதன்படி தேசிய இன உரிமைக்கு போராடுவது கம்யூனிஸ்ட்டுகளின் வேலையல்ல. அது ஒரு குருந்தேசிய வெறியர்களின் வேலை என்பதே அவர்களின் விஷமமான பிரச்சாரம். இரயகரனை ஒரு புரட்சியாளன் அதுவும் ஈழத்தமிழர்களுக்காக போராடும் புரட்சியாளன் என்றே தகுதிச் சான்று கொடுத்திருக்கிறார்கள்.

  இவர்களும் தனி ஈழ உரிமையை ஆதரிப்போம் என்றோ இல்லையென்றால் இன உரிமையை வென்றெடுக்க கம்யூனிஸ்டுகள் திரளவேண்டும் என்றோ இதுவரையில் கூறவில்லை, விரும்பவும் இல்லை. காரணம் அவர்களும் அது கம்யூனிஸ்டுகள் கோரிகையில்லை முதலாளிகளின் (குறிப்பாக குட்டிமுதலாளிகளின்) கோரிக்கை என்று கூறுகிறார்கள். இவர்கள் இப்பொழுது ஈழத்திற்காக போராடுவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் மாற்றிக்கொண்டார்களா, இல்லை அவர்களை அரவணைக்க அதுபோல் கூறுகிறார்களா. 

  புலிகள் இருந்தவரை ராஜபக்‌ஷேவை எதிர்த்ததைவிட நூறுமடங்கு புலிகளை எதிர்த்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் ஈழ உரிமையை வென்றெடுக்க இயக்கம் எடுக்காதவர்கள் இப்பொழுது போராடுவது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கும் இன உரிமையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்போல் இருப்பவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக 
  * தனி ஈழத்தை அங்கீகரி என்று கோரப்போகிறார்களா
  * இன்றும் புலிகள் எதிர்ப்பு என்ற பழைய பல்லவியை பாடிக்கொண்டு அதற்கான கூட்டுகளை சேர்த்து கொண்டு இன்றும் ஒன்றுப்பட்ட இலங்கைஅரசுக்குள் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்போம் என்று கோரப்போகிறார்களா. 

  இதையெல்லாம் மீறி நீங்கள் அனைவரும் எந்த பக்கம் நிற்கிறீர்கள் என்று கூறவில்லை. இன்றும் தனி ஈழத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஏற்கிறீர்களா. இல்லை இனப்பிரச்சனை பின்னுக்குத் தள்ளப்பட்டு (ஒர் இனமக்களை முழுவதுமாக சுடுகாட்டு அமைத்தியில் தள்ளிவிட்டு) வர்க்கப் பிரச்சனை ஆகி யால் சிங்கள மக்களோடு ஒன்று சேர்ந்துதான் போராட வேண்டும் என்று கூறுகிறீர்களா. தெளிவுபடுத்துங்கள். அதைவிடுத்து உரிமை பேசுவது என்பது ஈழ மக்களுக்கு எந்த பலனையும் உயிர்வாழும் உரிமையையும் உத்தரவாதப் படுத்தப் போவதில்லை. இன்று சாத்தியமா இல்லையா என்பதல்ல. எந்த அரசியல் போராட்டத்தை எந்த சரியான திசைவழியை மக்களை எதிர்கால நம்பிக்கையை நோக்கி நகர்த்தப் போகிறோம் என்பதே. 

  ஜெர்மானியர்கள் ஹிட்லரின் சாம்ராஜ்ஜியத்தில் பாசிசத்தில் மூழ்கி பெரும்பான்மையான மக்கள் இனவெறிக்கு ஆட்பட்டதை மறந்துவிடக்கூடாது. அது தலைகேறிய நிலையில் அந்த இன ஒடுக்குமுறைக்கு ஆதரவளித்ததையும் அதற்கு இறையானதையும் மறந்துவிடக்கூடாது. அதுபோல் சிங்கள மக்களும் இன்று ராஜபட்சே பாசிச வெற்றியின் வெறியில் மக்களும் மயங்கி கிடக்கிறார்கள் என்பதை மறுத்துவிட்டு பேசுவதில் பயனில்லை. 

  அதற்கு ராஜபட்சே பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்து இலங்கை மக்களை போராட திரட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இந்த இன ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க ஈழத்தை விடுவித்து அங்கீகரித்து அவர்களை சுதந்திரமாக வாழவிடசொலவது அதைவிட அதி முக்கியம். இந்த அடிப்படையில் செய்யவில்லை என்றால் இன மேலாதிக்க மிதப்பில் சிங்களமக்கள் இருப்பாரேயன்றி இலங்கை அமெரிக்காவுக்கும், ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் அதனுடைய அடிவருடிகளான இந்தியாவுக்கும், சீனாவிற்கும் எதிராக தன்னுடைய இறையாண்மைக்காக போரடமுன் வரமாட்டார்கள். மீண்டும் மீண்டும் தன் வாழ்க்கை மோசமானதாக மாறுவதற்கு உள்நாட்டு போராட்டம் தான் காரணம் தமிழர்கள்தான் காரணம் என்று அதை வைத்து ஏகாதிபத்தியத்தினை மூடிமறைக்கத்தான் முயற்சி செய்வார்கள். 

  இந்த நிலையில் தனி ஈழத்திற்கான அரசியல் போராட்டங்களை முன்னெடுப்போம் என்ற அடிப்படையினை வலியுறுத்தாமல் திமிலங்கத்தின் வாயில் நீந்திக்கொண்டு அவர்கள் சுதந்திரத்தினை வாழ்க்கையினை பேசுவது போலாகிவிடும். 

  ஆகையால் ஒடுக்குமுறைக்கு, இனசுத்திகரிப்புக்கு எதிராக போராடுவது யார் போராடினாலும் வரவேற்க வேண்டியதே என்றாலும் திசை வழியை காட்டாமல், வெறும் ஒடுக்குமுறைக்கு போராடுவது என்பது விழலைக்கு இறைத்த நீராகத்தான் முடியும் என்ற நோக்கிலே கருத்து கூறுகிறேன். 

  உங்கள் அரசியலை தெளிவாக வைத்து திரட்டுங்கள் அப்போதுதான் தவறுகளை திருத்திக்கொள்ள வழி ஏற்படும். விமர்சனம் சுயவிமர்சனம் என்று இருக்கும். இல்லையென்றால் தன் அரசியலை இரகசியமாக வைத்துக்கொண்டு (தனி ஈழம் பற்றிய கருத்து) வெறும் ஒடுக்குமுறைக்கு மட்டும் போராடுவது என்பது தீர்வு காணமுடியாது. தனக்குத்தான இன்பங்கொள்ளலாம். 

  இதில் உங்கள் கருத்துக்கள் மாறியிருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்கவும். இதில் மாற்றுக் கருத்து இருப்பினும் அதையாவது வெளிப்படையாக வைத்து திரட்டவும். அப்போதுதான் எது சரி என்பதை தங்களுக்குள்ளும், மக்களுக்கிடையிலும் பரிசீலிக்க ஏதுவாக இருக்கும். 

  இதை விடுத்து நாங்களும் போராடுகிறோம் என்று கூறுவதால் பயனில்லை. மக்களை அணிதிரட்ட உதவாது. திரட்டினாலும் நிலைக்காது.

  ஈழ மக்களுக்கான உண்மையான எல்லாப் போராட்டங்களையும் வரவேற்போம். நயவஞ்சகப் போராட்டங்களை அம்பலப்படுத்துவோம். இல்லையென்றால் கே.பி.க்களும், கருணாக்களும், டேனியல்களும், பிள்ளையான்களும் மலிவாகவே கிடைப்பார்கள். 

Comments are closed.