இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

  ( இனியொருவில்  செம்ரெம்பர் 4ல் வெளிவந்த தோழர் சி.கா. செந்திவேலின் பேட்டியைத் தொடர்ந்து வாசகர்களின் ckse10பின்னூட்டக் கேள்விகள் பல வந்தன. அவற்றுக்கு தோழர் சி.கா. செந்திவேல்  வழங்கிய பதில்கள் இங்கே தரப்படுகின்றன.)
 
   பின்னூட்டக் கேள்வி: உலகமயமாதலின் உற்பத்தி உறவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும்? தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு?
 
 தோழர் சி.கா. செந்திவேல் : உலகமயமாதல் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையினைத் தமது ஏகபோக மூலதனத்தின் மூலம் விரிவுபடுத்தி அதனை உறுதிப்படுத்துவதற்கான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலாகும்.  அதன் அடிப்படையில் கடந்த முப்பது ஆண்டு காலப் பகுதியில் அதன் உற்பத்தி உறவுகள் நவ தாராள பொருளாதாரம் என்பதன் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. பல்தேசிய நிறுவனங்களின் மூலதன விரிவாக்கல், தனியார்மயம், தாராள சந்தை, நுகர்வுத் திணிப்பு, போன்றன பரந்த உலகமயமாக்கம் பெற்றுள்ளன.  அதேவேளை, நாடுகளின் வளங்களை வாரிச் செல்லல், குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டல், பெருலாபம் குவித்தல், தேசியப் பொருளாதாரத்தை சிதைத்தல், சுயசார்புக் கொள்கைகளை அழித்தல் என்பன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
 
நவீன தொழில் நுட்பமானது உலகமயதாலுக்கு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.  இவற்றுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பண வாரியிறைப்பு மூலமான அரசியல் நீக்க நடவடிக்கைகளும், சமூக பண்பாட்டுச் சீரழிவுகளும் தொடரப்படுகின்றன.  இவற்றுக்கு இசைவானவையாகக் கருத்தியல் தளத்தில் பின்-நவீனத்துவம் தாராள அரசியல், என்பன பரப்புரை செய்யப்பட்டு வர்க்கப் போராட்ட அரசியல் மாக்சிசம், சோசலிஷம் என்பன மறுக்கப்படுகின்றன.  அதே வேளை, இன மத மொழி பிரதேச வேறுபாடுகளினதும் தேசியத்தின் பெயராலும் உருவாக்கப்படும் மோதல்கள் யுத்தங்களாக மாற்றப்படுகின்றன.  அரசாங்கங்களுக்கும் விடுதலையின் பெயரிலான போராட்டங்களுக்கும் நேரடி, மறைமுக ஆயுத விற்பனை செய்வதுடன் ராணுவத் தலையீடுகளையும் மேற்கொள்ளலும் தொடர்கிறது. இவை யாவும் சமகால உலக முதலாளித்துவ மூலதன விரிவுக்கும் உற்பத்திக்கும் அதன் உறவு முறைகளுக்குமாக ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நவகொலனிய அமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலேயாகும்.

மேலும், சந்தைப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவப் போட்டியையும் பெருலாபம் குவிப்பதையும் குறியாகக் கொண்டதாகும். இது மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கிலான உற்பத்தியையும் நுகர்வையும் நிராகரித்து, தனிநபர்கள் லாபத்தைப் பெருக்கிப் பணம் குவிக்கும் வழிமுறைகளிலேயே செயற்படுகிறது.  இதற்கு மாறாக, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய சோசலிஷப் பொருளாதாரம் தோற்றம் பெற்று வளர்ந்து வந்தது. ஆனால் முதலாளித்துவம் பல வழிகளிலும் அதனை முறியடித்து தோல்வியுறச் செய்து விட்டது. சந்தைப் பொருளாதாரத்தை நிராகரித்து வந்த முன்னாள் சோசலிஷ நாடுகள் எனப்பட்டவை கூட, இன்று இச் சந்தைப் பொருளாதாரத்தில் பங்கு கொண்டு தமது சோசலிஷப் பொருளாதாரத்தைப் பலியிட்டு விட்டன. இதற்கு உதாரணமாக நாம் காணக் கூடியது தான், முன்னைய சோசலிஷ சீனாவின் சோசலிஷப் பொருளாதாரமும் தற்போதைய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மீதான சீனாவின் மாற்றமடைந்த நிலைப்பாடுமாகும். 
 
எனவே முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரமே இன்று உலகப் பொருளாதார ஒழுங்காக அமைந்து ஆதிக்கம் பெற்று நிற்கிறது. இச் சந்தைப் பொருளாதாரப் போட்டி மனப்பான்மை மக்கள் மனங்களின் திணித்துப் பதியவைக்கப்பட்டு எங்கும் எதிலும் போட்டியும் குறுக்குவழிகளும் எப்படியாவது தனித்தனியே ஈடேற்றம் காண்பது என்ற வரிசையில் மக்களை நிறுத்தியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய முதலாளித்துவ அரசுகள் ஏகாதிபத்திய உலகமயமாதலால் உள்வாங்கப்பட்டதுடன் அதன் தேசியத் தன்மைகள் கழுத்து நெரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையில் தெளிவாகக் காணமுடிந்துள்ள அதே வேளை, பின் தங்கிய உலக நாடுகளின் தேசிய அரசுகள் எனப்பட்டவற்றுக்கும் அதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
 
 தேசிய அரசுகள் மட்டுமன்றி தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் எனத் தம்மைக் கூறிக்கொண்டு அரங்கினில் மேற்கிளம்பித் தேசிய குணாம்சங்களை வெளிப்படுத்திய விடுதலை அமைப்புகள் கூட ஏகாதிபத்திய அரவணைப்புக்கு  உள்ளாகி உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குத் தம்மை இரையாக்கிக் கொண்டன. இதற்கும் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் அனுபவமாகி உள்ளன. அதே வேளை, இவ் உலகமயமாதலின் நச்சுத்தனங்களை எதிர்த்து நிற்பதில் குறிப்பிட்ட தேசிய சோஷலிச அரசுகள் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியும் வருகின்றன என்பதும் கவனத்திற்குரியதாகும். 
 
மேலும் தேசத்தின் விடுதலைக்கு தேசிய முதலாளித்துவம் அவசியம் என்பதும் தேசிய முதலாளித்துவம் இன்றி தேச விடுதலை சாத்தியமில்லை என்பதும் தவறான கருதுகோள்களாகும். ஏனெனில், தேசிய முதலாளித்துவம் ஊசலாட்டம் மிக்கதும் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்யக் கூடியதுமாகும்.  எனவே வர்க்கப் போராட்ட அடிப்படையில் அணிதிரளும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பிற உழைக்கும் மக்களும் தமக்கான விடுதலையைத் தேசிய முதலாளித்துவத்திற்குப் பின்னால் இழுபட்டுச் சென்று வென்றெடுக்க முடியாது. தமக்குரிய தேச விடுதலையைத் தமது சொந்தத் தலைமையைக் கட்டியெழுப்பி தமக்கான பாதையில் மக்களை அணிதிரட்டிப் போராடியே வென்றெடுக்க முடியும்.
 
   பின்னூட்டக் கேள்வி: தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அவசியமானதா? தேசிய இயக்கங்கள் தேவையா?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : வரலாற்று ரீதியான இலங்கையின் இன்றைய யதார்த்தம், இத் தீவு நாடு பல்லினத் தேசியங்கள் வாழும் நாடென்பதும் இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் வாழ்ந்து வருவதுமாகும்.  இங்கு பிரிவினையை ஏற்படுத்தி எந்தவொரு தேசிய இனமும் வாழமுடியாது. ஆனால், தேசிய இனங்கள் தம்மை எதிர் நோக்கி நிற்கும் பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து சுயநிர்ணயத்தை வென்றெடுப்பதற்குப் போராட முடியும். போராடவும் வேண்டும்.
 
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் மூன்று தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சியை முன்னிறுத்திய தமது கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டும்.  இவை ஒன்றை ஒன்று நிராகரிக்காத நிலையிலும் ஆளும் வர்க்கத்தால் பிளவுபடுத்தி மோத வைக்கும் சூழ்ச்சிக்கு உட்படாதவாறும் தமக்குள் ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியமானதாகும். எனவே தேசிய இனப் பிரச்சினை கூர்மையடைந்துள்ள நிலையில் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாத அவசியப்பாடாக அமைகிறது. இதுவே இலங்கையின் இன்றைய யதார்த்தமாக உள்ளது.
 
 
 பின்னூட்டக் கேள்வி : தமிழ் மக்களின் புதிய போராட்ட மார்க்கம் எது?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : தமிழ் மக்களின் பேரில் முன்னெடுத்த முன்னைய போராட்டங்கள் யாவும் தோல்வி கண்டுவிட்டன. ஏனெனில் உறுதியான வெகுஜனப் போராட்டம் தமிழர் தலைமைகளால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றப் பாதைக்கும் அராஜகங்கள் நிறைந்த  ஆயுதப் போராட்டத்திற்கும் அப்பாலான புரட்சிகர வெகுஜனப் போராட்டமே புதிய மார்க்கமாக அமைய முடியும். இப் போராட்டத்தின் மையமும் பலமும் பரந்துபட்ட மக்கள் சக்தியாக மட்டுமே இருக்க முடியும். கொள்கை வகுப்பதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மக்களின் பங்களிப்பு அடிப்படையானதாக அமைய வேண்டும்.  தம்மை எதிர் நோக்கும் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராகத் தாமே முன்னின்று போராடுபவர்களாக மக்கள் இருக்க வேண்டும். தமிழர் மேட்டுக்குடி வழிவந்த உயர் வர்க்கத் தலைவர்கள் வகுக்கும் கொள்கைகளாலோ அல்லது இளைஞர்களின் தோள் வலிமையை மட்டும் நம்பிய சிறு முதலாளியப் போராட்டங்களாலோ தமிழ்த் தேசிய இனமோ ஏனைய தேசிய இனங்களோ தமக்கான விடுதலையைத் தேடிக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
 
 
 பின்னூட்டக் கேள்வி : 9 /11க்குப் பிந்திய உலக ஓழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் பயங்கரவாதமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை சாத்தியமாக்குவது எப்படி?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியம் 9 /11ன் பயங்கரவாதத் தாக்குதலையும் அதன் காரணமாகக் கொல்லப்பட்ட சுமார் மூவாயிரம் வரையான மக்களின் அகால முடிவையும் தனது உலக மேலாதிக்கத்திற்கான பாதைக்கு உரமாக்கிக் கொண்டது. அதனை வைத்தே தனது ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அப்பட்டமாகவே தனது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து கட்டவிழ்த்துக் கொண்டது. அத்துடன் உலகின் ஒவ்வொரு நிலையிலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டச் சக்திகள் ஒடுக்கப்படுவதற்கு உரிய சர்வதேச சூழல் உருவாக்கப்பட்டது.
 
இங்கே நாம் தூர நோக்கிலும் வரலாற்று வளர்ச்சி மீதான நம்பிக்கையிலும் மக்கள் தான் தீர்க்கமான வரலாற்று உந்து சக்தி என்ற உண்மையிலும் இருந்தே ஏகாதிபத்தியத்தையும் அது காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விட்டு வரும் பரப்புரைகளையும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நீண்டகாலத்திற்கு உலக மக்களை ஏமாற்றவோ அடக்கவோ முடியாது. ஒவ்வொரு நாட்டினதும் ஒடுக்கப்படும் மக்கள், தமது நியாயமான போராட்டங்களை மக்கள் போராட்டங்களாக உரிய தந்திரோபாயங்களுடன் முன்னெடுப்பதில் உறுதியாக முன்னேறும் போது, பயங்கரவாதம் என்ற பதத்தின் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.  அப்போது பயங்கரவாதம் என்று பரப்புரை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதகமான சூழலை உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குச் சாதகமானதொன்றாக மாற்றிக் கொள்வார்கள். இது கடினமானதொன்றாயினும், மக்கள் முன்னேறிச் செல்லும் போது ஏகாதிபத்தியத்தால் நின்று பிடிக்க முடியாது போய்விடும். அப்போது, ஏகாதிபத்தியம் உட்பட எல்லாப் பிற்போக்காளர்களும் இறுதியில் காகிதப் புலிகளாகி விடுவர் எனத் தோழர் மாஓ சேதுங் கூறியது சாத்தியமாகிவிடும்.
 
 
பின்னூட்டக் கேள்வி : கேணல் கருணா ஜனநாயக அரசியலுக்கு வந்து தேசிய அரசியலில் தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகும் நிலை உலக அரசியலுக்குப் புதிய படிப்பினையும் முன்னுதாரணமும் என்று சொல்கிறார் சுகன். இது குறித்து தங்கள் பார்வை என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : இதில் எந்தவிதமான படிப்பினையையும் முன்னுதாரணத்தையும் காண முடியவில்லை. அதேவிதமாக ஆயுதம் தூக்கி நின்றவர்கள் ஏற்கனவே அரசாங்கங்களுடன் இணைந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் வருகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தும் கிழக்கில் இருந்தும் கருணா பதவி பெற்றிருப்பது தான் ஒரே வேறுபாடாகும். கடந்த காலங்களில் பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளில் இருந்து அவ்வப்போது அமைச்சுப் பதவிகளில் அதன் கட்சிகளில் அங்கம் பெற்று வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவரே கருணாவாவார். இதனால் தேசிய இனப் பிரச்சினையையும் பேரினவாத ஒடுக்குமுறையையும் எதிர்நோக்கி நிற்கும் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்காது. அத்தகைய நிலைப்பாடு, தனிமனித ஈடேற்றத்திற்கும் சலுகைகளுக்கும் உதவக் கூடும். அதனை ஆளும் வர்க்கம் நன்கு பயன்படுத்திக் கொள்ளவே செய்யும்.
 
 
பின்னூட்டக் கேள்வி  : “புலிகளின் அரசியல் தோல்வி, ஆசிய நாடுகளில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாளி வர்க்கம் நாடு தழுவிய வகையில் மீண்டும் இணைவதற்கு கிடைத்த வாய்ப்பு” எனத் தன்னை இடதுசாரியாகக் காட்டி வரும் தமிழரசன் கூறுகிறார். இது குறித்து தங்கள் பார்வை என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : இலங்கையில் புலிகள் இயக்கம் தோல்வி கண்டுள்ளமை மேற்குலக நாடுகளுக்கு கவலை தரக்கூடியதாக உள்ளதே தவிர, ஆசிய நாடுகளுக்கு கிடைத்த வெற்றி எனக் கொள்ள முடியாது. ஏனெனில் மேற்குலகம் திரை மறைவில் இருந்தே புலிகளுக்கான ஆதரவை வழங்கி வந்தது.  அதே வேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் போதியளவிற்கு ஆதரவைக் கொடுத்தும் வந்தது. உலக மேலாதிக்கத்திற்கான நிலையில் அமெரிக்காவிற்கும் பிராந்திய மேலாதிக்கத்திற்கான நிலையில் இந்தியாவிற்கும் இடையிலான மறைமுகப் பொருளாதார அரசியல் ராணுவப் போட்டியில் புலிகளின் தோல்வி அமெரிக்க மேற்குலகிற்கு இலங்கையைப் பொறுத்து ஒரு பின்னடைவு மட்டுமே. அதே வேளை இந்தியா இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதில் வெற்றி நிலையைப் பெற்றுள்ளது. இதனை வைத்து இலங்கையில் தொழிலாளி வர்க்கம் மீண்டும் ஒன்றிணைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று கூறுவது மேலோட்டமானதேயாகும்.
 
இலங்கையில் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு வேட்டு வைத்த காரணிகள் பலவுள்ளன.  அதில் பிரதானமானது பேரினவாத முதலாளித்துவ ஒடுக்குமுறையாகும். அதனைத் தவறான நிலைப்பாட்டிலிருந்து குறுந் தமிழ்த் தேசியவாதமாக முன்னெடுத்த சகலரும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் குலைத்தவர்கள் தான். ஏன், பேரினவாத ஒடுக்குமுறையின் அக்கம்பக்கத் துணையாக இருந்த பாராளுமன்ற இடதுசாரிகளும் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்குக் கேடு விளைத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாத வரை, தேசியவாதத்தை மூலதனமாகக் கொண்டுள்ள அனைத்து உயர் வர்க்க சக்திகளும் தோற்கடிக்கப்படாத வரை, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனைப் புலிகளின் தோல்வியால் மட்டும் மீட்டுவிடமுடியும் என்பது யதார்த்தத்தை மீறிய கற்பனை மட்டுமே.
 
 பின்னூட்டக் கேள்வி : இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா ஐ.நா.வில் வாக்களித்தது குறித்து, அதன் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவாதமானது எனத் தமிழ்த் தேசியவாதிகள் விமர்சனம் முன்வைக்கிறார்கள். இது குறித்து உங்கள் பதில் என்ன? அதே வேளை, கியூபாப் புரட்சியின் ஆதரவாளரான பிரஞ்சு மாக்சியர் ரெஜி ரெப்ரே “இனித், தேசியத்துடன் இணையாத சோசலிஷம் உயிர்வாழ முடியாது”  எனக் குறிப்பிட்டதை முன்னிலைப்படுத்தி தேசியவாதத்தின் அவசியம் பற்றிப் பேசப்படுவது பற்றிக் கூறுங்கள்.
 
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : கியூபா சோஷலிச நாடாகிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் பின்தங்கிய நாடாகவே இருந்து வருகிறது. அதே வேளை, ஏகாதிபத்திய நலகொலனித்துவப் பிடிக்குள் இருந்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் ஏகாதிபத்திய உள்நோக்கங்களுக்கு உதவும் வகையில் சர்வதேச அரங்கில் கியூபா எந்தவொரு நிலைப்பாட்டையும் வகிக்க முடியாது என்பது சரியானதேயாகும்.
 
 இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அமெரிக்க மேற்குலகம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் நோக்கம் உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதேயாகும். எனவே கியூபா இலங்கைக்கு ஆதரவாக நின்றமை அமெரிக்க மேற்குலக உள்நோக்கங்களை முறியடிக்கும் வகையிலேயேயாகும். தமிழ்த் தேசியவாதிகள் எப்போதும் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டுடனேயே இருந்து வந்துள்ளனர் . அந்த வகையில் கியூபா பற்றிய அவர்களது விமர்சனம் அர்த்தமற்றதாகும்.
 
அடுத்து “இனித், தேசியத்துடன் இணையாத சோசலிஷம் உயிர்வாழ முடியாது” என்ற ரெஜி ரெப்ரேயின் கூற்று எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். சோஷலிசத்துடன் இணைந்த தேசியம் தான் உயிர் வாழ்ந்துள்ளதே தவிரத், தேசியத்துடன் இணைந்த சோஷலிசம் இறந்து போனதையே வரலாறு கண்டுள்ளது. கியூபாவின் தேசியம் சோசலிசத்துடன் இணைந்து கொண்டதாலேயே இன்றுவரை உயர்வாழ்வதுடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோசலிசமாக விருத்தி பெற்றும் கொண்டது. அதன் பாதையில் வெனிசுவேலா முதல் தென்னமெரிக்க நாடுகள் பலவும் பயணித்து வருவதையும் காணமுடியும். முன்பு கிழக்குலகில் சீனாவிலும் வியட்நாம், கொரியா போன்ற நாடுகளிலும் தேசியம் சோசலிசத்துடன் இணைந்தே வெற்றி பெற்று உயிர் வாழ்ந்தமை வரலாற்று உண்மையாகும். எனவே தேசியம் உயிர்வாழ்வதற்கு ஏகாதிபத்தியமா அல்லது மாக்சிசமும் சோசலிசமுமா தேவை என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் தீர்மானிக்கட்டும்.
 
 பின்னூட்டக் கேள்வி : “ஃபிடல் காஸ்ரோ அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை…. ஃபிடல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்”; என்ற வாதம் பற்றிச் சர்வதேசியவாதியான உங்களின் மறுமொழி என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல் : ஒரு நாட்டினதும் கட்சியினதும் தலைவர் முதலில் தனது நாட்டினதும் மக்களினதும் நலன்களில் இருந்து தான் எதனையும் தொடங்க வேண்டும் என்பது சரியானதேயாகும். அதே வேளை, அத்தகைய நிலைப்பாடு உலக மக்களின் நலன்கள் தேவைகளுக்கு உகந்ததாகவும் இருப்பது அவசியம். அந்த வகையில் ஃபிடல் காஸ்ரோ தனது நாட்டு நலன்களுக்காக மட்டுமன்றி உலக மக்களின் நலன்களுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்துள்ளார். அவரதும் கியூபாவினதும் நிலைப்பாடு, உலகின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் பக்கமே இருந்து வருகின்றது. ஃபிடலின் எழுத்துக்களை உரைகளை ஆழமாகவும் ஆர்வத்துடனும் படிப்போருக்கும் அவதானிப்போருக்கும் அவை நன்கு புரியக் கூடியதாகும்.
 
 இது அவரவர் கொண்டுள்ள உலக நோக்கின் பாற்பட்டதேயாகும். மாக்சிச உலக நோக்குடைய ஒருவரால் வர்க்கப் போராட்ட அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகித் தெளிவான முடிவிற்கு வரமுடிகிறது. அவ்வாறு இல்லாதவர்கள் பழைமைவாத நிலவுடைமை வழிவந்த கருத்தியற் சிந்தனைகளிலான உலக நோக்கின் அடிப்படையில் விடயங்களை அணுகி நிற்க நேர்கிறது.  இவ்விரு உலக நோக்குக்களினதும் வழியாகவே ஒருவர் சர்வதேசிய வாதியாக இருப்பதும் மற்றவர் தேசியவாதியாக அதற்கும் அப்பால் குறுந்தேசிய வாதியாக நின்று விடயங்களை அணுகுவதும் நிகழ்கிறது. இதனையே சுகன், யசீந்திரா என்போர் மட்டுமன்றி ஏனையோரின் உரையாடல்களிலும் காணமுடியும். இத்தகையவர்கள் எந்த உலக நோக்கின் அடிப்படையிற் புதிய சிந்தனைகள் தமக்குத் தேவை என்று கூறுகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வியாகும்.

16 thoughts on “இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..”

 1. மிகுந்த பொறுப்புணர்வுடன் எமது கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு தோழர் செந்தில்வேல் அவர்களுக்கு எனது நன்றிகள். இனியொருவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் சூழலில் கருத்துக்களும் அதற்கான எதிர்வினைகளும் சுதந்திரமாக வருவது கண்டு மகிழ்ச்சி. கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ பழக்கப்படாத தமிழ் அரசியல் சூழலில் இவ்வாறான ஊடாட்ட செயற்பாடுகளை மிகுந்த பயன் உள்ளவை . இவை தொடர வேண்டும் என்பதே என் விருப்பு. கருத்துப் பரிமாற்றத்தை தொடரும் விதமாக சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் பதில் தருவார் தோழர் செந்தில்வேல் என்ற நம்பிகையோடு.

  1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று சொல்லப்படுகிறதே இது தேவையா. இதன் ஆபத்துகள் என்ன புலம்பெயர் தமிழ் மக்கள் செய்ய வேண்டியவை என்ன?

  2. TamilNet சொல்கிறது “It is with sadness most of the Eezham Tamils look at a few Marxists among them, especially of the former ‘Peking Wing’, who denounce separate nationalism for Eezham Tamils. It is hard to understand that if national liberation of Eezham Tamils oppressed on ethnic grounds and ‘Eezham’ as a political unit is not acceptable to them. While viewing Tamil national struggle as one such serving imperialism, they practically serve the very imperialism by weakening the struggle.” இதற்கு உங்கள் பதில் என்ன ?

  3. வட்டுகோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தான் தமிழ் மக்களுக்கு தீர்வு என்று தமிழ் தேசியவாதிகள் அடம் பிடிக்கிறார்களே இது சாத்தியமா?

  4. இன்று எமக்கு தேவை ஒரு அடிப்படை வேலைதிட்டம் அதை எப்படி உருவாக்குவது. இலங்கையில் இருக்கும் நீங்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கிறீர்களா, அவை பற்றியும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டுவதன் சாத்தியம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்?

  5. நீங்கள் சார்ந்து இருக்கும் புதிய ஜனநாயகக் கட்சி பற்றி இப்போது தான் நாம் கேள்விப்படுகிறோம். எனவே உங்கள் கட்சி பற்றியும் உங்களது சாதனைகள் வேலைதிட்டங்கள் பற்றியும் சொல்லுங்கள்?

  6. நீங்கள் ஈழத்தில் சாதி ஒழிப்பு போரில் பங்கு பற்றி இருக்கிறீர்கள். தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் சாதியை இலங்கையில் ஒழித்து இருக்கிறதா, ஈழத்து தலித்தியம் என்றெல்லாம் பேசுகிறார்கள், இவ்வாறு சொல்வது சரியா. ஈழத்து சாதி முரண்பாட்டை தலித்தியம் என்று அழைக்க முடியுமா?

  7. “தேசியம் உயிர்வாழ்வதற்கு ஏகாதிபத்தியமா அல்லது மாக்சிசமும் சோசலிசமுமா தேவை என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் தீர்மானிக்கட்டும்” என்று சொல்கிறீர்கள். தேசியத்தை தமிழ்த் தேசியவாதிகளின் கைகளில் விட்டு விடுவது ஆபத்தானது என்று நீங்கள் நினைக்கவில்லையா. இன்னுமும் தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் மக்களுக்கு பயன் தரக் கூடியவர்கள் என்று கருதுவது தவறு இல்லையா?

 2. தோழமையோடு யாதவனுக்கு

  தோழர் சி.கா.செந்திவேல் அங்கம் வகிக்கின்ற புதிய ஜனநாயகக் கட்சி தொடர்பான மேலதிக விபரங்களை இக் கட்சியின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு சென்றால் அறிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.
  தோழமையோடு

  துடைப்பான்.

  http://www.ndpsl.org/

 3. கடந்த 60 வருட கால இடதுசாரிகளின் – தொடர்ச்சியான -போராட்டங்களும் தோல்வியையே கண்டுள்ளன. அதிக மேதாவித்தனம் இனித் தேவையில்லை. யதார்த்தமும். கடந்த காலத்தவறுகளின் இதய சுத்தியான திருத்தங்களுமே, இன்று மக்களுக்குத் தேவை.- செய்வீர்களா? தமிழ் மக்கள் நினைவுலகில் வாழ்ந்தவர்கள் என்பதை எந்தக் கமியூனிட்டும்? மறக்கவேண்டாம்.

 4. நன்றி துடைப்பான்.

  நீங்கள் சொன்ன இணையத்தளத்திற்கு சென்று இருக்கிறேன். மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளும் முகமாகவே அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

  சுதேகு,

  “கடந்த 60 வருட கால இடதுசாரிகளின் – தொடர்ச்சியான -போராட்டங்களும் தோல்வியையே கண்டுள்ளன” என்று ஒரு பெரிய பொய்யை தூக்கிப் போடாதீர்கள். இது பூசணிக் காயை சோற்றுக்குள் மறைக்கும் செயல் போன்றது. தமிழ் தேசியவாதிகளுக்கு கம்யுனிச எதிர்ப்பே பிரதானம், அதையே நீங்களும் செய்கிறீர்கள். இதில் வியப்பேதும் இல்லை. 1966 ஒக்ரோபர் எழுச்சி இலங்கைத் தமிழர்களின் சாதிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு புரட்சிகர எழுச்சியாகும். இதை செய்தவர்கள் இடதுசாரிகளே. அன்று கூட தமிழ்த் தேசியவாதத்தின் பாராளுமன்றத் தலைமைகள் இவ் வெகுஜனப் போராட்டங்களை துளியளவும் ஆதரிக்கவில்லை.

  “தமிழ் மக்கள் நினைவுலகில் வாழ்ந்தவர்கள்” என்று சொல்கிறீர்களே, தமிழ் மக்களை தனி நாட்டு கனவில் தள்ளி விட்டது யார்? இத்தகைய ஒரு பாரிய மனிதப் பேரவலத்துக்கு மக்களை கொண்டு போனது யார்? இன்று நாடு கடந்த தமிழ் ஈழம் என்று இலங்கையில் வசிக்கும் மிச்ச தமிழ் மக்களையும் காவு கொடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பது யார்? கடந்துவந்த பாதை ஏன் தோல்வியுற்றதென்பதை ஆராயத் தமிழ்த் தேசியவாதிகள் தயாராக இல்லை. உண்மையான இடதுசாரிகள் அதி மேதாவிகள் என்று தம்மை காட்டிக் கொள்பவர்கள் அல்ல. அவ்வாறு காட்ட வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் மக்களோடு நிற்கிறார்கள் மக்களே வரலாற்றின் உந்து சக்தி என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.

  எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. அன்று தமிழ் இடதுசாரிகளை மட்டுமன்றித் தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாத இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே போய் நிற்கின்றன? யாருடைய நிழலை நாடுகின்றன? யாருக்காகப் பணியாற்றுகின்றன? இன்றைய காலத்தின் குரல்கள் இவை.

  எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது?

  1976 ஆம் ஆண்டு தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று ஒரு பகிரங்க விவாதத்தின் போது கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில் “அது எங்கள் இரகசியம்” என்பது தான். அந்த இரகசியமும் சிதம்பர இரகசியம் மாதிரி இல்லாத ஒரு இரகசியமே தான். தருமலிங்கத்தின் பதில் தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர். ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர்.

 5. தங்களின் கருத்துக்கு நன்றி. மாறி மாறி முத்திரை குத்துவதைப் போலத் தெரிகிறது. நாங்கள் எல்லோரும் எம் போக்கில் கடந்து வந்த பாதை சரியென்றே – இன்னும் அதில் தொங்க முயற்சிக்கிறோம் என்று படுகிறது.

  66 களுக்குப் பின் நடந்த தீ.ஒ.வெ போராட்டம் யாராலும் சொச்சைப் படுத்த முடியாது. அதேபோல சிரட்டை போய் – வெட்டுப் போத்தலுக்கு மேல் எந்த விடிவையும் இது தரவில்லை. புத்தூரிலும் -மண்டானிலும் பிற்பட்ட காலங்களில் காத்திரமான பங்களிப்பு இருந்திருக்கவில்லை. புத்தூர் – சங்கானை —– கம்பர்மலை போன்ற இடத்து மக்களும் இவ்வலைக்குள் அள்ளுண்டு போனவர்கள் தானே?

  என்ன – ரசியாவிலும் சீனாவிலும் கட்சிகளுக்குள் பிளவு வந்தால் உடனே இலங்கையிலும் இவர்கள் இரண்டாகி விடுவதையும் தவிர – இலங்கையின் பிரத்தியேகமான நிலமைகளிலிருந்து யாராவது போராட்டத்தை முன்னெடுத்தார்களா? பூசனிக்காயை சோற்றுக்குள் புதைப்பதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மாறாக புதைக்கப்பட்ட பூசனிக்காயை கிளறி எடுக்கவேண்டும் என்றுதான் கோருகிறேன்!

  நான் தேசியவாதிதான். அதற்காக நான் ஏன் கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும். ஓ… கம்யூனிசவாதிகள் தேசிய விடுதலையை முன்னெடுக்க மாட்டார்கள் என்பதுதான் உங்கள் நிலைப்பாடு போலத் தெரிகிறது. ஏனெனில் இது ஒரு சாவான பாவமாகிவிடுமல்லவா?

  தமிழ் மக்களைக் கனவில் தள்ளுவதும் – இன்றய மனிதப் பேரவலத்துக்குள் மக்களைக் கொண்டு போனதும் – ஒரு வர்க்கம்(தரகு முதலாளித்துவம்) தன்னை அதிகார வர்கமாக்கிக் கொள்ள நடந்தவைகள். கம்யூனிசத்தின் வர்க்கப் போராட்டமும் அவ்வாறானதே (வர்க்க அதிகாரத்துக்கானது). வர்க்கங்களின் முரண்பாடுகளால் உருளும் இவ் உலகப் பந்தில் எல்லா வர்க்கங்களும் தம்மை அதிகார வர்க்கமாக்கிக் கொள்ளப் போராடும். இதில் கம்யூனிசப் புத்தகத்தின் உறையாக -கம்யூனிசக் கட்சிகள் – இருந்துவிடக் கூடாது.

  தீ.ஒ.வெ போராட்டம் நடத்தப்பட்ட காலகட்டத்தின் புறச் சூழல்களையும் நாம் மறந்து விட முடியாது. பண்டரநாயக்காவின் எழுச்சியான வரவால்: இலங்கையில் ஆகக் குறைந்தது பொது இடங்களில் சாதி ரீதியான பாகுபடுத்தல் சட்டப்படி குற்றமாகக் கருதி நீக்கப்பட்டது. இதற்கு யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம் செவிசாய்க்க மறுத்த காலகட்டத்தில் தான் இப் போராட்டம் நடந்தது.

  76ல் கூட்டணியினர் (தருமலிங்கம்)ரகசியத்திட்டத்துடன் மக்களை வழிநடத்தினர் உண்மைதான் ஆனால் எந்தக் கம்யூனிசக் கட்சிகளினதும் பகிரங்கத் திட்டங்கள் இந்தளவுக்கு மக்களை வழிநடத்த முடியாமற் போனதற்கான காரனத்தை எந்த மவுனத்துக்குள் தேடுவது?

  இலங்கையில் இயங்கிய கம்யூனிசக் கட்சிகளுக்கு பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தனித்துவமான ஒரு மக்கள் போராட்ட வரலாறு இல்லை என்பது மிகையாகாது.

 6. சுதேகு: யார் யாருக்கு முத்திரை குத்தப் பார்க்கிறார்கள்? யார் தமது போக்கில் கடந்து வந்த பாதை சரியென்று இன்னும் அதில் தொங்க மு யல்கிறார்கள்?

  76ல் கூட்டணியினர் (தருமலிங்கம்) ரகசியத்திட்டத்துடன் மக்களை வழிநடத்தினார் களா? சிரிக்க வைக்கிறீர்கள். அவர்களிடம் ஓரு திட்டமுமே இருக்கவில்லை என்பதையே சண் அம்பலப்படுத்தினார்.

  இலங்கையில் கம்யூனிசக் கட்சிகளுக்கு பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தனித்துவமான மக்கள் போராட்ட வரலாறு இல்லை என்கிற எவருக்கும் தேர்தலைத் தவிர வேறு அரசியலே தெரியாமலிருக்க வேண்டும்.

  சொல்லப்பட்டுள்ள பலதையும் வாசிக்கும் போது இவரது வாதம் வலிந்து கூறப்பட்ட பொய்களாலான வாதம் என்றே தெரிகிறது.

  அறியாதவர்கட்கு அறிவூட்டலாம். நெஞ்சறியப் பொய்யுரைப்பவார்கட்கு?

 7. சிவாவுக்கு:

  1.ஒருவர் மற்றவரை ஒரு வர்க்கமாக முத்திரை குத்துவதன் ஊடாக – மறைமுகமாக தன்னை இன்னொரு வர்க்கமாக தத்துவ விவாதம் புரிவது நீண்ட காலமாக பாவனையில் இருந்துவந்த ஒன்றுதான். இதுவே பல சந்தர்ப்பங்களில் கீழணிகள் மீது – தத்துவ ஒடுக்குமுறையாக – பாவிக்கப்பட்டது.

  கூட்டணியிடம் இரகசியத் திட்டம் இல்லை என்றால் – 1972 மாசியில் 12இல் துரையப்பாவின் வீட்டுக்கு குண்டு வீசியது முதல்,

  1972 பங்குனி 11இல் துரையப்பாவின் மீது கொலை முயற்சி
  1972 05 22 இல் குமாரமரசூரியரையும், அவர்களது பிள்ளைகளையும் கடத்தும் முயற்சி.
  1972 05 27 இல் வட்டுக்கோட்டை (எஸ்.எல்.எவ் )அமைப்பாளர் இராயசுந்தரம் வீட்டின் மீது குண்டுவீச்சு.
  1972 05 28 இல் (எஸ்.எல்.எவ் )அமைப்பாளர் சிவசோதி வீட்டின் மீது குண்டுவீச்சு.
  1972 05 29 இல் (எஸ்.எல்.எவ் ) நல்லூர் எம்பி அருளம்பலத்தின் மீது கொலை முயற்சி
  1972 05 29 விஸ்வநாதன் மீது குண்டு வீச்சு. இவைகள் எல்லாம் யாருடைய திட்டத்தில் நடந்தது?

  எல்லாம் அறிந்தவர்களே! நெஞ்சறிந்த நேர்மையாளர்களே!! சொல்லுங்கள்: இதன் சூத்திரதாரிகள் யார்?

  (இது புதிய புலிகள் தொடங்குவதற்கு முதல் நடந்தது)

  புதிய புலிகளின் முதலாவது கொலை முயற்சி: அருளம்பலத்தின் வலதுகை ஆதரவாளரான நல்லூர் வீசி சியமன் மீதாக அமைந்தது. இதில் அவர் காயங்களுடன் தப்பினார். இக் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதியான உலகநாதனை: புதிய புலிகளின் தலைவர் ‘செட்டி’ இறங்கும் போது சுட்டுவிட்டுச் சென்றார். உலகநாதன் சடலமாகக் காருக்குள் கிடந்தார்.

  இந்தப் புதிய புலிகளின் தலைவர்: கள்ளியங்காட்டுத் தனபாலசிங்கம் ‘செட்டி’ யின் பின்னணி என்ன? எல்லாம் தெரிந்ததாக ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருக்க முடியாது என்ற இயங்கியல் யதார்த்தத்தையே மறுதலிக்கும் சிவாவுக்காக அவர் தெரிந்தவற்றை எழுதவேண்டுமென்ற – அவரின் கருத்துச் சுதந்திரத்துக்காக இவற்றை (72இன் முதல் அரை ஆண்டுடன்) மட்டுப்படுத்துகிறேன்.

  (கூட்டணியினருக்கு திட்டமே இல்லை என்பது ஒரு இயங்கியல் மறுப்பாகும். தரகு முதலாளித்தும் என்பது: ஏகாதிபத்தியங்களின் திட்டத்தில் இயங்குவதாகும்.- இவற்றை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்களா?- இத்திட்டத்தின் இறுதிப் பலி ‘புதியபாதை’ சுந்தரமாகும்.) – இது புலிகளின் ஆதிக்கத்துக்கு முன்-

  2. பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே – (இது தேர்தலாக இருக்கவேண்டிய அவசியமில்லை)இலங்கையில் இயங்கிய கம்யூனிச கட்சிகளுக்கு – ஒரு தனித்துவமான மக்கள் போராட்ட வரலாறு இருக்குமென்றால்: சிவா சொல்லட்டும்! அது சரியான வரலாற்று ஆதாரமாக இருப்பின் நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். இருப்பினும்- ஒரு நெருடலான கேள்வி: இலங்கையில் இயங்கி வந்த ‘இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்’தின் வரலாற்றை -(1970இல் இரண்டாவது தடவையாக தடை செய்யப்பட்டது.) ஏன் இந்தக் கம்யூனிசக் கட்சிகள் தமது வரலாற்றில் மறைத்தார்கள்? (இ.தி.மு.கழகமான இவர்களின் கொள்கையுடன் எனக்கு உடன்பாடில்லை) சிவா இனிச் சொல்லட்டும்…..

  இறுதியாக சிவாவுக்கு:

  நான் நெஞ்சறிந்து பெய்யுரைப்பவனல்ல: வரலாற்றின் யதார்த்தமான பக்கங்களை எந்த ஒழிவு மறைவும் இன்றி- எந்த பக்கசார்புமின்றி- (என்னால் முடிந்தளவு) மக்கள் முன் வைக்கும் ஒரு சாதாரண மனிதன். – என்னால் அறிய முடிந்தவைகளை வைத்து –

  இனி அறிந்தவர்களின் (சிவா) அறிவூட்டலுக்காகக் காத்திருக்கும்…..

  சுதேகு
  071099

 8. சுதேகு அவர்களே: பொய்யானவை வலிந்து இடதுசாரி அரசியல் தெடர்பாகக் கூறப்பட்டவையே.
  வலிந்து காணப்பட்ட சில குற்றங்கள் பற்றி ஏலவே எழுதினேன்.
  கட்டுரை பற்றிய விவாதத்தைத் தொடர்பற்ற திசையில் கொண்டு செல்லும் அக்கறை எனக்கில்லை.

  புதிதாக நீங்கள் கூறுகிற குற்றச் சாட்டுக்களுக்கும் மாக்சிச லெனினிசவாதிகட்கும் ஓரு தொடர்புமில்லை.
  எல்லாத் தமிழ்த் தேசியவாத இயக்கங்களும் ஓரேவிதமான தவறான பாதையிலே தான் போயின.
  புலிகளின் ஜனநாயகமின்மையை மற்றவர்களது ஜனநாயகமின்மை நியாயப்படுத்தாது.
  எனவே தான் புதிய சிந்தனை தேவைப்படுகிறது.
  அதையே தான் தோழர் செந்திவேல் விளக்கப் பார்க்கிறார்.

  தமிழ்த் தேசியவாதத்தின் அவலத்திலிருந்து தமிழா; மீள்வதற்கான வழி தான் இன்னைய தேவை.

 9. சரி சிவா அவர்களே,

  தவறுகள் என்பது உள்ளங்கையில் இருந்தாலும் திருத்தப்படத்தான் வேண்டும் என்பதைத் தொட்டே இதை எழுதினேன். பரிசுத்தமான மனிதர்களும், எந்தத் தவறுகளுமே ஏற்படுத்தாத இடதுசாரிகளும், கட்சிகளும் – இயங்கியன இயங்க முடியுமென்பது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது.

  வரலாற்றை சரிவர அறிய விரும்புபவன் (நான்)
  முட்டாளாக இருக்க முடியாது. நான் பிலாத்துவைப் போல கைகழுவும் பின்னூட்டங்களைத் தொடரவும் விருப்பமில்லை.

  சுதேகு
  081009

 10. //கடந்த 60 வருட கால இடதுசாரிகளின் – தொடர்ச்சியான -போராட்டங்களும் தோல்வியையே கண்டுள்ளன. அதிக மேதாவித்தனம் இனித் தேவையில்லை. யதார்த்தமும். கடந்த காலத்தவறுகளின் இதய சுத்தியான திருத்தங்களுமே, இன்று மக்களுக்குத் தேவை.- செய்வீர்களா? //
  கடந்த காலம் குறித்த விமர்சனத்தை முன்வைக்கக் கோருவது ஆரோக்கியமானதே!
  இதுவே எதிர்காலத்தை ச் செழுமைப் படுத்தும்

 11. குரு, சுதேகு,

  அது ஏன் இடதுசாரிகள் மீதான விமர்சனத்தை மட்டும் முன்வைக்கக் கோருகிறீர்கள்? இன்று விமர்சனம் மட்டுமல்ல சுயவிமர்சனமும் தேவைப்படுவது தமிழ்த்தேசியவாதத்திற்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்குமே.

  அதை முதலில் கோருங்கள்… தமிழ்த்தேசியவாதிகள் சுயவிமர்சனம் செய்யத் தயாரா? இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பேரவலத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்கத் தயாரா? மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களில் அல்லல்படும்போது அவர்கள் மீது எவ்வித அக்கறையோ கருணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் கூடாரம் தேர்தல் பிரசாரம் செய்தது யார்? இடதுசாரிகளா…. இன்றுவரை பாரளமன்றக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டு அகதிகளை போய் பார்க்கவில்லை ஆனால் முகாம்களுக்கு அண்மையில் தேர்தல் பிரசாரம் செய்தது யார்?

  பரிசுத்தமான மனிதர்கள் பற்றி தோழர் செந்திவேலோ பின்னூட்டமிட்ட சிவாவோ சொல்லவில்லை. தகவல்களை திரிக்காதீர்கள்.

  வரலாற்றை அறிய ஆசைப்படுபவர்களுக்கு உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உண்மைகள் கசப்பானவையும் கூட, அதை திறந்த மனதுடன் ஏற்கத் தயாரில்லாதவர்கள் தான் தங்கள் வாதங்கள் பிழையானவை என நிறுவப்படும் போது பின்னூட்டமிடமாட்டோம் என அறிவிக்கிறார்கள். இயலாமையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதன் வெளிப்பாடாகவே இதைக் காண முடியும்.

 12. நண்பருக்கு,

  எது உண்மை? எது பொய்? எங்கே தேடுவது?

  “இன்று விமர்சனம் மட்டுமல்ல சுயவிமர்சனமும் தேவைப்படுவது தமிழ்த்தேசியவாதத்திற்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்குமே.”

  இந்த யுத்தத்தில் எல்லாத் தரப்பினரும் – தேசியவாதிகளையும் – அழித்தனர். இப்போ இறுதி அழிவுக்குத் தேசியவாதிகள் மட்டும்தான் பொறுப்பென்று கூறுவது வரலாற்றுத் தவறாகும். இதுதான் கட்டுரையின் சாரமாகவும் இருக்கிறது.

  புலிகளைத் தேசியவாதிகள் என்று வரையறுத்த அனைத்து இடதுசாரிகளும் தம்மை சுயவிமர்சனம் செய்யத் தேவை இல்லையா? என்பது தம்மை ஒருவித்தில் இடதுசாரிகள் -கம்யூனிஸ்டுகள் – என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் தந்திரம் தான்.

  புலிகளின் 2002 பேச்சு வார்த்தைக் காலத்திலும் – அதற்கு முன்னான புலிகளின் அரசு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்திய காலத்தில் இவர்கள் புலிகளை எவ்வாறு விமர்சனம் செய்தனர். புலிகளின் சயனைட் கலாச்சாரத்துக்கே வக்காலத்து வாங்கிய இடதுசாரி நன்பர்கள் இன்று வரலாற்றுப் போர்வையை இழுத்து மூடுவது எதற்கு.

  தெளிவாகவே சொல்கிறோன்:

  வர்க்கப் போராட்டத்தில் கையை நனைக்காத எவரும் கம்யூனிஸ்ட் அல்ல. இதை நான் சொல்ல வில்லை. மாக்சிச ஆசான்களே சொல்லியிருக்கிறார்கள்.

  முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்பது முழு வரலாற்றுக்கும் தான்! இதில் பாத்திரங்களாக இருந்த அனைவரும் விமர்சனத்துக்கும் – சுயவிமர்சனத்துக்கும் அப்பாற் பட்டவர்களல்ல (நானும் உட்பட).

  யார் தமிழ் தேசியவாதிகள்? தரகு முதலாளிகளிடம் தமிழ் தேசியம் பற்றிய விமர்சனத்தைக் கோருவதா? குறைந்த பட்சம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தயாரற்ற -உள் ஊர் நிலப்பிரபுத்துவத்தை வீழ்தத் தயாரற்ற எவரும் தேசியவாதிகளும் அல்ல: கம்யுனிஸ்டுக்களும் அல்ல.

  கம்யூனிஸ்டுக்கள் தம்மை நடைமுறையில்தான் உரசிக் காட்டவேண்டுமே ஒழிய – பனர்களுக்குக் கீழ் – இருந்தல்ல. இது எல்லா உலக வரலாற்றுக்கும் பொருந்தும்.

  செந்தில்வேலுக்கும் சிவாவுக்கும் நான் -பரிசுத்தமானவர்கள்- என்று பதிலளிக்கவில்லை. எல்லாம் தேசியவாதிகள் செயலென்று பொறுப்பற்றுப் பேசும் அனைவருக்கும் தான். நான் கூறியவற்றுக்கான ஆதாரங்களை இணையத் தளத்திலேயே வரலாற்று ஆதாரங்களாகத் தேடமுடியும்.
  இவைகள் கற்பனைகளும் அல்ல கட்டுக்கதைகளுமல்ல

  சுதேகு
  081009

 13. இணையத்தள த் தகவல்கள் ஆதார பூர்வமான உண்மைகளின் அடிப்படையிலானவையல்ல.

  இது வரை இணையத்ததயங்களில் தமிழ்த் தெசியவாதிகள் தமிழரின் வரவாற்றையும் இடதுசாரி இயக்க வரலாற்றையும் பொய்மைப் படுத்தியே வழங்கியுள்ளனர். திருவள்ளுவா; இதையெல்லாம் யோசித்துத் தான் சொன்னாரோ தெரியாது:
  எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் கண்பதறிவு
  என்று.

  நண்பர் சுதேகு சில பயனுள்ள நம்பகமான வரலாற்று நூல்களை முதலில் பார்த்துப் பயனடைய வேண்டும்.
  தோழர் செந்திவேல் எழுதிய இ. இடதுகாரி இயக்கத்தின் 50 ஆண்டு வரலாறு ஒரு நல்ல தொடக்கப் புள்ளி.
  அதிலே செல்லப்பட்டவை ஐயத்துக்கு இடமானவை என்றால் மாற்றுத் தகவல்களைத் தரலாம்.

  அதை விடவு ம் புதிய பூமியில் இரண்டு நல்ல வரலாற்றுத் தொடர்கள் வருகின்றன. (இணையத்தளத்திலும் பார்க்கலாம்).
  தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். இடதுசாரிகள் மாற்றுக் கருத்துக்களுக்கு அஞ்சுவதில்லை.
  விவாதங்களைப் பயனுள்ள முறையில் முன்னெடுக்க விடாமல் சம்மந்தா சம்மந்தாஷமற்றவற்றைப் போட்டுக் குழப்புவது நல்லதல்ல.

  தோழர் செந்திவேலின் நேர்காணவில் சொல்லப்பட்டவை பற்றிப் பயனுள்ள விவாதம் நடத்துவது கடினமல்ல.
  இது விவாதத் திறமை பற்றிய போட்டிக் களமுமல்ல.

  இணையத்தள த்தை நம்மாற் பயனுறப் பாவிக்க இயல வேண்டும்.

 14. சிவாவின், கருத்துக்களுக்கு நன்றி:

  தாங்கள் சுட்டிக்காட்டிய வரலாற்றுப் புத்தகமோ, அதன் ஆசிரியரோ, அவர் சார்ந்த கட்சிப் பத்திரிகையோ, அல்லது அக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த கிராமமோ – எனக்குப் புதியவை அல்ல.

  தமிழர்களால் உருவாக்கப்பட்ட (யாழ்) வெறும் இன முரண்பாட்டின் அடிப்படையிலான வரலாற்றை என்னால் இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும். பிரஞ்சை பூர்வமாக தேசிய உணர்வுகளை வளர்த்தெடுக்க, அதனூடான சர்வதேசியத்தை கட்டியமைக்க முடியாமற் போன வரலாற்றுத் தவறுகளையும் என்னால் முடிந்தளவு -புரிந்து கொள்ளவும் முடிகிறது.

  ஆனாலும் சமூகமாற்ற சக்திகளின் முன்னெடுப்புக்கள் தோல்வியையே சந்தித்தன என்பதை சுட்டிக்காட்டவே பின்னூட்டமிட்டேன். தொடர்ந்தவர்களின் பின்னூட்டம் சம்மந்தமில்லாமல் இருந்தது. இன முரண்பாட்டையும், தேசிய இனமுரண்பாட்டையும் சரிவர பிரித்தறிய முடியாத ஒருவருக்கு: தேசியவாதியை சரியாக அடையாளம் காணமுடியாது!

  இதுவே சம்மந்தம் சம்மந்தமில்லாத விவாதமாக இருக்கிறது. இருப்பினும் புலிகள் தொடர்பான கடந்தகால இடதுசாரிகளின் கருத்துரைப்புக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தாமல், மீண்டும் முன்னேற முடியாது. ஓர் அடிமைத் தேசிய இனத்தின் மிக மோசமான அவலநிலையில் இருந்து, இலகுவான அக்கியத்தைச் சாதிக்கவும் முடியாது. தமிழீழம் கனவு என்பது இன்று யதார்தமானது. வெறும் புலிகளின் அழிவில் இருந்து அக்கியம்தான் சாத்தியம் என்பதும் அதுபோன்றதே!

  பி.கு இலங்கையின் பிரத்தியேகமான சமூக வர்க்க ஆய்வுகள் இல்லாமல். நாடு கடந்த சோசலிசமும் மாக்சிசமும் (இவை புறநிலை அறிவு மட்டுமே) நாடுகடந்த தமிழீழமும் இரண்டும் ஒன்றுதான்!

  சுதேகு
  101009

 15. சுதேகுவுடன் உடன்படக்கூடிய ஒன்றுள்ளது பற்றி மகிழ்ச்சி:
  “இலங்கையின் பிரத்தியேகமான சமூக வர்க்க ஆய்வுகள் இல்லாமல். நாடு கடந்த சோசலிசமும் மாக்சிசமும் (இவை புறநிலை அறிவு மட்டுமே) நாடுகடந்த தமிழீழமும் இரண்டும் ஒன்றுதான்!”

  இலங்கையின் மார்க்சிய லெனினியர்கள் என்றும் நாடு கடந்த சோசலிசத்துக்காகத் தமது உடனடியான போராட்டத்தை அமைத்துக் கொள்ளவில்லை.
  புரட்சியின் உடனடியான கட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சி எனவே கொள்கிறார்கள். பிரதன முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்றே கடந்த 20 ஆண்டுகட்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள்.

  நாடுகடந்த தமிழீழம் எனடபது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தமிழீழம் போல ஓரு ஏமாற்றே என உணா;த்தியது மெச்சத்தக்கது.

  நாடு கடந்த சோசலிசப் புரட்சி பேசுவோர் புலத்திற் சிலர் உள்ளனர். மார்க்சியர் பற்றி எல்லாமும் அறிந்க நண்பர் அவர்களையும் அறியக் கூடும்.

Comments are closed.