இனவாதத்தின் முதிர்ச்சியை புடம்போட்டு காட்டும் இராணுவத் தளபதியின் கருத்து:டி.வி. சென்னன்.

30.09.2008.

இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானதென்ற நாட்டின் இராணுவத் தளபதியின் கூற்று வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மேலும், இக்கூற்றானது இனவாதத்தின் முதிர்ச்சி நிலையினை புடம்போட்டுக் காட்டுகின்றது’.

இவ்வாறு, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி. சென்னன், விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“”எமது நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, கனடாவின் “”நெஷனல் போஸ்ட்’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் சிறுபான்மையினரும் எம்முடன் வாழலாமென்றும் கூறியிருக்கின்றார். பொறுப்பு வாய்ந்த பதவியொன்றில் உள்ள இராணுவத் தளபதி இவ்வாறு கூறியிருப்பதை சிறுபான்மை சமூகத்தினரால், எவ்வகையிலும் ஜீரணிக்க முடியாது.

இந்நாட்டின் சுதந்திரத்திற்கு சிங்களத் தலைமைகள் மட்டும் பாடுபடவில்லை. அவர்களுடன் தமிழ், முஸ்லிம் தலைமைகளும் ஒன்றிணைந்து தத்தமது பூரண பங்களிப்புக்களை வழங்கியே இந்நாட்டிற்கான சுதந்திரம் பெறப்பட்டது. அத்துடன், இந்நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களைவிட, சிறுபான்மை மக்களே ஆகக் கூடுதலான பங்களிப்பை ஆரம்பத்திலிருந்து வழங்கி வருகின்றனர்.

இந்நாட்டின் அந்நிய செலாவணியை நிரந்தரமாகவும், ஆகக் கூடுதலாகவும், உறுதியாகவும் பெற்றுத்தந்து கொண்டிருப்பவர்கள், இந்திய வம்சாவளியினரான தமிழ் தோட்டத் தொழிலாளர்களே கடின உழைப்பாளிகளான அவர்கள் இந்நாட்டில் ஆகக் குறைந்த தினக்கூலியையே பெற்றும் வருகின்றனர். இந்நாட்டின் ஆட்சி நீடிப்பிற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய வம்சாவளித் தலைமைகளே வழிவகுத்திருந்தமையையும், இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மேலும், இந்நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் தமிழ்ச் சமூகத்தினரே என்பதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், எமது நாட்டின் இராணுவத் தளபதி பொறுப்பற்ற வகையில், சிறுபான்மை சமூகத்தினர் மனம் புண்படும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். ஆனால், அவரினால் கூறப்பட்டவைகள் பேரினவாதிகளுக்கு மகிழ்ச்சியானதாக இருக்குமென்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.

இதற்கு முன், நாட்டின் தலைவர் ஒருவர் மரத்தில் படரும் செடி, கொடிகளைப் போன்றவர்களே தமிழர்கள் என்று மிகமிக ஆவேசத்துடன் கூறி, தமிழ் மக்களை வேதனைப்பட வைத்திருக்கின்றார். அவரது கூற்றுக்களின் வடு மறையுமுன்பே, பொறுப்புமிக்க பதவியிலிருந்து வரும் இராணுவத் தளபதி இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமெனக் கூறியிருக்கின்றார்.

அத்துடன், சிறுபான்மையினரும் இந்நாட்டில் வாழலாமென்று, இராணுவத் தளபதி சிறுபான்மையினருக்கு சலுகையும் வழங்கியுள்ளார். இந்நாட்டில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதையும் சர்வதேச சமூகத்திற்கு மீண்டுமொரு முறை தெளிவுபடுத்தும் வகையிலேயே இராணுவத் தளபதியின் கூற்று அமைந்துள்ளது. மேலும், அவர் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தேவையற்ற விடயங்களுக்கு அச்சமூகத்தினர் முயற்சிக்கக்கூடாது என்றும் சிறுபான்மை சமூகத்தினரை, எச்சரித்துமிருக்கின்றார்.

இராணுவத் தளபதியின் இவ் இனவாதக் கூற்றானது, அரசின் ஆசீர்வாதங்களுடனேயே தெரிவிக்கப்பட்டிருக்கலாமென பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

மேலும், இராணுவத் தளபதியின் இக்கூற்றினை, இந்நாட்டின் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தினரும் வன்மையாகக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும். இக் கண்டனக் குரலானது, இனிமேல் எவராலுமே, இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படாத வகையில் அமைய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

One thought on “இனவாதத்தின் முதிர்ச்சியை புடம்போட்டு காட்டும் இராணுவத் தளபதியின் கருத்து:டி.வி. சென்னன்.”

  1. பேரினவாத நாணயத்தின் ஒரு பக்கம்
    சரத்பொன் சேகரா என்றால் மறுபக்கம்
    மகிந்தா ராஜயபக்சாவா?
    எமக்கும் தான் சந்தேகம் வருகிறது.

Comments are closed.