இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை – சுரேஷ் பிரேமச் சந்திரன்.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியா வந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசையும் மாநில முதல்வர் கருணாநிதியையும் சந்தித்து பேசி வருகின்றனர். இப்போது இவர்களின் பேச்சுக்கள் யாவும் இந்தியாவுக்கு ஆதரவானதாக இருக்கிறது. எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று தமிழக மக்களிடம் கோரிக்கை வைக்கவே இவர்கள் வந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக ஊடகம் ஒன்றிர்கு சுரேஷ் வழங்கியுள்ள நேர்காணல். ” இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல், ராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது. தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பதுதான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின்போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர். இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்திரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித் தர முடியும். இதைத்தான் எங்கள் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார். தமிழகத்துக்கு முக்கிய பங்கு: எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும். ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது. இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் .தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

One thought on “இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை – சுரேஷ் பிரேமச் சந்திரன்.”

  1. முதலில்,”தொப்புள் கொடி உறவு”,தமிழ் இனப்பாசம் போன்றவற்றின் அடிப்படையில் “இலங்கைத் தமிழருக்கும்,தமிழ்நாட்டுத்தமிழருக்கும்” உறவுகள் இல்லை.”தேவைக்கேற்ற உறவாகத்தான் இருந்திருக்கிறதே தவிர தேவையான உறவாக இருந்ததில்லை”!.மேலும்..
    சிங்களவர்களுக்கு இருக்கும் தலைவலியே இந்த போலி “உறவுதான்”!.இலங்கைத் தமிழரது பல “உள்நாட்டுப் பிரச்சனைகள்”,போலியாக “தமிழினப் பிரச்சனையாக(சுயநலத்திற்கு)” முன்வைக்கப்படும் போது,அதற்கு,”வினோதமான முறையில்” ஆதரவென்று காட்டுக்கத்தல் கத்துவது(கருணாநிதி பாணி),அதை வைத்து தங்களை சற்றும் மதிக்காத “வெள்ளைக்காரர்களிடம்” “பெட்டிஷன் போட்டு” ஏதாவது பெற நினைப்பது, வழமையாகிவிட்டது!. இப்போது கூட “ரணில்(யு.என்.பி.)” சென்னைக்கு போனால்,தமிழ்தேசிய கூட்டமைப்பும்(சுரேஷ் பிரேமசந்திரன்),சென்னைக்கு வந்துவிடுகிறது.இந்த மாவை சேனாதிராஜா,பேராசிரியர்? க.அன்பழகன் மாதிரி – ஊமை ஊரைக் கெடுக்கும் என்பார்கள்!.
    பிறகு சிங்களவர்களிடம் தனிமையாக பேசும் போது,”மோட்டு தமிழ்நாட்டு இந்தியன்கள்”,நீங்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டிய “பலானதை” கொடுத்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் ஏன் அந்தப் பன்னாடைகளை விட்டு கத்த சொல்கிறோம் என்பார்கள்!.இதை பார்த்து,பர்த்து குழம்பிப் போன சிங்களவர்,அதுதான் “தமிழக கோமாளிகள்” என்கிறார்கள்!.புலம் பெயர் இலங்கைத்தமிழருக்கும்,தமிழ்நாட்டவர்களுக்கும் உறவு வளர(போலி),வளர,அது சிங்களவர்களை வெறுப்பேத்தவே செய்யும்.சிங்களவருக்கு பயித்தியம் பிடித்து போய் இராணுவ சாமியாடினால்,முண்டாவை தட்டிக்கொண்டு,முட்டாள்தனமாக திரிந்து தேசியபதுகாப்பு சட்டத்தில் உள்ளே இருக்கும் “சீமான்தான்” உங்களை எதிர்த்தவன் என்று,”அயோதிதாசனிரின் தெரவாடா புத்தமதத்தின்?” பின்னால் ஒளிந்துக் கொண்டு கையை காட்டி விடலாம் என்று கலைஞர் கருணாநிதியும்,அவரது குடும்பமும் மனப்பால் குடிக்கிறார்கள்!.
    தமிழ் தேசிய கூட்டமைப்பு,குறைந்த பட்சம் தன்னுடைய நலனான,இந்தியாவில் தாங்கள் வாங்கியிருக்கும் சொத்து,கல்வித்துறையில் கிடைக்கும் முதல்வரின் சிபாரிசுடன் தங்கள் உறவினர்களுக்கு சலுகைகள் அடிப்படையில் காய் நகர்த்துகின்றனர்!.கலைஞர் கருணாநிதியும்,சன்டிவி குழுமம்,கலைஞர் டிவி குழுமம் போன்றவற்றிற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் கிடைக்கும் “எக்ஸ்ட்ரா” வருமானத்தின் அடிப்படையில்,இந்த விஷப் பரிட்சையில் இறங்குகிறார்!.
    இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ள அபிவிருத்தி நிதியை கண்காணிக்க இலங்கை அரசு பேச்சாளர் சொல்லுவது போல “சிறப்புத் தூதுவர்” தேவையில்லை!.தமிழக அரசு தன் பங்கிற்கு ஏதாவது நிதி கொடுத்திருந்தால்,அதை கருணா(நிதி),தன்னுடை எம்.பி. கள் மூலமாக பாராளுமன்றத்தில் கணக்கு கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.”தமிழ்” என்பதை வைத்து,பாசத்துடன் உறவு பாராட்டி ஆட்டங்காட்டுங்கள் நமக்கென்ன ஆனால்,பிறகு கட்டுமரமாக இருந்தேன் கழுத்தறுத்து விட்டார்கள்,என்று வசனம் பேசினால்,நாக்கை இழுத்துவைத்து அறுப்பதற்கு தமிழக மக்கள் இப்போதே அனுமதி பெற்றுவிட வேண்டும்!.

Comments are closed.