இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைக்க அரங்கம் தயாராகி வருகிறது.

இலங்கை காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடந்த நாளிலிருந்து  ஒவ்வொரு பெருந்தேசியவாத  அரசாங்கங்களும்  தயாராகி வந்தவாறே இனப்படுகொலை நிகழ்த்தும் இலங்கை அரசும் இப்போது தயாராகிவருகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து பேசவேண்டிய அரசு மௌனமாக உள்ள நிலையில், சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் அரசியல் தீர்வு இப்போது அவசியமற்றது எனக் கூறிவருகிற நிலையில், தமிழர் தரப்பிலிருந்து அரசியல் தீர்வு குறித்துப் பேசப்படுவதனைக் காணமுடிகிறது.
இந்த வகையில் தமிழ் அரசியல் கட்சிகளின் அரங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கத் தயாராகி வருவதாக அதன் செயலாளரும், தேசிய விடுதலை முன்னணியின் தலைவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருப்பதாக “சுடர் ஒளி” செய்தி வெளியிட்டிருக்கிறது. இதே வேளை அரங்கத்தில் த.தே.கூட்டமைப்பினரையும் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்திருந்த போதும் இதுவரை அவ்வாறானதொரு அழைப்பு தமக்கு விடுக்கப்படவில்லை என த.தே.கூ. தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, தீர்வு யோசனைகளை முன்வைக்காமைக்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்காததே காரணம் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாக இந்த தீர்வு யோசனை முன்வைப்பு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
இதற்கிடையில் எமது கவனத்தை ஈர்த்திருக்கிற ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக நடந்த நடந்த கலந்துரையாடலில் நூலகர், நடைபெற்ற சம்பவத்தினை அறிக்கையாக முன்வைத்திருந்தார். பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை விட மேலும் பல மோசமான தகவல்களை அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் அதனைப் படைத்தரப்பினர் மறுத்திருந்ததுடன் பத்திரிகைகளே வேண்டாத செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
இக்கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த டக்ளஸ், நூலகத்தில் கடந்த 23 ஆம் திகதி இடம் பெற்றது ஒரு சிறிய குழப்பமே. இங்குள்ள ஊடகங்கள்தான் அதனை ஊதிப் பெருப்பித்துள்ளன. இங்கு நடந்தது உண்மையாக உணரப்படுமானால் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் மன்னிப்புக் கோருகிறேன்” எனக்கூறியிருக்கிறார்.
ஆயினும் யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கனகரத்தினம் விந்தன், ஊடகங்கள் உண்மையான செய்திகளைத்தான் வெளியிட்டன. அவற்றில் வெளிவந்த தகவல்களை விடக் கூடிய சம்பவங்கள் பொது நூலகத்தில் அன்று நடைபெற்றுள்ளது. ஆகவே ஊடகங்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
தவறிழைத்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒரு வசனத்தைக்கூட இந்தக்கலந்துரையடலில் கலந்து கொண்டவர்கள் கூறவில்லை என அதிருப்தி தெரிவக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் குழப்பம் விளைவித்தார்கள் எனக்கூறிப் பல பல்கலைக்கழக மாணவர்கள் பிணை வழங்கப்படா நிலையில் சிறையில் இடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாழ.பொது நூலகத்தில் நடந்தது மட்டும் சிறு குழப்பம் ! எப்போதோ அருசக்கெதிராக எழுதிய கட்டுரை பாரிய குற்றம். பொது நூலகச் சம்பவம் மட்டும் சிறுகுழப்பம். “நடந்தது உண்மையாக உணரப்படுமானால் … மன்னிப்புக் கோருகிறேன்” என்ற ஒரு வார்ததையுடன் பிரச்சினைக்குத் தீர்வு.
இந்த நிலையில் அரங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைக்கத் தயாராகிறது.
ஆளும் கட்சி வட பகுதியில் தனது கட்சியின் அதிகராத்தினை வலுவுடையதாக்கிக் கொண்டு அதன் மூலம் தீர்வொன்றினை காண முற்பட்டு வருவதனையே நடைபெறும் நிகழ்சி நிரல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரச அமைச்சர்கள் வட பகுதிக்கு விஜயம் செய்து மக்களுக்கான உதவிகைளை வழங்கி வருவது அதிகரித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ – தனது புதிய அல்லது பழைய நண்பர் ரங்காவுடன் அடிக்கடி வன்னிக்குச் செல்வதும் பல வேலைத்திட்டங்களையும், அன்பளிப்புகள் வழங்கி வருவதனையும் காணமுடிகிறது. வட மாகாண சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண சபையினை விட முன்னேற்றகரமான ஒரு நிலையினை அடைந்து விட அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதே வேளை த.தே.கூட்டமைப்பினர் தாம் விரைவில் தயாரித்து வெளியிட உள்ளதாகக் கூறிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசைனையை உடன் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இலங்கை அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடாத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என இந்தியத் தூதுவர் அசோக். காந்தா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியத் தூதுவரின் அழைப்பிற்கிணங்க இந்திய உயர்ஸ்தானிகர் வாசஸ்தலத்திற்குச் சென்ற த.தே.கூட்டமைப்பினரிடம் இக்கருத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பல நாட்களாக அரசிற்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு வரப்பட்டதாயினும் அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இதுவரை மேற்கொள்ளப் பவடவில்லை. மாறாக அரசுடன் இயங்கும் கூட்டரங்கமே தாம் தயாரிக்கவுள்ள அரசியல் தீர்வு யோசனை குறித்து கலந்துரையாட த.தே.கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுப்போம் எனத் தெரிவித்திருந்தது. ஆயினும் அவ்வாறும் இதுவரை நடைபெறவில்லை.