இனப்படுகொலையை ஆதரிக்கும் தென்னாபிரிக்கா

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க அமைச்சர் நிகோனா மாஷாபேன், “மனித உரிமைகள், வறுமை ஒழிப்பு, உலகமயமாதல், ஐ.நா. சீர்திருத்தம் ஆகியவற்றில் தென் ஆப்ரிக்காவின் முக்கிய கூட்டாளியாக சிறிலங்கா உள்ளது” என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஒத்த கருத்துடைய நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டு்ம் என்றும் கூறியிருந்தார்.

தென் ஆப்ரிக்க அமைச்சர் மாஷாபேன் இவ்வாறு கூறியதற்கு தென் ஆப்ரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழர்களை சிறிலங்க அரச படைகள் இனப் படுகொலை செய்ததை மறந்துவிட்டு அந்நாட்டுடன் தென் ஆப்ரிக்க அரசு உறவு கொள்ள முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாற்றிய இண்டாபா சமூக இயக்கத்தின் ராய் ஷெட்டி, இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்குதலிற்கு ஆளாக்கப்பட்டதை மறைத்துவிட்டு அந்நாட்டு அரசுடன் உறவு கொள்ள முயற்சிப்பது தங்களை கோபப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

“சிறிலங்க அரசுடனான உறவிற்குத்தான் தென் ஆப்ரிக்க அரசு முன்னுரிமை அளிக்கிறதே தவிர, தமிழர்களுக்கு சம முக்கியத்துவத்தை தர மறந்துவிட்டது” என்று ஷெட்டி கூறியுள்ளார்.

“இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசிற்கு வலு சேர்க்கும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு இருந்துள்ளது” என்று அரசு வழக்கறிஞர் அபே நாயுடு கூறியுள்ளார்.

“தமிழர்கள் அந்நாட்டு அரச படைகளால் தாக்கப்பட்டபோது மனித உரிமைகள் பற்றியோ, அத்துமீறல்கள் குறித்தோ தென் ஆப்ரிக்க அரசு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை” என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பேச்சாளர் ரிச்சர்ட் கவுண்டர் கூறியுள்ளார்.

மனித உரிமை அமைப்புகளின் கண்டனக் குரல்களுக்கு எந்த ஒரு பதிலையும் இதுவரை தென் ஆப்ரிக்க அரசு அளிக்கவில்லை.