இனநெருக்கடி, மொழிப்பிரச்சினை இலங்கையில் எதுவுமே இல்லை!!!!!

23.09.2008.

இலங்கையில் இன ரீதியான பிளவுகளோ, மொழிப் பிரச்சினையென்றோ எதுவுமில்லையென வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவில் தெரிவித்திருக்கிறார்.

வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் கடந்த 20 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் முன்னிலையில் பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறியிருக்கிறார்.

இலங்கையில் இன பிரிவினைகளோ, மொழிப் பிரச்சினையோ இல்லையென இங்கு சுட்டிக்காட்டியிருக்கும் அவர், உண்மையில் மொழி என்பது, தேசிய ஒன்றுபடுத்தலில் மிகப்பெரிய காரணியாக இருப்பதாகவும், பொலிஸ் உட்பட பொது சேவையை மும்மொழிகளையும் நடைமுறையில் கொண்டதாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உரிய பாதுகாப்பு இல்லாமல் எம்மால் சுதந்திரத்தை அடைய முடியாது. எமது சமூகத்தின் நலனுக்காக அரசாங்கம் நாட்டினதும், மக்களதும் பாதுகாப்புக்கு முன்னுரிமைகளை வழங்கி வருகிறது. எனவே, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் முயற்சிகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் வாழ் இலங்கை மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கமும் அதனது மக்களும் எடுத்துள்ள நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து உலகுக்கு எடுத்துக் காட்டவும் விடுதலைப்புலிகளின் பிரசாரங்களை முறியடிக்கவும் புலம்பெயர் வாழ் இலங்கையர்களுடன் இணைந்து உலகெங்கிலுமுள்ள இலங்கை தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மேலும் தெரிவித்திருக்கிறார்.