இனச்சுத்திகரிபிற்கு தமிழ்ப் பேசும் முஸ்லீம்களும் பலி?

கொழும்பு புறநகர்ப் பகுதியான சிலேவ் அயலன்ட் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். கடந்த ஞாயிறு தர்மசிறி என்ற இராணுவ அதிகாரியின் தலைமையிலான இராணுவ உளவுப் பிரிவினைச் சேர்ந்த குழுவொன்று அங்குள்ள மசூதி ஒன்றிற்கு முன்னறிவுப்பு எதுவுமின்றிச் சென்று விசாரணைகள் நடத்தியிருப்பதானது பெரும் பதட்டத்தையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களின் முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லீம்களின் ஒருபகுதியினரின் வீடுகள் பாதுகாப்பு அமைச்சால் தரைமட்டமாக்கப்பட்டு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மசூதியும் அழிக்கப்படலாமா என்ற பரவலான சந்தேகங்கள் அப்பகுதி முஸ்லீம்கள் மத்தியில் எழுந்துள்ளன. எந்தவகையான முஸ்லீம்கள் அங்கு வருகிறார்கள்? அவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டுப் பணம் கிடைக்கிறதா? என்பன போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன.

இக் கேள்விகள் வெறும் கருத்துக்கணிப்பு ஒன்றிற்காகத் தான் கேட்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர். அத்தோடு மசூதியின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்றும் பேரினவாதத் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியா இது என்ற பரவலான சந்தேகங்கள் எழுந்துள்ளன. மசூதி நிர்வாகம் இது குறித்து எதிர்க்கட்சிகளிடம் முறையிட்டுளது.