இந்திய நெருக்கடியை சமாளிக்க புதிய நடவடிக்கைகள்!

நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

விவசாயக் கடனுக்கு வங்கிகள் ரத்து செய்த தொகைக்காக ரூ. 25 ஆயிரம் கோடி உடனடியாக அளிக்கப்படும் என்றார்.

வங்கிகளின் மூலதனம் வலுவாக உள்ளது. மேலும் கடன் வழங்கிய அளவுக்கு 10 சதவீதம் கூடுதலாக வங்கிகளிடம் இருப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதத்தை 10 சதவீதம் முதல் 12 சதவீதமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரொக்கக் கையிருப்பு 12 சதவீத அளவை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டதன் மூலம் 600 கோடி டாலர் அளவு முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த வரம்பை மேலும் தளர்த்துமாறு இந்திய பங்கு பண பரிமாற்ற மையம் (SEBI) கோரினால் அதை உடனடியாக பரிசீலித்து அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

வேளாண் கடன் தள்ளுபடி செய்த தேசிய வங்கிகளுக்கு ரூ. 7,500 கோடியும் நபார்டு வங்கிக்கு ரூ. 17,500 கோடியும் முதல் கட்டமாக அளிக்கப்படும்.

இந்நிதி அளிக்கப்பட்டதன் மூலம் வங்கிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 1.05 லட்சம் கோடி நிதி கடந்த 15 தினங்களில் கிடைத்துள்ளது. முதலில் ரொக்கக் கையிருப்பு விகிதத்தைக் குறைத்ததன் மூலம் வங்கிகளுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி கிடைத்தது. செவ்வாய்க்கிழமை மேலும் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான அறிக்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் விரைவில் அளிப்பார் என்று சிதம்பரம் கூறினார்.