இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்களிடம் 6.5 டன் மீன்கள் பறிமுதல்!

tn145 இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 68 இலங்கை மீனவர்களிடம் இருந்து 6.5 டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 68 பேரை இந்திய கடலோர காவல் பாதுகாப்பு படையினர் நேற்றுமுன்தினம் பிடித்தனர். அவர்களை காசிமேடு மீன்பிடி போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

பிடிபட்ட இலங்கை மீனவர்களிடம் இருந்து 13 படகுகளும், 6.5 டன் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக மீனவர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘இரண்டு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன்வளத்தை கொள்ளை அடிக்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன்பிடித்து செல்கின்றனர். எப்போதாவதுதான் சிலர் மாட்டிக் கொள்கின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறுகின்றனர்