இந்தியா உதவிக்கு உறுதியளித்துள்ள தருணத்தில்- சீனாவுடன் விசேட உறவுக்கு இலங்கை தீவிர ஆர்வம்.

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சிறப்பானதும் விசேடமானதுமான உறவைக் கட்டியெழுப்ப சீனாவில் தனது இராஜதந்திர பலத்தை கொழும்பு மேலும் வலுப்படுத்த விருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

யுனான் மாகாண உதவி ஆளுநர் காவோ பெங்குடனான சந்திப்பின் போதே போகொல்லாகம இதனைக் கூறியுள்ளார். சீனாவில் தனது இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இலங்கை ஆர்வமாக இருப்பதாக போகொல்லாகம கூறியுள்ளார்.

“சங்காயில் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த வருடம் அக்டோபர் மாதம் செங்குழுவில் மற்றொரு அலுவலகத்தைத் திறப்பதற்கு இலங்கை திட்டமிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட பகுதியில் போருக்குப் பின்னரான மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு சகலவிதமான உதவிகளையும் வழங்குவதாக இந்தியா வாக்குறுதியளித்துள்ள தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாக “இந்துஸ்தான் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே 500 கோடி ரூபா உதவி வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. ரயில்பஸ் சேவை போன்ற சிறிய பல திட்டங்களுக்கு இந்தியா ஏற்கெனவே உதவி வழங்கிவருகிறது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விசேட உறவுகள் பற்றி உதவி ஆளுநருடனான கலந்துரையாடல்களின் போது போகொல்லாகம குறிப்பிட்டிருக்கிறார். “சிறியதொரு நாட்டுக்கும் பெரியதொரு நாட்டுக்கும் இடையிலான விசேட உறவு’ என்று அவர் கூறியுள்ளார். சீனா ஏற்கெனவே அம்பாந்தோட்டையில் துறைமுக நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்துவதற்காக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விமான சேவையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு உதவி ஆளுநர் காவோ பெங்கிடம் போகொல்லாகம வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த நோக்கத்தை வென்றெடுக்க இலங்கை ஆதரவளிக்குமெனவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.