இந்தியா, இலங்கை, மலேசியா புலனாய்வு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை:கே.பி. கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டார்!

    மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பி. கொழும்பிற்கு கொண்டுசென்ற பின்னரே சர்வதேச காவல்துறையினால் கே.பி. கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

வியாழன் நள்ளிரவு கொழும்பு, கட்டுநாயக்க விமானத்திலிருந்து உலங்குவானூர்த்தி மூலம், ஒருவர் மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுசெல்லப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர அவசரமாக தரையிறங்கி, பின்னர் அதேவேகத்தில் அகன்றுசென்ற உலங்குவானூர்த்தியில், கே.பிதான் அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதிசெய்ய
முடியாதுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
எனினும், சர்வதேச காவல்துறை (இனடர்போல்) ஒருவரை கைது செய்தால் எந்த நாட்டில் குறித்த நபர் கைது செய்யப்படுகிறாரோ, அந்த நாட்டில் வைத்தே விசாரணை செய்யப்படுவார் அல்லது வழக்கின் முக்கியத்துவம் கருதி, இண்டர்போல் தலைமையகம் இருக்கும் பிரான்ஸ் நாட்டிற்குக் கொண்டுசெல்லப்படுவார்.

கைது செய்யப்படும் நபர் எந்த நாட்டு அரசால் தேடப்படுகிறாரோ அந்த அரசு உத்தியோகப+ர்வமாக தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரினால், சர்வதேச விதிகளுக்கமைய இண்டர்போல் அவரை ஒப்படைக்கலாம், அல்லது ஒப்படைக்காமலும் போகலாம் தொடர்ந்தும் வைத்திருக்கலாம்.

இந்த நிலையில், கே.பி. சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டாரா அல்லது மலேசியாவில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து இதுவரை உறுதிசெய்ய முடியாமலுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தியா,  மலேசியா, இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை துரிதமாக முடுக்கிவிடப்பட்டது. கே,பி எனப்படும் செல்வராஜா பத்மநாதனை நோக்கி, தாய்லாந்து,மலேசியா , இந்தியாவில் துரிதமாக செயல்பட்ட இந்தக் குழுவினர் கே.பி -க்கு எதிரானவர்களையும் இக்கடத்தலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.
 
   தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளருமான கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், தகவல் திணைக்களம் இதுமேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

பிந்திக் கிடைத்த தகவலின்படி, கைதுசெய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் தற்போது (06) கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக மிகவும் இரகசியமான தகவலொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும், இவர் எப்போது கைதுசெய்யப்பட்டார் என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், கே.பி. சர்வதேசக் காவல்துறையினரால் (இன்டர்பொல்) கைதுசெய்யப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும் ஜூலை 18ம் திகதி செல்வராஜா பத்மநாபன் தாய்லாந்தில் இருந்து மலேசியா சென்று விட்டதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, பத்மநாதன், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்தும் வேறு தொடர்புகளின் ஆதாரங்களின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி,

கடந்த புதன்கிழமை (05) பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘மஜீத் இந்தியா’ என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள ‘ரியூன்”   விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டதாக தெரியவருகிறது.

பிற்பகல் அளவில் – ஜலான் ரொன்கு அப்துல் ரஹ்மான்   வீதியில் இருக்கும் குறிப்பிட்ட அந்த ‘ரியூன்’ விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன் தங்கியிருந்த அறையில் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பின்னர் – பிற்பகல் 2 மணியளவில் – செல்லிடப் பேசி அழைப்பொன்றில் தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற கே.பி. திரும்பவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கைதுசெய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி – செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறையினரின் ஒத்துழைப்புடன் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகவே ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்துடன் மலேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்கில் இவர் தாய்லாந்தில் வைத்துகைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்படுகின்றது என்றும் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், கே.பி, எங்கு, எப்போது, கைதுசெய்யப்பட்டார் என்ற மாறுபட்ட தகவல்களே வெளிவந்துள்ளன.

இதேவேளை, அவர் நேற்றிரவு (06) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மிகவும் இரகசியமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்தத் தகவல்களை எம்மால் இதுவரை முழுமையாக உறுதிசெய்ய முடியாதுள்ளது.