இந்தியாவில் 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை:வந்தனா சிவா

 ஆப்ரிக்க துணைக்கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக  நவதானிய  அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.

ஆனால், மக்கள் தொகை ஆண்டுக்கு 18 மில்லியன் அதிகரிக்கும் அதே நேரத்தில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் போதிய அளவு உணவு கிடைப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு கூறி வருகிறது.

இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் உள்ளதாக வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.

மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு, 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்று வந்தனா சுட்டிக்காட்டினார்.

மேலும், உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதாகவும், விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களை வேறுபயன்பாடுகளுக்குக் கொடுத்து வருவதும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில் தங்கள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவித்தார். மேலும் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90  % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்று தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

 

2 thoughts on “இந்தியாவில் 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை:வந்தனா சிவா”

  1. எனக்கு வந்தனா சிவா தொடர்பு எண் வேண்டும்.
    முழு விவரம் எழுதவேண்டும்.

  2. விழிப்புணர்வூட்டும் நல்லதொரு பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Comments are closed.